வெள்ளி, 13 ஏப்ரல், 2018

பாடகர் கோவன் கைது .. எடப்பாடிக்கும் மோடிக்கும் எதிராக பாட்டு பாடினார்

Gajalakshmi - Oneindia Tamil திருச்சி: திருச்சியில் இன்று அதரிடியாக கைது செய்யப்பட்ட மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த பாடகர் கோவனுக்கு கோர்ட் நிபந்தனை ஜாமீன் அளித்து விடுவித்தது.
 மக்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை பாடல் வடிவில் மக்கள் மத்தியில் வீதிகளில் இறங்கி பாடி வருபவர் இவர் பிரதமர், முதல்வரை விமர்சித்து பாடல் பாடியதாக குற்றம்சாட்டி திருச்சி போலீசார் கோவனை கைது செய்தனர். நாட்டுப் பாடல்கள் பாடுவதில் அதிக ஆர்வம் கொண்ட கோவன் அரசின் அடக்குமுறைகளை கண்டித்து வீதிகளில் இறங்கி மக்கள் மத்தியில் பாடல் வடிவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர். 
மக்கள் கலை இலக்கியக் கழகத்துடன் இணைந்து இதனை கோவன் செய்து வருகிறார். விஷ்வஇந்து பரிஷத் அமைப்பின் ரதயாத்திரை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கோவன் பாடல் பாடியுள்ளார். பிரதமர், முதல்வரை விமர்சிக்கும் விதமாக பாடல் பாடியதாகக் கூறி கோவனை திருச்சி போலீசார் கைது செய்தனர்.
மாற்று உடையில் கைது செய்ய வந்த போலீஸ் மாற்று உடையில் கைது செய்ய வந்த போலீஸ் திருச்சியில் அவருடைய வீட்டில் இருந்த கோவனை மஃப்டியில் வந்த போலீசார் கைது செய்ய முயற்சித்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது குடும்பத்தினர் வீட்டின் முன் திரண்டனர். 
கோவனும் தன்னுடைய மகன் மற்றும் வழக்கறிஞர் வந்தால் மட்டுமே கைதாவேன் என்று சொல்லி வீட்டிற்குள்ளே இருந்தார். 
இதனையடுத்து போலீஸ் உடையில் வந்த காவலர்கள் வலுக்கட்டாயமாக கோவன் வீட்டின் முன் திரண்டிருந்தவர்களை இழுத்துத் தள்ளி அப்புறப்படுத்தினர். அவரின் வீட்டின் கதவை உடைத்து கோவனை கைது செய்து அழைத்துச் சென்றனர். 
கோவனின் கைதை தடுத்த அவருடைய மகன் மற்றும் வழக்கறிஞர் உள்ளிட்டோர் போலீசாரால் தாக்கப்பட்டுள்ளனர். எதற்காக கோவன் கைது செய்யப்படுகிறார் என்பதை சொல்லாமல் போலீசார் அராஜகமாக செயல்பட்டதாக அவருடைய மனைவி மற்றும் மகள் குற்றம்சாட்டியுள்ளனர். கைது செய்யப்பட்ட கோவன் நேரடியாக காவல்நிலையம் அழைத்து செல்லப்படாமல் சுற்றுவழியில் திருச்சி கேகே நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. 
நிபந்தனை ஜாமீன் நிபந்தனை ஜாமீன் இதனையடுத்து கோவன் நீதிமின்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கோவன் சார்பில் ஜாமீன் கோரப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரை நிபந்தனை ஜாமீனில் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். கோவனின் கைதைக் கண்டித்து நீதிமன்றத்தின் முன்பு மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
கைது செய்து அழைத்து செல்லப்பட்ட போதும் கோவன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழக்கமிட்டார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மூடு டாஸ்மாக்கை மூடு என்று பாடியதற்காக கடந்த 2015ம் ஆண்டு கோவன் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: