சனி, 30 ஜூலை, 2016

முஸ்லிம் மதத்துக்கு மாறுவோம்! : நாகை தலித் மக்கள் அறிவிப்பு


வழிபாட்டு உரிமையும், கோயிலில் சமத்துவமும் மறுக்கப்படும் தலித் மக்கள், இந்து மதத்தில் இருந்து வெளியேறி பிற மதங்களில் இணைகின்றனர். நாகப்பட்டினம் கோவில் ஒன்றில் திருவிழா நடத்த அனுமதி மறுத்த சாதி இந்துக்களுக்கு எதிராக, முஸ்லிம் மதத்துக்கு மாறுவோம் என்று அறிவித்துள்ளனர் நாகப்பட்டினம் அருகே உள்ள பழங்கள்ளிமேடு கிராம மக்கள்.
நாகை அருகேயுள்ள பழங்கள்ளிமேடு கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் 5 நாள் கோவில் திருவிழா நடைபெறுகிறது. இதில், ஒரு நாள் கோவில் திருவிழாவை நடத்தும் உரிமையைக் கோரி நிற்கிறார்கள் தலித் மக்கள். அது மட்டுமல்லாமல், கோவில் மண்டகப்படி ஏறும் உரிமை மறுக்கப்படுவதாகவும், தலைமுறை தலைமுறையாக மறுக்கப்படும் உரிமையை இனி அனுமதிக்க முடியாது, சரிக்குச் சமமான வழிபாட்டு உரிமை வேண்டும் அல்லது முஸ்லிம் மதத்துக்கு மாறுவோம் என்றும் அறிவித்துள்ளனர்.

“சாமி ஊர்வலம் வருமுங்க. ஆனா, அது தலித் சேரிக்குள்ள மட்டும் வராது. ஏன் வராதுன்னு கேட்டா, ‘அதுதான் வழக்கம். உங்களுக்கு அந்த உரிமை இல்லை’ங்குறாங்க. நாங்கள் இதுபற்றி கோவில் நிர்வாகத்துக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் பலமுறை மனு போட்டு விட்டோம். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை’’ என்கிறார் காளியப்பன்.
பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை 1957ஆம் ஆண்டு முதல் கள்ளிமேடு மக்கள் கொண்டாடி வருகின்றனர். 1976இல் இந்தக் கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு மாற்றப்பட்டபின்னர், அந்த ஆண்டிலிருந்துதான் ஆடி மாத கடைசியில் மண்டகப்படி திருவிழா கொண்டாடப்பட்டது. அதில், முதல் இரண்டு நாள் திருவிழாவை கோவில் நிர்வாகம் பார்த்துக் கொள்ளும். மற்ற மூன்று நாட்களும் தலித் அல்லாத மற்ற மதத்தினர் பார்த்துக்கொள்வார்கள். கள்ளிமேடு பஞ்சாயத்தில் 50% தலித் மக்கள் வாழ்கிறோம். 50% வாழக்கூடிய எங்களுக்கு திருவிழா நடக்கும் 5 நாட்களில், ஒரு நாளை ஒதுக்கித்தர முடியாவிட்டால் நாங்கள் ஏன் இந்த மதத்தில் இருக்க வேண்டும்? இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்டு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தலித் மக்களை சமாதானப்படுத்த முயன்று வருவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். ஆனால் “நாங்கள் மதம் மாறுவதும், மாறாமல் இந்து மதத்தில் தொடர்வதும் அதிகாரிகளின் கைகளில்தான் இருக்கிறது. வழிபடும் உரிமை இல்லை என்றால் நிச்சயம் மாறுவோம்” என்கிறார்கள் தலித் மக்கள்.   மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: