திங்கள், 11 செப்டம்பர், 2017

ஜே.என்.யூ மாணவர் தேர்தல்: இடதுசாரி கூட்டணி வெற்றி! JNU .. united-Left alliance retained all four seats

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத் தேர்தல் செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெற்றது. இதில், பல்வேறு மாணவர் அமைப்பினர் போட்டியிட்டாலும், இடதுசாரி மாணவர் கூட்டமைப்பு மற்றும் ஆர்.எஸ்.எஸ். பின்புலமுள்ள ஏ.பி.வி.பி. இடையே பலத்த போட்டி நிலவியது. இடதுசாரி கூட்டணியில் அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு, இந்திய மாணவர் கூட்டமைப்பு, ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு ஆகிய மாணவர் அமைப்புகள் உள்ளன.
சமீப நாள்களாக வலதுசாரி அமைப்புகள் பலம்பெற்று வருவதால், ஜேஎன்யூ தேர்தலில் இடதுசாரி கூட்டமைப்பு தனது பதவிகளை தக்கவைத்துக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் நேற்று (செப் 9) வெளியாகின. இதில் இடதுசாரி கூட்டமைப்பினர் தலைவர், துணைத் தலைவர், பொதுச்செயலாளர், இணைச்செயலாளர் ஆகிய முக்கிய பொறுப்புகளை வென்று தங்களின் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.

மொத்தம் பதிவான 4,639 வாக்குகளில் 19 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. இடதுசாரி கூட்டமைப்பைச் சேர்ந்த கீதா குமாரி, 464 வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.பி.வி.பி. அமைப்பின் நிதி திரிபாதியைத் தோற்கடித்து தலைவர் பதவியைக் கைப்பற்றியுள்ளார். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பி.ஏ.பி.எஸ்.ஏ. அமைப்பின் சபானா அலி 935 வாக்குகள் பெற்றார். துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பின் சிமோன் சோயா கான் 1,876 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஏ.பி.வி.பியின் துர்கேஷ் குமார் 1,028 வாக்குகள் பெற்றார்.
இதுபோல் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட இடதுசாரி கூட்டணியின் துகிராலா ஸ்ரீகிஷா 2,082 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட ஏ.பி.வி.பியின் நிகுன்ஜி மக்வானா 975 வாக்குகள் மட்டுமே பெற்றார். 1,755 வாக்குகள் பெற்ற இடதுசாரி கூட்டமைப்பின் சுபன்ஷூ சிங் இணைச்செயலாளர் பதவியை கைப்பற்றியுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது தொடர்பாக கீதா குமாரி பிடிஐ ஊடகத்திடம் கூறியதாவது, “வெற்றிக்கான புகழ் அனைத்தும் மாணவர்களையே சாரும். ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மக்கள் தற்போதும் எதிர்பார்க்கின்றனர். மாணவர்களின் பிரச்னைகள் குறித்துத் தொடர்ந்து குரல் எழுப்பப்படும்” என்று தெரிவித்தார். minnambalm

கருத்துகள் இல்லை: