செவ்வாய், 26 ஜூலை, 2016

மெட்ரோ ரெயில் திட்டம் திமுகதான் கொண்டுவந்தது... பச்சை பொய் சொல்லும் முதல்வர் ஜெயலலிதா

சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘நம்முடைய முதலமைச்சர் ஜெயலலிதா, வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் - விம்கோ நகர் வரையிலான சென்னை மெட்ரோ ரயிலின் முதல்கட்ட நீட்டிப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அந்த விழாவிலே பேசும்போது, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு வித்திட்டது அதிமுக அரசுதான் என்ற பழைய பொய்யையே அவர் அங்கே மீண்டும் கூறியுள்ளார். ஒரு பொய்யையே திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற கோயபல்ஸ் தத்துவத்தைப் பின்பற்றுகிறார்.
சென்னையில் ‘மெட்ரோ ரயில்’ திட்டத்தைச் செயல்படுத்த திமுக 2006ஆம் ஆண்டு எனது தலைமையில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் தமிழக அமைச்சரவையில் அப்போதுதான் முடிவெடுக்கப்பட்டது.

இத்திட்டம் என்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் ‘சிறப்பு முயற்சி’த் திட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இத்திட்டம் துணை முதலமைச்சராக இருந்த தம்பி ஸ்டாலின் பொறுப்புக்கு மாற்றப்பட்டது. விரிவான திட்ட அறிக்கை 1-11-2007இல் கிடைக்கப்பெற்று, 7-11-2007 அன்று தமிழக அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ‘சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்’ என்கிற சிறப்பு வகை பொதுத்துறை நிறுவனத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி, இந்தியக் கம்பெனிகள் சட்டத்தின் கீழ் 3-12-2007 அன்று பதிவு செய்தது. இத்திட்டத்துக்கான மதிப்பீடு ரூ.14,600 கோடி. திட்டச்செலவில் 59 சதவிகிதம் ஜப்பான் அரசின் அனைத்து நாடுகள் கூட்டுறவுக்கான அமைப்பின் நிதி உதவி மூலம் மேற்கொள்ளப்படும். கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம் மத்திய அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையே 21-11-2008 அன்று டோக்கியோ நகரில் கையெழுத்தானது. அதுவும் திமுக ஆட்சியிலேதான். மத்திய அரசு திட்டச்செலவில் 15 சதவிகிதத்தை பங்குத் தொகையாகவும், 5 சதவிகிதத்தைக் கடனாகவும் வழங்கும். மாநில அரசின் பங்கு 15 சதவிகிதம் மற்றும் 5.78 சதவிகித சார்நிலைக் கடனாகவும் வழங்கும். பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, 28-1-2009 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதுவும் திமுக ஆட்சியிலேதான். இந்த மெட்ரோ ரயில் திட்டம் 45.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு இரண்டு வழித்தடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. வண்ணாரப்பேட்டை - சென்னை விமான நிலையம் இடையே 23.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல் வழித்தடமும், சென்டிரல் - பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவுக்கு இரண்டாவது வழித்தடமும் அமைக்கப்படுகிறது. மெட்ரோ ரயிலானது இரண்டு வழித்தடங்களிலும் செல்வதற்கு ஒன்றும், வருவதற்கு ஒன்றுமாக இரண்டு பாதைகள் நவீன முறையில் அமைக்கப்படுகின்றன. இதையெல்லாம் அப்படியே மூடி மறைத்து விட்டு, அதிமுக ஆட்சியிலேதான் மெட்ரோ திட்டத்துக்கு வித்திடப்பட்டது என்றால் யார் அதை நம்புவார்கள்?
முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்டம் கூடாது என்றும், மோனோ ரயில் திட்டத்தைத் தான் நடைமுறைப்படுத்தப் போவதாகவும் கூறியது உண்மைதான். ஆனால், பின்னர் நிலைமையை உணர்ந்து கொண்டு, ஆளுநர் உரையிலேயே, வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூருக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார்கள்.
மெட்ரோ திட்டத்தைத் தொடக்கத்தில் வரவேற்காத ஜெயலலிதா பின்னர் பிரதமரைச் சந்தித்த நேரத்தில், மெட்ரோ ரயிலின் 76 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இரண்டாம் பாகப் பணிகளை நிறைவேற்ற ரூபாய் 36 ஆயிரத்து 100 கோடி தேவைப்படும் நிலையில், மத்திய அரசின் முழு உதவி நாடப்படுகிறது என்று தெரிவித்தது உண்மைதான். அதை நான் மறுக்கவே இல்லை. திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அதிமுக ஆட்சியில்தான் வித்திடப்பட்டது என்று கூறுவது, யாரோ பெற்ற பிள்ளைக்கு உரிமை கொண்டாடுவதைப் போல என்பதுதான் உண்மை. முதலில் மெட்ரோ திட்டத்தை ஏற்காத ஜெயலலிதா, பின்னர் வேறு வழியின்றி அதனை ஏற்றுக் கொண்டார் என்பதும் உண்மை’ என்று அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.  minnambalam.com

கருத்துகள் இல்லை: