திங்கள், 9 ஏப்ரல், 2018

ஐபிஎல் தடை ... கொடிகள், பதாகைகள், தொலைநோக்கி, ரேடியோ, லேப்டாப், .......தண்ணீர் பாட்டில் தடை தடை தடை .. தேவையா?

இப்படிபட்ட அவமானம் நமது ரசிகர்களுக்கு தேவையா?
பேனர்கள், கொடிகள், பதாகைகள், தொலைநோக்கி, ரேடியோ, லேப்டாப், கண்ணாடிகள் ,செல்பேசி, கேமரா, இசைக்கருவிகள், டிஜிட்டல் டைரி, தண்ணீர் பாட்டில், கார் சாவி, பீடி, சிகரெட், ஆகியவற்றைக் கொண்டு வரக் கூடாது என்றும், கருப்புச் சட்டை அணிந்து வரக்கூடாது
மின்னம்பலம் :சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு பேனர்கள், செல்பேசி, கேமரா போன்றவற்றுக்குத் தடை விதிக்கப்படுவதாகச் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான நிர்வாகம் இன்று (ஏப்ரல் 9) அறிவித்துள்ளது.
சென்னையில் நாளை (ஏப்ரல் 10) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் காவிரி வாரியம் அமைக்கக் கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் பொழுதுபோக்கிற்காகவும் வணிக நோக்கத்திற்காகவும் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் போராட்ட நோக்கம் திசை திரும்பிவிடும் என்பதால் இதனை ஒத்திவைக்கப் பலரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இந்நிலையில், இப் போட்டிகளை பார்க்க வருபவர்கள் பேனர்கள், கொடிகள், பதாகைகள், தொலைநோக்கி, ரேடியோ, லேப்டாப், கண்ணாடிகள் ,செல்பேசி, கேமரா, இசைக்கருவிகள், டிஜிட்டல் டைரி, தண்ணீர் பாட்டில், கார் சாவி, பீடி, சிகரெட், ஆகியவற்றைக் கொண்டு வரக் கூடாது என்றும், கருப்புச் சட்டை அணிந்து வரக்கூடாது எனவும் சென்னை சேப்பாக்க கிரிகெட் மைதான நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், தேசியக்கொடியை அவமதிக்கும் விதமாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்றும் முழுமையான சோதனைக்குப் பின்பே மைதானத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளுக்கான காரணம் குறித்த எந்தத் தகவலும் கூறப்படவில்லை. ஆனால், நாளை இரவு 8 மணிக்குத் தொடங்கும் போட்டிக்கு மாலை 6 மணி முதலே முழுமையான சோதனைக்குப் பிறகு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கண்காணிப்புக்காக மைதானம் முழுவதும் ஏராளமான ரகசிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
முன்னதாக சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்படலாம் என கூறப்பட்டது. அதற்கு கேரள கிரிக்கெட் சங்கம் தயாராக இருப்பதாகவும் செய்தி வெளியானது. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்தது.
ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, “சென்னையிலிருந்து ஐபிஎல் போட்டிகள் மாற்றப்படாது. விளையாட்டிலிருந்து அரசியலை ஒதுக்கி வையுங்கள். சென்னையில் திட்டமிட்ட தேதிகளில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்காக கூடுதல் ஆணையர் சாரங்கன் தலைமையில் 2000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். கிரிக்கெட் வீரர்களுக்கு முழுமையாகப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் சென்னை காவல் துறை அறிவித்துள்ளது. அதேபோல், ஆழ்வார்பேட்டையில் வீரர்கள் தங்கியுள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர விடுதிக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் சென்னை அணி வீரர்கள் வெளியே செல்லும்போது ஏதாவது அசம்பாவிதம் நேரிட்டால் நாங்கள் பொறுப்பல்ல. மக்கள் தங்கள் உணர்வுகளைக் காட்டுவார்கள் எனத் தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: