செவ்வாய், 22 நவம்பர், 2016

ரூபாய் நோட்டு தட்டுப்பாடு: 60 சதவீத விற்பனை சரிவு பரிதவிக்கும் வாழை வியாபாரிகள், விவசாயிகள்

ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு காரணமாக 60 சதவீதத்துக்கும் மேலான விற்பனை குறைந்ததால், வாழை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கோவையில் தடாகம் ரோடு, ரத்தினபுரி, காந்திபுரம், சிங்காநல்லூர், சுந்தராபுரம் உள்ளிட்ட இடங்களில் வாழை மண்டிகள் உள்ளன.
இவற்றுக்கு திருச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி, கோபி, சத்தியமங்கலம், சிறுமுகை, பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், தடாகம், கிணத்துக்கடவு, பெரியநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வாழைத் தார்கள் வருகின்றன.
ரஸ்தாளி, மோரீஸ், செவ்வாழை, பூவன், நேந்திரன், நாடன், மொந்தன் உள்ளிட்ட வாழை ரகங்கள், தினமும் சுமார் 25 லோடுகளில் கோவைக்கு வருகின்றன.
கோவையில் இருந்து மாவட்டத் தின் அனைத்துப் பகுதிகளுக்கும் வாழைத் தார்கள் அனுப்பி வைக்கப் படுகின்றன. கேரள மாநிலத்தின் சில பகுதிகளுக்கும் இங்கிருந்து வாழைத் தார்கள் செல்கின்றன.
இந்த மண்டிகளுக்கு விவசாயி கள் அனுப்பிவைக்கும் வாழைத் தார் கள், ஏலம் மூலம் வியாபாரிகளுக்கு விற்கப்படுகின்றன. அவற்றை வாகனங்களில் கொண்டு செல்லும் வியாபாரிகள், சிறிய வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்களுக்கு விற்பனை செய்கின்றனர். கடை களில் வாழைப் பழம் விற்பனை செய் யப்பட்ட போதிலும், பெரும்பாலும் தள்ளுவண்டிக் கடைகள் மூலமே விற்கப்படுகின்றன.
வரத்து அதிகரிப்பு
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வாழை வரத்து குறைவாக இருந்தது. இதனால் விலையும் சற்று அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது வாழை வரத்து அதிகரித்துள்ளது. பல்வேறு வகையான வாழையும் மண்டிகளுக்கு வருகின்றன. ஆனால், விற்பனை பெரிதும் குறைந்துள்ளது.
மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட் டுகள் செல்லாது என்று அறிவித்த தாலும், ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மட்டுமே வங்கியில் தருவதாலும், ரூ.100, ரூ.50 நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலும் வாழை விற்பனை பெரிதும் சரிந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தடாகம் ரோடு வாழை மண்டியைச் சேர்ந்த சாதிக் பாட்சா கூறும்போது, “இந்த மண்டிக்கு 5 முதல் 6 லோடு வாழை வரும். 25 முதல் 30 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள வியாபாரிகள் இங்கு வந்து வாழை வாங்கிச் செல்வர். இந்த மண்டியில் பார்க்கிங் வசதி, குடிநீர் வசதி போதுமானதாக இல்லை. ஆண்டு முழுவதும் வாழை சீசன் உண்டு. விவசாயிகள் அனுப்பிவைக்கும் வாழையை ஓரிரு நாட்களில் விற்காவிட்டால், அதிக நஷ்டம் ஏற்படும். தற்போது ரூபாய் நோட்டு கள் பற்றாக்குறை, வாழை வியா பாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. சுமார் 60 சதவீத வாழை தேங்கி விடுகிறது. இதனால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளோம்” என்றார்.
ஊர் திரும்பிய தள்ளுவண்டி வியாபாரிகள்
உக்கடம் கரும்புக்கடையைச் சேர்ந்த வாழை வியாபாரி பைசல் ரகுமான் (31) கூறும்போது, “வாழை வியாபாரம் என்பது சிறிய அளவிலான தொகைகளை மையமாகக் கொண்டது. தற்போது ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்து, போதுமான அளவுக்கு மற்ற ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடாததால், மிகப் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எங்களிடம் வாழை வாங்குவோர் ரூ.500, ரூ.1000 கொடுக்கின்றனர். ஆனால், விவசாயிகள் இவற்றை வாங்க மறுக்கின்றனர். இதனால் நாங்கள் செய்வதறியாது தவிக்கிறோம். 60 சதவீதத்துக்கும் மேல் வாழை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரை, நெல்லை, புதுக்கோட்டை, தஞ்சையில் இருந்து வந்த சிறிய வாழை வியாபாரிகள், தள்ளுவண்டி மூலம் வாழைப் பழம் விற்று வந்தனர். நோட்டுகள் தட்டுப்பாடு மற்றும் விற்பனை இல்லாததால், அவர்களில் நிறைய பேர் வியாபாரத்தை விட்டுவிட்டு, சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். இதையடுத்து, நாங்கள் வாழை வாங்குவதைக் குறைத்துவிட்டோம். இதனால், விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூபாய் நோட்டுகள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கண்டால் மட்டுமே, வாழை வியாபாரம் சீரடையும்” என்றார்.
hindu

கருத்துகள் இல்லை: