வெள்ளி, 29 ஜூலை, 2016

தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்.. விமர்சிப்பது எதிர்கட்சிகளின் உரிமை ! விஜயகாந்த் பிரேமலதா அவதூறு வழக்கு...

இரு தினங்களுக்குமுன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்திருந்தது நீதிமன்றம். இதையொட்டி, உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது விஜயகாந்த் தரப்பு. திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தேமுதிக பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா பேசும்போது, தமிழக அரசு வழங்கிய இலவசப் பொருட்கள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த விமர்சனங்கள் தமிழக முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்வகையில் இருந்ததாகக்கூறி, விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதாமீது திருப்பூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அப்போது, இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தேமுதிக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதாமீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது.

இந்தச் சூழலில், திருப்பூர் மாவட்டத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆஜராகாததால், அவர்கள்மீது பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதிலிருந்து மீள, டெல்லி மாநில தேமுதிக செயலாளரும் வழக்கறிஞருமான ஜி.எஸ்.மணி இன்று காலை உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் ஆஜரானார். ‘ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் அவதூறு வழக்குகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டநிலையில், தற்போது திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இது சட்டத்துக்குப் புறம்பானது. இதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று மணி வாதிட்டார். இம்மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி கூறினார். அதன்படி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகின்டன் நாரிமன் பெஞ்ச் இன்று காலை அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா, பசந்த் ஆகியோரும் மனுதாரர் சார்பில் ஜி.எஸ்.மணியும் ஆஜாராகினர். ஜி.எஸ்.மணி வாதிடும்போது, ‘உச்சநீதிமன்றத் தடை இருந்தபோதும், மாவட்ட நீதிமன்றம் எவ்வாறு பிடிவாரன்ட் பிறப்பித்தது?’ என்று கூறினார். இதற்கு தமிழக அரசு தரப்பில், ‘‘உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்குக்கு தடை விதிக்கப்படவில்லை’ என்று கூறினர். இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: தமிழகத்தில் மட்டும் ஏன் அரசை விமர்சித்தாலே அவதூறு வழக்கு தொடருகிறீர்கள்? அரசை விமர்சிப்பது என்பது எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை. மற்ற மாநிலங்களில் இதுபோன்று வழக்கு தொடருவதில்லை. தமிழகத்தில் மட்டும் ஏன் இவ்வளவு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன? விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோருக்கு திருப்பூர் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரன்டுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும், இதுவரை தமிழக முதல்வரின் சார்பாக அரசு வழக்கறிஞர்கள் யார்மீதெல்லாம் அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்களோ, அதன் மொத்தப் பட்டியலை இன்னும் 2 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறிவிட்டு, விசாரணையை செப்டம்பர் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையொட்டி, இந்த உத்தரவை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ஆளும்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சிகள்மீது அவதூறு வழக்கு தொடர்வதை முதலமைச்சர் ஜெயலலிதா அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. கடந்த ஆட்சியின்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான், ஆளும் கட்சியின் மக்கள் விரோதப்போக்கை சுட்டிக்காட்டி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதால் அதிமுக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதன்விளைவாக தமிழக அரசு என்மீதும், பிரேமலதா விஜயகாந்த்மீதும், தேமுதிக நிர்வாகிகள் மீதும் தமிழகம் முழுவதும் பல்வேறு அவதூறு வழக்குகள் தொடுத்து வருகிறது. அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி தேமுதிக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அவதூறு வழக்கை விசாரிக்க தடைவிதித்து உத்தரவிட்டது. மேலும், பிடிவாரன்ட் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது வரவேற்கக்கூடியதாக உள்ளது. அரசின் தவறுகளை விமர்சிப்பது எப்படி அவதூறாகும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும் என்ற கூற்றுக்கு ஏற்ப உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: