திங்கள், 21 ஆகஸ்ட், 2017

இருப்பு குறைவுக்கு அபராதம் மூலம் ரூ.235.06 கோடி சம்பாதித்துள்ள எஸ்பிஐ வங்கி!

புதுடெல்லி: நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, சில மாதங்களுக்கு முன்பு சேமிப்புக் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் அதாவது குறைந்தபட்ச இருப்பு வைக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்து இதனை நடைமுறைப் படுத்தியது.
இதன் மூலம் 2017ம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் எஸ்பிஐ வங்கி சுமார் ரூ.235.06 கோடி சம்பாதித்துள்ளது. தனியார் வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் பிரச்சனைகள் இருக்கும் காரணத்தால் தான் சேவை மட்டமாக இருந்தாலும் மக்கள் அதிகளவில் பொதுத்துறை வங்கியைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் எஸ்பிஐ இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காத சுமார் 388.74 லட்சம் கணக்குகள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மினிமம் பேலன்ஸ் அபராதம் மூலம் எஸ்பிஐ எவ்வளவு வருமானம் பெற்றது என்று தகவல் அறியும் சட்டம் மூலம் சந்திரசேகர் கவுட் கேள்வியெழுப்பினார்.


இதற்குப் பதிலளித்துள்ள எஸ்பிஐ, ஜூன் 30 உடன் முடிந்த 2017ம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 388.74 லட்சம் கணக்குகள் மீது அபராதம் விதிக்கப்பட்டதன் மூலம் 235.06 கோடி ரூபாய் வருமானம் பெற்றுள்ளோம் எனத் தெரிவித்துள்ளது. மொத்த வருமான அளவை மட்டும் அறிவித்துள்ள எஸ்பிஐ, எந்தப் பிரிவினரின் மூலம் எவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது என்பதற்கான முழுமையான விபரத்தை அளிக்கவில்லை. இப்புதிய அபராத முறை ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: