செவ்வாய், 26 ஜூலை, 2016

126 வழக்கறிஞர்கள் நீக்கம்,சென்னையில் குவியும் வழக்கறிஞர்கள்!


தமிழகத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தை தமிழக வழக்கறிஞர்கள் இன்று முற்றுகையிட இருந்த நிலையில் 126 தமிழக வழக்கறிஞர்களை இந்திய பார் கவுன்சில் இடை நீக்கம் செய்துள்ளது. பரவலாக தமிழகம் முழுவதும் நீக்கப்பட்டுள்ள இந்த வழக்கறிஞர்கள், போராட்டத்தை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட வழக்கறிஞர் போராட்டக் கூட்டு நடவடிக்கை குழுவைச் சார்ந்தவர்கள் என்பதால் போராட்டம் தீவிரமடைகிறது.
நீதித்துறைக்கு எதிராகவும் நீதிபதிகளுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்படும் வழக்கறிஞர்களுக்கு, நீதிமன்றமே தடைவிதிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

வழக்கறிஞர் சட்டத்தில் உயர்நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, தமிழக அரசுக்கு இந்த திருத்தம் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த மே 25ஆம் தேதி அரசிதழில் அத்திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.
தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் வக்கீல்கள் மீது பார் கவுன்சில் மட்டுமே இதுவரை நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த சட்டத்திருத்தத்தின்படி, வழக்கறிஞர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டால், அந்தந்த நீதிபதியே வக்கீல்களுக்குத் தடை விதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. இது தங்களது பணிச் சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்பதை உணர்ந்த வழக்கறிஞர்கள் போராட்டங்களை அறிவித்தனர். கோடை விடுமுறைக்குப்பின் நீதிமன்றம் வழக்கம்போல செயல்படத் தொடங்கிய, அடுத்த சில தினங்களில் எதிர்ப்பு அதிகமானது. இந்நிலையில், முதல்கட்டமாக கடந்த ஜுன் 6ஆம் தேதி, சென்னையில் மாநிலம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். ஆனாலும், இச்சட்டம் வாபஸ் பெறப்படவில்லை. இதனால் அடுத்தடுத்த தினங்களில் வழக்கறிஞர் போராட்டம் தொடர்கதையானது. இதைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கம் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மொத்தம் 245 வழக்கறிஞர்கள் சங்கங்கள் இணைந்து மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தன.
போராட்டத்தை கைவிடக்கோரி தலைமை நீதிபதிகளும், இந்திய பார் கவுன்சிலும் கோரிக்கையையும் எச்சரிக்கையையும் விடுத்தன. உயர்நீதிமன்ற நீதிபதிகளும் இச்சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்றார்கள். ஆனால், சட்டம் வாபஸ் பெற்றால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று அறிவித்த வழக்கறிஞர்கள் கடந்த ஜுன் 29 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ரயில் நிறுத்தப் போராட்டமும், ஜூலை 1ஆம் தேதி அனைத்து நீதிமன்றங்கள் முன்பு புதிய சட்டத்திருத்த நகல் எரிக்கும் போராட்டமும் நடத்தினர்.
இதையடுத்து டெல்லி சென்று தலைமை நீதிபதி, சட்டத்துறை அமைச்சர், பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ஆகிய முக்கியத் தலைவர்களைச் சந்தித்து புதிய சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் மனு கொடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களை வாபஸ் பெற வலியுறுத்தி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் இன்று (ஜூலை 25) உயர் நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் (நிர்வாகம்) வி.தேவநாதன், “ஜூலை 25ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற இருப்பதாக தெரிய வருகிறது. உயர்நீதிமன்ற வளாகம் உயர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், உயர்நீதிமன்றத்துக்கு வருபவர்களுக்கு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. வழக்கமாக சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனுமதிச் சீட்டு வழங்கப்படாது. ஏற்கெனவே 15 நாட்கள் அனுமதிச் சீட்டு பெற்றவர்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வழக்குகளில் நேரடியாக ஆஜராகும் மனுதாரர்கள், சம்பந்தப்பட்ட வழக்குகள் பட்டியலிடப்பட்டால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆட்கொணர்வு வழக்குகளில் மட்டும் மனுதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வழக்கு விசாரணைக்காக உள்ளே வரும் வழக்கறிஞர்கள் தங்களுக்கு வந்துள்ள குறுஞ்செய்தியைக் காட்டினால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். தெற்கு நுழைவாயில் தவிர, அனைத்து நுழைவுப் பாதைகளிலும் வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அன்றைய தினம் அவர்களது வழக்கு பட்டியலிடப்பட்டு இருக்க வேண்டும். எனவே, உயர்நீதிமன்றத்தில் நுழைபவர்களிடம் கடுமையானச் சோதனைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அறிக்கை விடுத்தார்.

(போராட்ட அறிவிப்பு)
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ள முற்றுகைப் போராட்டத்தை கைவிட மூத்த வழக்கறிஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, வி.டி.கோபாலன், எம்.ரவீந்திரன், எம்.வெங்கடாச்சலபதி, பி.வில்சன், என்.எல்.ராஜா ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், “ஐந்து நீதிபதிகள் அடங்கிய விதிகள் குழு வழக்கறிஞர் சட்டத்திருத்தம் தொடர்பாக ஒரு முடிவுக்கு வரும் வரை, அந்த திருத்தங்களின்படி வழக்கறிஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளரே அறிவித்துள்ளார். வரும் ஜூலை 29ஆம் தேதி பிற வழக்கறிஞர் சங்கங்களையும் அந்த குழுவினர் சந்தித்து கருத்துகளை கேட்க உள்ளனர். எனவே, வழக்கறிஞர் சங்கங்கள் நடத்த உள்ள உயர்நீதிமன்ற முற்றுகைப் போராட்டத்தை கைவிட வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழகம் முழுக்க ஏராளமான வழக்கறிஞர்கள் நேற்று மாலை முதல் சென்னையில் குவிய ஆரம்பித்தனர். தமிழகம் முழுவதும் இருந்து சுமார் இருபதாயிரம் வழக்கறிஞர்கள் சென்னையில் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அகில இந்திய பார் கவுன்சில், வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழுவில் உள்ள வழக்கறிஞர்கள் உட்பட மொத்தம் 126 வழக்கறிஞர்களை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கறிஞர்கள் எந்த நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பயிற்சி செய்யக்கூடாது என்றும், மேலும் வழக்கறிஞராகவே கருதப்படக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த இரு மாதங்களாக போராட்டங்கள் மூலம் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் அறிவழகனும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சென்னை மாநகர் மட்டுமின்றி மாநிலம் முழுக்க உள்ள முக்கிய வழக்கறிஞர்கள் பெயர்கள், இந்த இடை நீக்க பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற இந்திய பார் கவுன்சில் பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உயர்நீதிமன்றத்தைச் சுற்றி 1000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய பார் கவுன்சிலின் இந்த நடவடிக்கை தமிழகம் முழுக்க உள்ள வழக்கறிஞர்களை எரிச்சலூட்டி உள்ளது. இன்று இந்த போராட்டங்களை தமிழக அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதும் ஒரு முக்கியமான கேள்விதான்.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: