வெள்ளி, 13 ஏப்ரல், 2018

BBC :மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதால் ..இருப்பதையும் இழக்கும் தென்மாநிலங்கள்: வளர்ச்சிக்கு கிடைத்த தண்டனையா?


மக்கள்தொகை கட்டுப்பாட்டில் சிறந்து விளங்கிய மாநிலங்களுக்கு ஊக்கமளிப்பது குறித்து 'பரிசீலிக்குமாறு' மத்திய அரசு 15வது நிதிக்குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஏப்ரல் 12 அன்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அன்று தமிழகத்தில் ஒரு ராணுவக் கண்காட்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோதியும் அதே கருத்தைத் தெரிவித்துள்ளார்.
;இந்திய அரசியலமைப்பின் பிரிவு 280-ன்படி மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளிடையே வரி வருவாய் எவ்வாறு பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும் என்பதைப் பரிந்துரைக்க நிதிக்குழு ஒன்று கட்டாயமாக அமைக்கப்பட வேண்டும்.
ஒரு நிதிக்குழுவின் பரிந்துரை ஐந்து நிதியாண்டுகளுக்கு செல்லுபடியாகும். இதுவரை 15 நிதிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அமலில் இருப்பது 14வது நிதிக்குழுவின் பரிந்துரைகள்.
 வரும் 2020-21ஆம் நிதியாண்டு முதல் 2024-25 வரையிலான காலத்துக்கான பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க 15வது நிதிக்குழு அமைப்பதற்கான குடியரசுத் தலைவரின் ஆணை, 2017ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்த நிதிக்குழு 2019ஆம் ஆண்டு அக்டோபர் 30க்குள் தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். கடந்த சில நிதிக் குழுக்கள் 1971ஆம் ஆண்டின் மக்கள்தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்து வந்தன.

ஆனால், 15வது நிதிக்குழு அமைக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியான்பின் அது தென்மாநிலங்களிடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. அதற்கான காரணம், 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகையின் அடிப்படையிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தததுதான்.
1971 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் வடமாநிலங்களைவிட தென்மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருந்துள்ளது. அதற்கு முக்கியக் காரணம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான காரணிகளான பெண் கல்வி, குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வு உள்ளிட்டவற்றில் தென்மாநிலங்கள், குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளா அதிக கவனம் செலுத்தியதுதான். இதே காலகட்டத்தில் சில வட மாநிலங்களில் மக்கள்தொகை இரண்டு மடங்கைவிட அதிகமானது. <> பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரித்து மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்ததால், தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாது தனி நபர் வருமானமும் அதிகரித்தது. தென்மாநிலங்கள் அனைத்தும் மத்திய அரசுக்கு தங்கள் ஈட்டித்தரும் வரி வருவாயைவிட மத்திய ஒதுக்கீட்டில் இருந்து பெரும் நிதி மிகவும் குறைவாகவே இருந்தது.
தற்போது அதிக மக்கள்தொகை உடைய மாநிலங்களுக்கு அதிகம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது நியாமானதுபோல தோன்றினாலும், இது மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் சிறந்து விளங்கிய தென்மாநிலங்களுக்கு வழங்கப்படும் தண்டனையாகவே பார்க்கப்படுகிறது.
மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதால் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ள ஆந்திரப் பிரதேசம் தவிர பிற தென்மாநிலங்கள் அனைத்தும் தங்கள் செலவினங்களுக்கான தங்கள் சொந்த நிதியையே பெரும்பாலும் நம்பியுள்ளன. அதாவது, மத்திய அரசு அம்மாநிலங்களுக்கு வழங்கும் நிதி குறைவு. ஏற்கனவே 14ஆம் நிதிக் குழுவில் 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை 10% மற்றும் 1971ஆம் ஆண்டின் மக்கள்தொகை 17.5% என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டபோதே 13ஆம் நிதிக்குழுவில் தமிழகம் பெற்ற நிதியின் விகிதத்தை விடவும் குறைவாகவே பெற்றது.
தற்போது முழுக்க முழுக்க 2011 மக்கள்தொகை மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டால் தென்மாநிலங்கள் அனைத்துக்குமான ஒதுக்கீடு நிச்சயம் குறையும். 



14ஆம் நிதிக்குழுவின் பரிந்துரையில் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் தமிழகம் 4%-ஐ விடவும் சற்று அதிகமாக பெற்றது. தமிழகத்தைப் போல மூன்று மடங்கு மக்கள்தொகை உடைய மாநிலமான உத்திரப்பிரதேசம் 17.9% பெற்றது. அதாவது தமிழகத்தைவிட சுமார் நான்கரை மடங்கு. இப்போது 2011 மக்கள்தொகை மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டால், இந்த இடைவெளி இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் நிதி ஒதுக்கீட்டுக்காக 2011 மக்கள்தொகையை அடிப்படையாகக் கொள்வது எனும் முடிவை எதிர்த்து தமிழகம், தெலங்கானா தவிர்த்த பிற தென்மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் கடந்த செவ்வாயன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். கேரளா நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு அனுப்பப்பட்டும் தமிழக நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை. தென்மாநிலங்களின் இத்தகைய எதிர்ப்புக்குப் பின்னரே மத்திய அரசும் பிரதமரும் மக்கள்தொகை வளர்ச்சியைக் குறைத்துள்ள மாநிலங்களுக்கு செய்ய வேண்டிய நியாயம் பற்றிப் பேசியுள்ளனர்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன், "15வது நிதிக்குழுவின் டெர்ம்ஸ் ஆஃப் ரெஃபெரென்சில் 'The Commission shall use the population data of 2011' (பிரிவு-8) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 'shall' என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அதைத்தான் நிச்சயம் பின்பற்றுவார்கள் என்று பொருள் . மக்கள்தொகை கட்டுப்பாடு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பற்றிக் குறிப்பிடும்போது, 'The Commission may consider proposing measurable performance-based incentives' (பிரிவு - 7) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 'may' என்றால் அதை அவர்கள் நிச்சயமாகச் செய்வார்கள் என்று கூற முடியாது. அதில் 'Progress made in moving towards replacement rate of population growth' (பிரிவு 7.2) என்பதும் ஊக்கத்தொகை வழங்குவதற்கான ஒரு காரணியாகக் கூறப்பட்டுள்ளது. அப்படியானால், மக்கள்தொகை கட்டுப்பாட்டை நோக்கிச் செல்லும் மாநிலங்கள். 


ஆனால், தென்னிந்திய மாநிலங்கள் ஏற்கனவே மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி தேசிய சராசரிக்கும் குறைவான அளவில் உள்ளன. அந்த மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை தேவையில்லை. அவை ஏற்கனவே செய்துள்ள சாதனைகளுக்கான சன்மானமே தேவை," என்கிறார்.
இப்போது பிரதமர் தென்மாநிலங்களுக்கு ஆதரவளிப்பதுபோல பேசியுள்ளதும் நிறைவேற வாய்ப்பில்லை என்கிறார் அவர். 


"இப்படித்தான் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கப்படும் என்று பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகவே உறுதியாகச் சொல்லி வந்தது. கடைசியில் ஆந்திராவைக் கைவிட்டு விட்டனர்," என்று கூறும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், தமிழக அரசின் முன்னாள் வருவாய் செயலாளருமான தனவேல், "இவர்களால் அரசியல் ரீதியாக எதையெல்லாம் வெளிப்படையாகச் சொல்ல முடியாதோ அவற்றுக்கெல்லாம் நிதிக்குழு, ரிசர்வ் வங்கி உள்ளிட்டவற்றைக் காரணமாக்கி விடுவார்கள். 

ஒருவேளை மக்கள்தொகை கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கீடு குறைந்தால் அதற்கு நிதிக்குழு தங்கள் பரிந்துரையை ஏற்காததுதான் காரணம் என்று சொல்லக்கூடும், " என்கிறார்.
இந்த நிதிக்குழு மத்திய அரசுக்கு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்போது எந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் ஒவ்வொரு மாநிலத்துக்குமான வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்த தரவுகளையும் தெரிவிக்கும். அதற்கான கடைசி நாள் அக்டோபர் 30, 2019. அதுவரை தென்மாநிலங்கள் நம்பிக்கையுடன் காத்திருக்க வேண்டியதுதான்

கருத்துகள் இல்லை: