வெள்ளி, 11 டிசம்பர், 2015

மக்களை இணைக்கும் திட்டத்தை முடக்காதீங்க: 'பேஸ்புக்' வலியுறுத்தல்

புதுடில்லி:'மக்களை இணைக்க உதவும் திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டாம்' என, முன்னணி சமூக வலைதள நிறுவனமான, 'பேஸ்புக்' கூறியுள்ளது.
இந்தியாவில், குறிப்பிட்ட சில இணையதளங்களையும் சமூக வலைதளங்களையும், மொபைல் வாடிக்கையாளர்கள் இலவசமாக பார்க்கும் வகையிலான முயற்சியை, 'பேஸ்புக்' நிறுவனம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து துவக்கியது. 'இலவச அடிப்படை' எனப்படும் இத்திட்டத்தால், இணைய சமநிலை பாதிக்கப்படுவதாகக் கூறி கடும் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து, 'டிராய்' எனப்படும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், இத்திட்டத்தை நிறுத்தி வைத்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளுக்கு பின், ஆய்வறிக்கையை டிராய் தயாரித்துள்ளது.


இந்நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் மொபைல் மற்றும் உளகளாவிய அணுகு கொள்கை பிரிவு துணைத் தலைவர் கெவின் மார்டின் வெளியிட்ட அறிக்கை விவரம்:மக்களை இணைக்க உதவும் அடிப்படை திட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவோ, தடை செய்யவே கூடாது என வலியுறுத்துகிறோம். இதுதொடர்பான ஆலோசனைகளில் பங்கேற்றவர்கள், தடை விதிப்பதால் ஏற்படும் பரந்த பின்விளைவுகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்திய மக்களுக்கு, நியாயமான சிறப்பான வகையில் குறைந்த விலையில் நவீன அம்சங்களுடன் கூடிய இன்டர்நெட் சேவைகளை கிடைக்கச் செய்ய டிராய் அமைப்புடன் சேர்ந்து செயலாற்ற தயாராக உள்ளோம். இலவச இன்டர்நெட் அளிப்பதால், ஏராளமான மக்களை ஒருங்கிணைக்க முடியும்.

இவ்விஷயத்தில், முன்வைக்கப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வாக, பாரபட்சமின்றி யாரையும் புறந்தள்ளாமல், எல்லா நிறுவனங்களையும் சேர்க்கும் வகையில், 'இலவச அடிப்படை' திட்டத்தில் மாற்றம் செய்யத் தயாராக உள்ளோம். இத்திட்டம், ஏற்கனவே ஏராளமான மக்களுக்கு உதவியாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.இவ்வாறு கெவின் மார்டின் கூறியுள்ளார்.

முஸ்லிம்களுக்கு ஆதரவு:

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அமைதியான பாதுகாப்பான சூழலை அவர்களுக்கு ஏற்படுத்தவும் ஆதரவு அளிப்பதாக, 'பேஸ்புக்' நிறுவனரும், தலைவருமான மார்க் ஸூக்கர்பெர்க் கூறியுள்ளார்.

பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியதாவது:

உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் மக்களுக்கு, என் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு பின், முஸ்லிம்களுக்கு எதிரான கருத்து உருவாகி வருவதால், அவர்களின் மனதில் எழும் பய உணர்வை கற்பனை செய்ய முடிகிறது. பிறர் செய்யும் தவறுகளுக்கு, அப்பாவி முஸ்லிம்கள் பலியாகக் கூடாது.இவ்வாறு மார்க் ஸூக்கர்பெர்க் கூறியுள்ளார். தினமலர்.com

கருத்துகள் இல்லை: