திங்கள், 21 நவம்பர், 2016

ரஜினியின் பாராட்டு:பாஜக மகிழ்ச்சி!


minnambalam.com : ரூபாய் 500, 1000 நோட்டுகளை ஒழிப்பதாக வெளியான அறிவிப்புக்கு முதல் வரவேற்பு தந்தவர்களே திரைத்துறையினர்தான் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியிருக்கிறார். அவர் யாரை குறிப்பிடுகிறார் என்று நாம் விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், இதன் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியலை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. பிரதமர் மோடி, கடந்த 8ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். சட்டைப் பையிலே வெறும் ரூபாய் ஐநூறு நோட்டு இல்லாதவன்கூட இந்த அறிவிப்பை கேட்டு கதி கலங்கிப் போனான் என்பதுதான் உண்மை. ஆனால், மோடி அறிவிப்பை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களிலே நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு நான் தலை வணங்குகிறேன். புதிய இந்தியா பிறந்துள்ளது” என்று வர்ணித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதிரடியாக ஒரு திட்டம் அமலுக்கு வருகிறது. அதன் சாதகப் பாதகம் என்ன? இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்களா? என்று ஆராய்ந்து பார்க்காமல் ரஜினி தன் கருத்தை வெளிப்படுத்தியது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு நடந்தது. இதில் பங்கேற்று பேசிய திரைப்பட இயக்குநர் அமீர் ரஜினியின் கூற்றுக்குக் கடுமையாக எதிர்வினையாற்றினார். “இந்த நாட்டிலே எத்தனையோ அக்கிரமங்கள் நடந்திருக்கும்போது, எதற்குமே வாய் திறக்காத ரஜினிகாந்த், மோடியின் அறிவிப்புக்கு மட்டும் வாய் திறக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? இது நீண்ட கால கள்ள நட்பு. புதிய இந்தியா பிறந்துள்ளது என்று சொன்ன ரஜினி அவர்களே, உங்கள் பழைய இந்தியாவில் ‘கபாலி’ என்ற படம் ரிலீஸ் ஆனதே? அதற்கு என்ன ரேட் என்று உங்களுக்குத் தெரியுமா? அரசு நிர்ணயித்த விலையில் நீங்கள் டிக்கெட் விற்றீர்களா? உங்கள் சம்பளமென்ன? கபாலியின் மொத்த வியாபாரம் என்ன? இந்த கணக்கை யாராவது காட்ட முடியுமா? ரூபாய் 150 டிக்கெட்டை ரூபாய் 2000க்கு விற்று சம்பாதித்த ரஜினி கறுப்புப் பண ஒழிப்புக்கு ஆதரவு கொடுக்கிறார் என்றால் இதைவிட என்ன அநியாயம் இருக்க முடியும்?” என்று காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில்தான் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, “எல்லா இடங்களிலும் கறுப்புப் பணம் புழங்குகிறது. இந்த சமூகத்தின் ஒவ்வொரு பகுதியிலும், அரசியலிலும், பொது வாழ்விலும், சினிமாவிலும் கறுப்புப் பணம் புழங்குகிறது. நாம் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டுமெனில், சிறப்பான எதிர்காலத்தைப் பெற வேண்டுமெனில், இந்த கறுப்புப் பணப் புழக்கத்தை ஒழித்தாக வேண்டும். மோடியின் கறுப்புப் பண நடவடிக்கை வெற்றியடைந்து விட்டது. நியாயமாக சேர்த்த பணத்தை (வெள்ளைப் பணம்) வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே நன்றாக உறங்குவார்கள். ஆனால், கணக்கில் காட்டாத பணம் வைத்திருப்பவர்கள் நிம்மதியாக உறங்க முடியாமல் இருப்பதையும், வெளிப்படையாக புலம்புவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். எனவே, நாட்டைத் தூய்மையாக்கும் பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பிரதமர் மோடியின் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை திரைத்துறைக்கும் சிறப்பு சேர்க்கும். பிரதமரின் கறுப்புப் பணம் ஒழிப்பு நடவடிக்கைக்கு முதலில் வரவேற்பு அளித்தது திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய், “மோடியின் திட்டம் சிறப்பானதாக இருந்தபோதிலும் அது பொது மக்களை பெரும் சிரமத்துக்கு ஆழ்த்துவது வேதனை அளிக்கிறது” என்று குறைந்தபட்ச விமர்சனத்தையாவது முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும் பாஜக-வினர், மோடியின் ரூபாய் நோட்டு ஒழிப்பு திட்டத்தை எதிர்ப்பவர்கள் கறுப்புப் பண முதலைகள் என்றும் ஆதரிப்பவர்கள் தூய்மையானவர்கள் என்றும் வர்ணிப்பது ஆரோக்கியமான போக்கு அல்ல. இது மென்மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதுதான் உண்மை.

கருத்துகள் இல்லை: