செவ்வாய், 25 ஜூலை, 2017

ஐந்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு: குலக்கல்விக்கொரு முன்னொட்டம்!

thethimestamil.com :கவிதா சொர்ணவல்லி : ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத்தேர்ச்சி கிடையாது என்கிற மசோதாவை தாக்கல் செய்யப்போவதாக “குலக்கல்வியின்”பால் வெறி கொண்டுள்ள மத்திய அரசு கூறி இருக்கிறது.(மதிப்பெண் இல்லாவிட்டால் 5-ம் வகுப்பிலேயே பெயில் ஆக்கும் திட்டமும் இதில் அடக்கம்).
காலையில் இதைப்பற்றிய விவாதமொன்றில் பேசிய அத்தனை பேரும் “கட்டாயத்தேர்ச்சிக்கு” எதிர்ப்பு தெரிவிக்கும் எலைட்டாகவே இருந்தார்கள். மாநகராட்சியில் படிக்கும் குழந்தையின் பெற்றோர் ஏன் கருத்துக் கூற வரவில்லை என்பதை யோசித்துக்கொண்டே இருந்தேன்.
படிப்புக்கு மட்டுமே அதி தீவிர அக்கறை அளிக்கும் (தங்களது சொத்துக்களை குழந்தைகளின் மீது Invest செய்யும் ) ஒரு சமூகமும், பள்ளிக்குச் சென்றாலே போதும் (அன்றாடங்காய்ச்சி ) என்கிற மற்றொரு சமூகமும் என்றுமே நேர்கோட்டில் இணையமுடியாது என்பதற்கான எளிதான சான்று இது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரின் பதிவை சிலநாட்களுக்கு முன் கடக்க நேரிட்டது. அதில் “பொது தேர்வுக்காக பிறசாதி பிள்ளைகள் பத்து டியூஷன்களுக்கு சென்று கொண்டிருக்கையில், வீட்டில் சண்டையில்லாது அமைதியான ஒரு சூழலுக்காக நாங்கள் போராட வேண்டி இருந்தது. பாதி நேரங்கள் தெருவிளக்கில் படித்துதான் பரீட்சை எழுதினேன்” என்றிருந்தது. எவ்வளவு உண்மை இல்லையா இது ?
“எல்லாருக்குமான வாய்ப்புகள்” என்பதே இங்கு பொய்யான ஒன்று. ஏனென்றால் அரசாங்கம் அளிக்கும் வாய்ப்புகள், அதற்கானவர்களுக்கு போய் சேருகிறதா ? என்பதும் அப்படியே கிடைக்கும் வாய்ப்புகளை யார் யாராரெல்லாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள முடிகிறது என்பதும் இன்றும் பதிலேயில்லாத கேள்விதானே.? பத்தாம் வகுப்புடன் குடும்ப பாரத்தை தன் தலையிலேற்றும் குழந்தைகள் பெரும்பாலானோர் வசிக்கும் நாடல்லவா இது ?
இப்படிப்பட்ட நாட்டில் ஒரு அரசின் வேலை என்னவாக இருக்க வேண்டும்? குறைந்தபட்ச அடிப்படைக்கல்வியை எந்த தடையுமின்றி ஒரு குழந்தைக்கு அளிப்பதைத்தவிர வேறு என்னவாகத்தான் இருக்க முடியும்?
என் சிறுவயதில் கூட “இந்த பஸ் எந்தூருக்கு போகுதுன்னு பாத்து சொல்லு தாயி”க்களை கேட்டிருக்கிறேனே. இன்று யார் அப்படி கேட்கிறார்கள்? எட்டாவது வகுப்பு வரையாவது எந்த தடையுமின்றி நம் குழந்தைகள் படிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டதுதானே அதற்கு காரணம்.
பள்ளிக்குள் காலெடுத்து வைக்கிற குழந்தைகள் அனைவருக்கும் அடிப்படைக்கல்வி என்பது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்தின் தார்மீக கட்டாயக்கடமை. ஆனால், மக்களால் தேர்வு செய்யப்பட்டாலும் பாசிச அரசாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு குலக்கல்வியை கொண்டு வருவதில்தான் பெரும் ஆர்வம். செருப்பு தைப்பவரின், மரம் வெட்டுபவரின், விவசாயக்கூலியின் மகன் /மகள் மாவட்ட ஆட்சியராக அமர்வதை இந்த பாசிச இந்துத்துவ அரசால் தாங்கிக்கொள்ள முடியுமா ?
முடியாதல்லவா ? இங்குதான் நம்மைப்போன்ற எலைட்களை குறி வைத்து “தரமானக்கல்வி” என்கிற சுவிசேஷ ஆராதனையை தொடங்குகிறது. தொடக்கக்கல்வியில் இருந்தே தரத்தை புகுத்துகிறோம் என்ற பெயரில் ஐந்தாம் வகுப்பு படிக்கிற குழந்தையையும் பெயில் ஆக்குகிற திட்டத்திற்கு வழிவகுக்கும் மசோதாவை தாக்கல் செய்யப்போவதாக மிரட்டுகிறது. எதிர்கட்சிகள் வலுவாக இல்லாத நேரத்திலும்,(இருந்தாலும் கிழிச்சுதான்) தைரியமான மாநில அரசுகள் இல்லதாத சூழலிலும் இப்படியான சட்டம் வருவதற்கான 100 % சாத்தியக்கூறுகள் உண்டு.
இப்படியான மசோதா வரும்போது என்ன நடக்கும்? நான் முன்னமே சொன்னது போல “படிப்பதற்கு அமைதியான சூழல் கூட கிடைக்காத ஒடுக்கப்பட்ட(அனைத்து சாதியிலும்) குழந்தைகள் தங்கள் படிப்பை ஐந்தாம் வகுப்புடன் அல்லது எட்டாம் வகுப்புடன் நிறுத்தும் அவலங்கள் நடக்கலாம். நடக்கும். தானாக குலக்கல்வி இங்கு உட்கார்ந்து கொள்ளும்.
இதையும் தாண்டி ஒன்று இருக்கிறது. பத்து வயதிலயே அந்தக் குழந்தையை “நீ படிப்பதற்கு லாயக்கில்லாதவன்” என்று மன ரீதியாக சிதைப்பது. படிப்பை பாதியில் நிறுத்தினால் கூட பிழைத்துக்கொள்ளும் நம்முடைய குழந்தைகள், இது போன்ற மனரீதியான சிதைவுகளை எப்படிக்கடப்பார்கள்? வாழ்நாளுக்கும் துரத்தும் தோல்வி ஒன்றைத்தானே இந்த அரசாங்கம் அவர்களுக்குப் பரிசளிக்கக் காத்திருக்கிறது.
இதை ஒருங்கிணைந்து நாம் தடுக்காவிட்டால் நம்முடைய குழந்தைகள் வாழ்நாளுக்கும் தோல்வியுற்றவர்களாக திரிவதை ஒரு கேடுகெட்ட சமூகமாக நாம் மாறிப்போயிருப்போம். அவ்வளவுதான்.

கருத்துகள் இல்லை: