சனி, 16 டிசம்பர், 2017

வடமாநில கொள்ளையர்கள் நாடு முழுவதும் கொள்ளை குத்து வெட்டு கொலை ..

tamilthehindu :கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட வடமாநிலக் கொள்ளையர்கள். நாமக்கல், சேலத்தில் கைதான வடமாநிலக் கொள்ளையர்கள், பல்வேறு மாநிலங்களில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளயடித்ததுடன், பல்வேறு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டவர்கள். எங்கும் பிடிபடாத இவர்கள், தமிழகத்தில் பிடிபட்டுள்ளனர் என்று கோவை மாநகர காவல் ஆணையர் கே.பெரியய்யா, மேற்கு மண்டலத் தலைவர் ஏ.பாரி ஆகியோர் தெரிவித்தனர்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர்கள் நேற்று இரவு கூறியதாவது: கோவை பீளமேடு பகுதியில் கடந்த 10-ம் தேதி நள்ளிரவு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது.
  உடனடியாக போலீஸார் விசாரணையில் ஈடுபட்டதில், வெள்ளை நிற கார் அந்தப் பகுதியில் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, குறிப்பிட்ட நேரத்தில் கோவை மாநகர எல்லையைக் கடந்து சென்ற கார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. திருச்சி சாலையில் மகாராஷ்டிர மாநில பதிவெண் கொண்ட கார் சென்றது தெரியவந்தது.

அந்தக் கார் கணியூர், விஜயமங்கலம் உள்ளிட்ட சுங்கச் சாவடிகளைக் கடந்துசென்று, மதுரை நாகமலை வரை சென்றது தெரியவந்தது. இதேபோல, மற்றொரு காரும் சந்தேகப்படும் வகையில் அவ்வழியே சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, மேற்கு மண்டலம் முழுவதும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் 5 பேரும், சேலத்தில் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி, 5 தோட்டாக்கள், 2 கார்கள் மற்றும் ரூ.3.03 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் நவீன அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் கொள்ளையர்கள் பிடிபட்டுள்ளனர். கொள்ளையர்களைப் பிடிக்க பறக்கும் கேமரா (ட்ரோன்) பயன்படுத்தப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

லாரியில் ரகசிய அறை

இந்தக் கொள்ளைக் கும்பல் எங்கும் தங்காமல், ஒரு லாரியில் மட்டுமே தங்கியுள்ளனர். அந்த லாரியில் கூடுதலாக ஒரு டீசல் டேங்கரை கட்டமைத்து, ரகசிய அறைகள் அமைத்து, அதில் வெல்டிங் இயந்திரம், 4 சிலிண்டர்கள், ஸ்பிரே பாட்டில்கள் ஆகியவற்றை பதுக்கி வைத்துள்ளனர். அவற்றையும் பறிமுதல் செய்துள்ளோம்.
பிடிபட்ட 8 பேரில் 3 பேர் ராஜஸ்தானையும், 3 பேர் ஹரியாணாவையும், ஒருவர் உத்தரப்பிரதேசத்தையும், ஒருவர் டெல்லியையும் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களில் ஏடிஎம் கொள்ளை மற்றும் குற்றச் செயல்கள் ஈடுபட்ட இந்தக் கும்பல் போலீஸாரிடம் பிடிபடவில்லை. தற்போதுதான் தமிழக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 நிமிடங்களில்...

நவீனத் தொழில்நுட்பத் திறமை கொண்ட இவர்கள், ஏடிஎம் மையத்தில் உள்ள கேமரா மீது ஸ்பிரே தெளித்துவிட்டு, 20 நிமிடங்களில் கொள்ளையடித்துவிட்டு, அங்கிருந்து சென்றுவிடுகின்றனர்.
ராஜஸ்தான்- ஹரியாணா எல்லைப் பகுதியில் உள்ள மேவாத் பகுதியை மையமாகக் கொண்டு செயல்பட்டுள்ள இந்தக் கொள்ளையர்களுக்கு, வேறு கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது தொடர் விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்.
இந்த கும்பலைப் பிடித்ததில் கோவை மாநகர காவல்துறை மற்றும் மேற்கு மண்டல காவல்துறையினர் இணைந்து, வெகுவேகமாக தகவல்களைப் பரிமாறிக் கொண்டு செயல்பட்டதால், திருட்டு நடந்த 4 நாட்களில் கொள்ளையர்கள் பிடிபட்டுள்ளனர். பொதுமக்கள் ஒத்துழைப்பும் அதிக அளவில் இருந்ததால், எளிதில் கொள்ளையர்களைப் பிடிக்க முடிந்தது.
இந்தக் கும்பலை காவலில் எடுத்து விசாரித்த பின்னரே, எங்கெங்கு, எவ்வளவு பணத்தைக் கொள்ளையடித்தனர் என்பது தெரியவரும். அதற்குப் பின்னரே கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் பொருட்களை மீட்கும் பணி நடைபெறும்.

தமிழகத்தில் ஊடுருவல்

தமிழகத்தில் சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர் இந்தக் கொள்ளைக் கும்பல் ஊருடுவியுள்ளது. வேலூர் விருச்சபுரம், மதுரை வாடிப்பட்டி, புதுக்கோட்டை பகுதிகளில் கொள்ளையடித்துள்ள இந்தக் கும்பல், கோவை, திருப்பூரில் ஏடிஎம் மையங்களைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளனர். கோவையில் 2 ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்துள்ளனர்.
நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளையடித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவர்களைப் பிடித்த தனிப்படைக்கு தலைமை வகித்த துணை ஆணையர் பெருமாள் மற்றும் போலீஸாருக்கு வெகுமதி வழங்கப்படும்.

வடமாநில கொள்ளையர்கள் பிடிபட்டது குறித்து நேற்று இரவு செய்தியாளர்களிடம் விளக்கிய கோவை மாநகர காவல் ஆணையர் கே.பெரியய்யா. அருகில் (இடது) மேற்கு மண்டல காவல் துறை தலைவர் ஏ.பாரி.   -  படம்: ஆர்.கிருஷ்ணகுமார்
 இந்தக் குழுவுக்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்தாக் தலைமை வகித்துள்ளார். மோசம்கான் என்பவர் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி, பணத்தைத் திருடுவதில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். இவர்கள் வரும் லாரியை தொலைவில் நிறுத்திவிட்டு, அதிலிருந்து வெல்டிங் இயந்திரம், காஸ் சிலிண்டர்களை எடுத்து வந்து, ஏடிஎம் மையத்தின் கதவை மூடிவிட்டு, கொள்ளையடித்துள்ளனர். பின்னர் சிறிது தூரம் சென்றவுடன், காரில் உள்ள வெல்டிங் இயந்திரம் உள்ளிட்டவற்றை லாரிக்கு மாற்றிவிடுவார்கள். இதனால் காரை சோதனையிட்டாலும், சந்தேகம் ஏதும் வராது. இந்தக் குழுவைச் சேர்ந்த யாராவது தப்பிவிட்டார்களா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம் என்றனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்

கைது செய்யப்பட்ட 8 பேரும் கோவை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண்.6-ல் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை தங்களது காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி, கோவை மாநகர போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து, அவர்களை 10 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து, நீதிபதி ராஜவேலு உத்தரவிட்டார்

கருத்துகள் இல்லை: