திங்கள், 26 செப்டம்பர், 2016

கபாலி வரிவிலக்கிற்கு எதிராக புகார்


மின்னம்பலம்.காம் : ‘கபாலி’ திரைப்படம் இந்தியாவில் மட்டுமல்ல; உலகம் முழுக்க செய்த சாதனைகள் உங்களுக்குத் தெரியும். ஆனால், எவ்வளவு பெரிய வரலாற்றை எழுதினாலுமே, அதில் இடம்பெறும் சில கரும்புள்ளிகளை தவிர்க்கமுடியாது. அப்படி கபாலி படத்துக்கு ஏற்பட்டுள்ள கரும்புள்ளி, ‘வரிவிலக்கு’. குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்களுக்கு இதுபோன்று சர்டிஃபிகேட் வழங்கலாம். ஆனால், முழுக்க முழுக்க மலேசியாவில் கோர்ட் சூட்டுக்கும், ரூஃப் டாப் ஃபைட்டுக்கும் பெரும்பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்கு எதற்கு வரிவிலக்கு கிடைத்திருக்கிறதென்ற விஷயம் தெரிகிறதல்லவா? அதுதான் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணிக்கும் தோன்றியிருக்கிறது. அதை அப்படியே கடிதமாக எழுதி கையெழுத்து போட்டு, ஒரு ஆவணமாக சுற்றிவருகிறார் அவரது புகார் மனுவில்...

“கடந்த 2009ஆம் ஆண்டு, திமுக ஆட்சியில் திரைத்துறையின் வளர்ச்சிக்காக தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்கள், தமிழ் கலாச்சாரம், மொழி மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள், வன்முறை, ஆபாச காட்சிகள் இல்லாத திரைப்படங்கள் ஆகியவற்றுக்கு வரிவிலக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் வந்த அதிமுக அரசும் அதே நடைமுறையை பின்பற்றியதுடன், படங்களுக்கான வரிவிலக்கை பரிந்துரைக்கக் குழுவையும் அமைத்தது. இந்த குழுவானது அரசியல் அழுத்தம் காரணமாகவே, அதிகம் செலவு செய்து எடுக்கப்படும் படங்களுக்கும் வரிச்சலுகை அளித்து வருகிறது. ‘கபாலி’ போன்று பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிற படங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படவில்லை. ஆனால், நடிகர் ரஜினிகாந்த் நடித்ததற்காகவே அந்த படத்துக்குக் கேளிக்கை வரிச்சலுகை அளித்திருப்பதாகவே உணர முடிகிறது. ஆகையால், இந்தப் படத்துக்கு வரிவிலக்கு வழங்கிய தமிழக வணிக வரித்துறை மற்றும் பத்திரப் பதிவுத்துறையின் கடந்த ஜூலை 21ஆம் தேதியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். வரிவிலக்காக பெற்ற தொகையைக் கபாலி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவிடம் இருந்து வசூலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளார். கபாலி என்ற பெயரும்கூட கபாலீஸ்வரன் என்ற சமஸ்கிருதப் பெயரின் சுருக்கம்தான். இதற்கே வரிவிலக்கு கிடைத்திருக்கக் கூடாதல்லவா?!

கருத்துகள் இல்லை: