செவ்வாய், 26 ஜூலை, 2016

கலைஞர் : மாணவர்களின் கல்விக் கடனை அடைக்க தமிழக அரசு முன் வரவேண்டும்

கல்விக் கடனை அடைப்பதாக தேர்தல் நேரத்தில் உறுதிமொழி அளித்த அதிமுக அரசு, வங்கிகளில் மாணவர்கள் வாங்கியுள்ள கடனை அடைக்க முன் வரவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட கேள்வி- பதில் வடிவ அறிக்கையில், ''மாணவர்களின் படிப்புக்காக கல்விக் கடன் கொடுத்த வங்கிகள், தற்போது அதை வசூலிப்பதில் கடுமை காட்டுவதின் காரணமாக சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது மிகப் பெரிய கொடுமை. மாணவர்கள் படிப்புக்காக வங்கிகளில் கடன் பெற்றது உண்மைதான். வேலைக்குச் சென்றால் தான் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும். வேலையும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் மட்டும் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. பட்டம் பெற்ற மாணவர்களால் வங்கிக் கடனை கட்ட இயலவில்லை.

இந்த நிலையில்தான் இந்திய ஸ்டேட் வங்கி, தனது பங்கான 847 கோடி ரூபாய் கடனை வசூலிக்கும் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்று விட்டது. அதாவது மொத்த தொகையில் 40 சதவிகிதம் செலுத்திய அம்பானி கம்பெனி தற்போது கந்து வட்டிக்காரனைப் போல மாணவர்களை நெருக்குகிறார்கள்.
மாணவர்களில் சிலர் வேறு வழியின்றி தற்கொலையை நாடுகிறார்கள். கல்விக் கடனை அடைப்பதாக தேர்தல் நேரத்தில் உறுதிமொழி அளித்த அதிமுக அரசு உடனடியாக இந்த மாணவர்களின் கல்விக் கடனுக்கு தாங்களே பொறுப் பேற்றுக் கொண்டு, வங்கிகளில் மாணவர்கள் வாங்கியுள்ள கடனை அடைக்க முன் வரவேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார். tamilthehindu.com

கருத்துகள் இல்லை: