வியாழன், 27 ஜூலை, 2017

பாரதியின் உள்ளத்தில் இருந்தது சமஸ்கிருதம்தான் .. பழ கருப்பையா


பழ.கருப்பையா: என்னைப் பொறுத்த வரையில் பரிதிமாற் கலைஞர் என்ற பார்ப்பனரைத் தவிர வேறு எந்த பார்ப்பனரும் தமிழை, தமிழர் உணர்வை மதிப்பவராக நான் கருதவில்லை. பாரதியைக் கூட நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். பாரதி நல்ல கவிஞன் என்பது வேறு; அவன்தான் இந்து மதத்தைப் புகழ்ந்து பாடினான்; பாரத மாதாவைப் பாடினான். பாரத மாதாவுக்கு திருப்பள்ளி யெழுச்சி பாடியவன் பாரதி. பாரத மாதாவுக்கு தமிழகத்தில் என்ன வேலை? நாங்கள் தமிழ்த் தாய் என்ற ஒரு தாய்க்குப் பிறந்தவர்கள். நாங்கள் எப்படி பாரத மாதாவுக்குப் பிறந்தவர்களாக இருக்க முடியும்? ‘பாரத மாதா’ வேண்டுமானால் எங்களுக்கு மாற்றாந்தாயாக இருக்கலாம்.
பாரதி சமஸ்கிருதத்தைப் போற்றினான். என்னதான் தமிழைப் பாடினாலும் கூட அவன் உள்ளத்தில் அடிநாதமாக இருந்த உணர்வு சமஸ்கிருதம் தான். வேதம் நிறைந்த தமிழ்நாடு என்று பாடுகிறான். நான் கேட்கிறேன், “தமிழ்நாட்டுக்கும் வேதத்துக்கும் என்ன தொடர்பு?”
தமிழுக்கு இலக்கணம் வகுத்ததே ஆரிய மைந்தன் அகத்தியன் என்கிறான் பாரதி. அகத்தியனை ஆரிய மைந்தன் என்கிறான். அகத்தியன் வந்து இலக்கணம் வகுக்கும் வரை, தமிழ் ஆடையின்றி அம்மணமாகவா நின்றது?
தமிழுக்கு இலக்கணம் வகுத்தவன் தொல்காப்பியன். பாரதியோ, அகத்தியன் இலக்கணம் வகுத்தான் என்கிறான். நான் உறுதியாக சொல்வேன்; திராவிட இயக்கத்தின் கவிஞன், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனே தவிர பாரதியாக இருக்க முடியாது. பாரதிதாசன் தமிழைத் தனது உயிருக்கு நிகராகக் கருதிய கவிஞன். அவன்தான் -
“செந்தமிழே! உயிரே! நறுந்தேனே!
செயலினைமூச்சினை உனக்களித்தேனே!” - என்று பாடினான்.
மேலும் படிக்க, www.keetru.com

கருத்துகள் இல்லை: