திங்கள், 21 ஆகஸ்ட், 2017

பன்னீர் : பி.ஜே.பி.யுடன் கூட்டு சேர்ந்து தினகரனையும் எடப்பாடியையும் பிரிக்கும் முயற்சி

மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக பல நாட்களாகப் போராடிவரும் கதிராமங்கலம் மக்களின் போராட்ட வீச்சு சற்றும் குறையவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் அம்மக்களுக்கு ஆதரவாக போராட்டக்களத்துக்கு வந்து குரல் கொடுத்து வருகின்றன, ஆளும் அ.தி.மு.க.வைத் தவிர. ஆனால் அ.தி.மு.க.வின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கதிராமங்கலத்துக்கு வந்து போராட்ட ஆதரவுக் குரல் கொடுத்திருப்பது ஆச்சர்யத்தைக் கொடுத்துள்ளது. கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு,  மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் நடிகருமான கருணாஸ் ஆகிய மூன்று அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடமும் கதிராமங்கலம் போராட்ட ஸ்பாட்டில் சில கேள்விகளைக் கேட்டோம்.


முதலில் தமிமுன் அன்சாரி. 

நக்கீரன்: போராடும் மக்கள் உங்களிடம் எந்தவிதமான கோரிக்கைகளை வைத்தார்கள்?

தமிமுன் அன்சாரி: கதிராமங்கலத்தில் இரு முறையும் மாதிரிமங்களத்தில் நான்கு முறையும் ஓ.என்.ஜி.சி. குழாய்கள் வெடித்து, மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளன. இந்த விஷயத்தில் உண்மைகளைக் கண்டறிய விசாரணைக் கமிஷன் அமைக்கவேண்டும், இப்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ள ஜெயராமன் உள்ளிட்டோர் மீதுள்ள வழக்குகளை வாபஸ் பெற அரசை வற்புறுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார்கள். முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்வதாக நாங்கள் உறுதியளித்துள்ளோம்.

நக்கீரன்: இன்னும் 110 இடங்களில் பணிகளைத் துவக்குவோம், கண்டிப்பாக கதிராமங்கலம் பகுதிகளில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளை மேற்கொள்வோம் எனக் கூறியிருக்கிறதே ஓ.என்.ஜி.சி.?  

தமிமுன் அன்சாரி: இதே திமிர்ப்போக்கோடு ஓ.என்.ஜி.சி.காரர்கள் பேசிக்கொண்டிருந்தால் தமிழர்களின் கோபத்தை மத்திய அரசு சந்திக்கவேண்டி வரும். டெல்லியை எப்படி எதிர் கொள்ளவேண்டும் என்ற துணிச்சல் தமிழர்களிடம் அதிகமாகவே உள்ளது. இதையும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதையும் நாங்கள் மூவரும் கையெழுத்திட்டு முதல்வர் எடப்பாடியிடம் அளிக்க இருக்கிறோம்.

நக்கீரன்: நானும் இங்குதான் இருக்கிறேன், ஓ.என்.ஜி.சி.யால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்கிறாரே அமைச்சர் ஓ.எஸ்.மணியன். 

தமிமுன் அன்சாரி: ஓ.என்.ஜி.சி. குழாய் வெடித்திருப்பதும் வெடிப்பதும் வெட்ட வெளிச்சமான உண்மை. இது அமைச்சருக்குத் தெரியாது என்றால், அதற்கு நாங்கள் என்ன பதில் சொல்வது?

கருணாஸ்  நக்கீரன்: கதிராமங்கலம் மக்களின் பிரச்சனைக்காக உங்கள் மூவரின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வீர்களா? 

கருணாஸ்: தமிழ்நாட்டிலிருந்து வெளியேறுகிறோம்னு ஓ.என்.ஜி.சி. சொல்லட்டும், அடுத்த நிமிஷமே நாங்கள் ராஜினாமா செய்கிறோம். மக்கள் உரிமை பாதுகாக்கப்படணும்னா எதற்கும் நாங்கள் தயார். ஆனால் இப்பகுதி மக்களின் நிலையோ மிகவும் கவலையளிக்கக்கூடியதாக இருக்கிறது. பலருக்கு கேன்சர் பாதிப்பு, குழந்தைகளுக்கு கிட்னி பாதிப்புன்னு ரொம்பவே அல்லாடுகிறார்கள் மக்கள். இதையெல்லாம் பார்த்து ரொம்பவே வேதனைப்பட்டோம். இதுக்கெல்லாம் ஒரேவழி, உள்ளூர் மக்களும் ஓ.என்.ஜி.சி.யும் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.

நக்கீரன்:  அ.தி.மு.க. அணியில் இருந்துகொண்டு தன்னிச்சையாக செயல்படுகிறீர்களே, அமைச்சர் பதவிக்கு குறி வைத்திருக்கிறீர்களா? 

கருணாஸ்: தேர்தல் அரசியலைத் தாண்டி தமிழக மக்களின் நலனுக்காக போராட வேண்டும் என்பது எங்களின் நோக்கமே தவிர, அமைச்சர் பதவி அல்ல. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் துவங்கி, பேரறிவாளன் விடுதலை, மாட்டுக்கறிப் பிரச்சனை, இப்போது கதிராமங்கலம் போராட்டம், இப்படி எதிலுமே மக்களின் நலன் சார்ந்துதான் முன்நிற்கிறோம். கதிராமங்கலத்துக்கு கிளம்பும்போது முதல்வரிடம் கூறிவிட்டுத்தான் வந்தோம்.

நக்கீரன்: மத்திய அரசு கொடுத்துவரும் நிர்ப்பந்தம், அ.தி.மு.க. அரசை நீடிக்கவிடும் என நினைக்கிறீர்களா? 

கருணாஸ்: நாளை என்பதைப் பற்றிக் கவலையில்லை. இன்றைய நிலைப்பாடுதான் முக்கியம். எத்தகைய நிர்ப்பந்தம் வந்தாலும் சரி, அ.தி.மு.க. தனித்தன்மையை இழக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கூட்டணியில் இருக்கிறோம்.

தனியரசு 

நக்கீரன்: தினகரனின் மேலூர் கூட்டத்திற்கு அழைப்பு இல்லையா அல்லது முதல்வரின் வருத்தத்திற்கு ஆளாக நேருமே என்ற ஜாக்கிரதை உணர்வா? 

தனியரசு: அழைப்பு வரத்தான் செய்தது. அது அவர்களின் கட்சி விழா என்பதால் போகவில்லை. ஆனால் கூட்டம் வெற்றி பெற மூவரும் கையெழுத்திட்டு வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தோம். அதில் கூட எடப்பாடி தரப்பும் தினகரன் தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறோம். இப்போது அ.தி.மு.க. பிளவுபட்டிருப்பதை நாங்கள் கவலையோடுதான் பார்க்கிறோம். மீண்டும் அ.தி.மு.க. வலிமையாக உருவெடுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை.

நக்கீரன்: அப்படியானால் ஓ.பி.எஸ். இணைய வேண்டும் என நீங்கள் நினைக்கவில்லையா? 

தனியரசு: இந்த அரசு கவிழ வேண்டும் என பல சூழ்ச்சிகளைச் செய்தவர் ஓ.பி.எஸ். அந்த சூழ்ச்சிகளெல்லாம் வெற்றிபெற முடியாததால், இப்போது பி.ஜே.பி.யுடன் கூட்டு சேர்ந்து தினகரனையும் எடப்பாடியையும் பிரிக்கும் முயற்சியில் ஓ.பி.எஸ். இறங்கியிருப்பதாகவே நாங்கள் நினைக்கிறோம். இதுதான் உண்மையும்கூட.

-சந்திப்பு: க.செல்வகுமார் நக்கீரன்

கருத்துகள் இல்லை: