வியாழன், 24 ஆகஸ்ட், 2017

Shalin Mariya Lawrence : தலாக் ...தலாக்...தலாக் ....

இந்த வழக்கில் வாதாடிய இஸ்லாமிய போர்டு சொன்ன ஒரு வாதம் இன்னும் என் நெஞ்சை பிழிகிறது அது " முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டால் ,சில ஆண்கள் தங்கள் மனைவிகளை எரிக்கவோ ,கொள்ளவோ கூட செய்ய வாய்ப்பு உள்ளது " !
இந்த முத்தலாக் என்கிற விஷயம் பற்றி எனக்கு முதலில் அறிமுகம் ஆனது 8 வருடத்திற்கு முன்னாள் .அதை அறிமுகப்படுத்தியவர் பெனாசீர் என்கிற ஒரு இஸ்லாமிய பெண் .அவருக்கு அப்பொழுது வயது 27 . அதற்கு மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் ஆகி ஒரே வாரத்தில் துபாய் போன கணவர் போனில் முத்தலாக் செய்து பாதிக்கப்பட்டவர் அவர்.
சிரித்து பேசி கலகலவென்று இருந்தாலும் தனிமையில் சோகம் சூழ்ந்தே இருக்கும் அவரின் முகத்தில் .ஆண்களையும் கொஞ்சம் வெறுக்கவே செய்தார் பாதிப்பு அப்படி .
இதற்கு பின்பு முத்தலாக் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.அதிர்ச்சியாக இருந்தது .
இதில் முக்கிய விஷயங்கள் மூன்று
1. இந்த முத்தலாக் முறை பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் இல்லை .
2. மதத்தின் பேரில் உண்டான பாகிஸ்தான் என்கிற நாடே இந்த முத்தலாக் முறையை 1961இல் முடிவுக்கு கொண்டுவந்தது .
3. குரானை பொறுத்தவரை முத்தலாக் பாவ செயல் இருந்தும் இந்த முறையை பெரும்பாலான இஸ்லாமியர்கள் பின்பற்றி வருகிறார்கள் .
இதில் இருந்து தெரியவருவது 'முத்தலாக் ' இஸ்லாமிய பெண்களுக்கெதிரான மிக பெரிய அநியாயம் .

நேற்று இந்த முத்தலாக் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மிக மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை அளித்திருக்கிறது அந்த தீர்ப்பு இந்த இந்திய ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது .
நிற்க ....
இந்த இடத்தில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டிய ஒரு விஷயம் .
தீர்ப்பு வெளியானதிலிருந்து சமூக வலைத்தளங்களிக்கும் போது வெளியிலும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் .அதில் பெரும்பாலானோர் இது இஸ்லாமியர்களுக்கு எதிரான பாஜகவின் சதி எனவும் , பாஜகவை திட்டுகிறேன் என்கிற பேரில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க பெண் அடக்குமுறைக்கு எதிரான ஒரு முக்கிய தீர்ப்பை பாராட்டாமல் ஒதுக்கி வைத்திருக்கின்றனர் .
ஆம் எனக்கும் பாஜகவை பிடிக்காது ,ஹிந்துத்துவாவை பிடிக்காது ,அதற்காக பெண்கள் மீது பல ஆயிரம் வருடங்களாக நடந்து வரும் அநியாயத்தை முடிவுக்கு கொண்டுவரும் ஒரு தீர்ப்பை பாஜக வரவேற்று ஒரு அறிக்கை விட்டு விட்டதென்பதற்காக இந்த தீர்ப்பை நான் எதிர்க்கவேண்டுமா ?
இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் ?
முக்கியமான விஷயம் ,இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடுத்தது பாஜகவோ இல்லை RSS ஓ இல்லை .மாறாக 2015 ஆண்டு 15 வருடங்கள் வாழ்ந்து ஒரு ஸ்பீட் போஸ்ட் மூலமாக தன்னை முத்தலாக் செய்த ஒரு மிருகத்திற்கு எதிராய் ஷயரா பானு என்கிற 36 வயது பெண் தொடுத்த வழக்கு . அவரோடு சேர்த்து இன்னும் பல இஸ்லாமிய பெண்கள் தொடுத்த மொத்தம் 7 வழக்கு (அதில் 5 ரிட் மனு ) மற்றும் இந்திய இஸ்லாமிய பெண்கள் அமைப்பு (BMMA) தொடுத்த வழக்கையும் சேர்த்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு .
இந்திய இஸ்லாமிய பெண்கள் அமைப்பு இந்த வழக்கின் தொடர்பாக நடத்திய ஆய்வில் 5710 இஸ்லாமிய பெண்களில் 525 பெண்கள் விவாகரத்து பெற்றவர்கள் அதில் 414 பேர் (78%) முத்தலாக் முறையில் விவாகரத்து செய்யப்பட்டவர்கள் .அதில் 90 சதவிகிதனர் எந்த பொருளாதார உதவியும் இல்லாமல் நிற்கதியாக விடப்பட்டவர்கள் . இதில் பாதி பேரின் பிள்ளைகளை அவர்களிடம் இருந்து சட்டத்திற்கு புறம்பாக பறிக்கபட்டிருந்தன .
போனில் விவாகரத்து ,லெட்டரில் விவாகரத்து ,டெலிக்ராமில் விவாகரத்து ,SMS இல் விவாகரத்து ,வாட்சப்ப்பில் விவாகரத்து . Instant coffee போல் ,instant விவாகரத்து .
அதே போல் இந்த வழக்கை விசாரித்தது 5 மதங்களை சார்ந்த நீதிபதிகள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் .
இந்த வழக்கில் வாதாடிய இஸ்லாமிய போர்டு சொன்ன ஒரு வாதம் இன்னும் என் நெஞ்சை பிழிகிறது அது " முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டால் ,சில ஆண்கள் தங்கள் மனைவிகளை எரிக்கவோ ,கொள்ளவோ கூட செய்ய வாய்ப்பு உள்ளது " அடடடடா ....என்ன ஒரு வாதம் !
எனக்கு தெரிந்து முதல் முறையாக இஸ்லாமிய பெண்களுக்கு ஆதரவாய் இந்தியாவில் ஒரு தீர்ப்பு வந்துள்ளது .இதை பல இஸ்லாமிய பெண்களுடன் நானும் ஆதரிக்கிறேன் .
இதை ஆதரிக்காத பெண்கள் பற்றி இன்னொரு பதிவில் .
என்னை பொறுத்தவரை எல்லா மதமும் பெண்களுக்கெதிரானது .பெண் அடிமைத்தனம் நிறைந்தது அதில் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு பெண் கேள்வி கேட்கும்போதும் அதை ஆதரிக்க வேண்டும் ஒழிய அதை வைத்து நாம் கேவல அரசியல் செய்ய கூடாது .
வரதட்சணை என்கிற இந்து மத முறை ஒன்றை கிரிமினல் என சட்டம் கூறும்பொழுது முத்தலாக் முறையும் கிரிமினல் ஆவது சரியே .இதுதான் இந்தியாவின் ஜனநாயகம் .அரசியல்வாதிகள் தவறாககலாம் ,நீதிபதிகள் தவறாககலாம் .ஆனால் பெண் விடுதலையும் ,அதற்கு வசதி செய்து கொடுக்கும் அம்பேத்கரின் சட்டவடிவமும் எப்பொழுதுமே தவறாகாது .
இந்த ஷயரா பானு போல் ,இஷ்ரத் ஜஹான் போல் ஹிந்து பெண்களும் அவர்களின் அடிப்படை சுதந்திரத்திற்காக இனி போராடவேண்டும் (குறிப்பாக கோயில்களுக்கு செல்லும் உரிமை -சபரிமலை etc... )
கிருஸ்தவ பெண்களுக்கு ஆயிரம் போராட்டங்கள் காத்திருக்கின்றன ...அதை பற்றி இன்னுமொரூ பதிவில்.
ஷாலின்

கருத்துகள் இல்லை: