சனி, 1 அக்டோபர், 2016

காவிரி.. கர்நாடக நீதிமன்ற அவமதிப்பு ... பின்வாங்கிய பால் நாரிமன்

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக வாதிடுவதிலிருந்து திடீரென ஃபாலி நாரிமன் பின்வாங்கியது அம்மாநிலத்திற்கு பின்னடைவாகிவிட்டது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தமிழக அரசின் இடைக்கால மனுவை, கடந்த 20ம் தேதி,விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்துக்கு 21 முதல் 27ம் தேதி வரை 6 ஆயிரம் கன அடி காவிரி நீரை கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் 30ம் தேதி (இன்று) வரை தமிழகத்துக்கு 6 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடுமாறு கடந்த 27ம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற இரு மாநில பிரதிநிதி களின் கூட்டத்திலும் கர்நாடகா இதே கருத்தில் பிடிவாதமாக இருந்தது.

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இக்கூட்டம் நடைபெற்றது என்பதால், அதில் எடுக்கப்பட்ட முடிவை மத்திய அரசு சமர்ப்பித்தது. இதையடுத்து உமா பாரதியும் கோர்ட்டுக்கு வந்திருந்தார். தமிழகம் சார்பில் சேகர் நாப்தே ஆஜரான நிலையில், கர்நாடகா சார்பில் ஃபாலி நாரிமன், வழக்கில் ஆஜரானார். நாரிமன் வாதிடுகையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா தன்னிடம் கொடுத்த கடிதத்தை அப்படியே வாசித்தார்.
சட்டசபை தீர்மானத்தின் அடிப்படையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க சித்தராமையா தயார் இல்லை என்றும், அதேநேரம் கோர்ட் மீது கர்நாடக அரசு, மிகுந்த மதிப்பு வைத்துள்ளதாகவும் நாரிமன் கூறினார்.
மேலும், கர்நாடக அரசு உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காத வரை, நான் கர்நாடகா தரப்பில் வாதிடப்போவதில்லை என்றும் நாரிமன் கூறிவிட்டார். இப்படி திடீரென, கர்நாடகாவை நாரிமன் கைவிட்டார்.
இதையடுத்தே, காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4ம் தேதிக்குள், அமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கனவே கூறியபடி நாரிமன் மேற்கொண்டு எதையும் வாதிடாமல் இருந்துவிட்டதால், கர்நாடகா இதற்கு ஒப்புக்கொண்டதை போல ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கர்நாடக முதல்வரின் சட்ட ஆலோசகர் பிரிஜேஷ் காலப்பா, டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “வழக்கறிஞர் என்பவரும், நீதிமன்றத்தின் ஒரு அங்கம். எனவே அவர் நீதிமன்ற உத்தரவை அரசு ஏற்றுக்கொள்ளாததை விரும்பவில்லை. எனவேதான் நாரிமன் வாதிடப்போவதில்லை என கூறிவிட்டார்” என்று தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற கோபத்தை எதிர்கொள்வதை தவிர்க்க அதன் உத்தரவை ஏற்று தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிடம் நாரிமன் கெஞ்சும் தொனியில் வேண்டுகோள் விடுத்திருந்தாராம்.
அதை அரசு ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதமாக தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீரும் தர முடியாது என்று கூறிவிட்டது.
இதுதான் நாரிமன் அதிருப்திக்கு காரணம் என்று கர்நாடக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.  tamilondindia.com

கருத்துகள் இல்லை: