திங்கள், 21 நவம்பர், 2016

மக்களைக் கொல்ல வந்த ஆயுதம்: மம்தா!


minnanmbalam.com :பணம் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் மற்ற தலைவர்கள் காட்டாத எதிர்ப்பை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காட்டிவருகிறார். இது, காங்கிரஸ் இடதுசாரிகளையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. மோடியின் ஆட்சியை எப்போதுமே விமர்சித்துவருகிறவர்களாக காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி இருந்தாலும், இந்த விவகாரம் தொடர்பாக நாடு தழுவிய எதிர்ப்பியக்கம் கட்ட வேண்டும் என மம்தா பானர்ஜி நினைக்கிறார். ஆனால் அவரது முயற்சிக்கு இடதுசாரிகளும் காங்கிரஸ் கட்சியினரும் போதுமான ஆதரவை கொடுக்காதநிலையில் சளைக்காமல் போராடுகிறார் மம்தா பானர்ஜி.
இந்நிலையில், இன்று மேற்குவங்க மாநிலத்தில் ஊடகங்களிடம் பேசிய மம்தா, ‘இந்த ரூபாய் நோட்டு நடவடிக்கை மக்களைக் கொல்லவந்த ஆயுதம் என கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், அவைக்கு வெளியே போராடிய மம்தா பானர்ஜி ‘அவசரகால நிதி நெருக்கடி’ என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட பதாகைகளுடன் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். டெல்லியில் போராட்டம் நடந்தநிலையில், மேற்குவங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, ‘மக்களிடமிருந்த வெள்ளைப் பணத்தையும் அரசு பறித்துக்கொண்டதால் கறுப்புப் பணம் மேலும் கறுப்படைந்துவிட்டது. அன்றாடம் புத்தம்புதிய அறிவிப்புகளாக வெளியிட்டு, நிலவரத்தை மேலும் மோசமாக்காமல் தெளிவான ஒரு செயல்திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் இந்த இரு நடவடிக்கைகளால் பிற்பட்ட மத்திய வர்க்கத்தினர், வியாபாரிகள், தினக்கூலிகள், இல்லத்தரசிகள் ஆகியோர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விவகாரத்தில் எந்த அரசியல் கட்சியுடன் வேண்டுமானாலும் இணைந்து போராடத் தயார். மக்கள் எங்களோடு உள்ளனர். நாளை நான் செல்கிறேன். மீண்டும் வீதியில் இறங்கி போராடப் போகிறேன்.’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: