புதன், 9 டிசம்பர், 2015

சென்னையில் நிகழ்ந்திருப்பது செயற்கைப் பேரழிவு!


1) அபாய அளவை எட்டிய பிறகும் செம்பரம்பாக்கம் நீரை திறந்துவிடாமல் யாருடைய உத்தரவுக்காக அதிகாரிகள் காத்திருந்தார்கள்?

2) இப்போது நடந்திருக்கும் பேரழிவுக்கு யாராவது பொறுப்பேற்பார்களா?

3) இனியாவது நீர்த்தேக்கங்களை பாதுகாப்பான முறையில் நிர்வகிக்க அரசு முறையான வழிகாட்டுதல்களை உருவாக்குமா?

4) மழைவெள்ளக் காலத்தில் இதுபோல பெரியளவில் தேக்கங்களிலிருந்து நீரை வெளியேற்றும்போது மக்களுக்கு தகுந்த காலத்தில் எச்சரிக்க ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா?
luckylookonline.com; கடந்த வாரத்தில் சென்னையை சின்னாபின்னமாக்கிய வெள்ளம், இயற்கைப் பேரழிவு அல்ல. செம்பரம்பாக்கம் ஏரி நீரை வெளியேற்றுவதில் அரசு நிர்வாகம் செய்த குளறுபடியே சென்னை நகரை மூழ்கடித்தது. நவம்பர் இறுதியில் சர்வதேச வானிலை ஆய்வு அமைப்புகள் தமிழக அரசு தலைமையை எச்சரித்திருந்தன. டிசம்பர் 1 மற்றும் இரண்டு தேதிகளில் 500 மி.மீ அளவுக்கு சென்னையில் மழை பொழியலாம் என்று அவ்வமைப்புகள் கணித்திருந்தன. இதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை செயலருக்கு செம்பரம்பாக்கம் நீரின் அளவை 22 அடியிலிருந்து 18 அடியாக குறைக்கச் சொல்லி பரிந்துரைத்தார்கள். இதன் மூலம் மேலும் பொழியும் கனமழையை எதிர்கொண்டு அடையாறு ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய ஆபத்தினை தவிர்க்கலாம் என்றார்கள். ஆனாலும், நவம்பர் 26 முதல் 29ந் தேதி வரை அடையாறு ஆற்றில் மிகக்குறைவான நீரேதான் பாய்ந்துக் கொண்டிருந்தது.


ஏனெனில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பரிந்துரை கோப்பு, கோட்டையில் தூங்கிக் கொண்டிருந்தது. நமக்குக் கிடைத்த தகவல்களின் படி பொதுப்பணித்துறை செயலர், தலைமைச் செயலரின் உத்தரவுக்காக காத்திருந்தார். தலைமைச் செயலர் யாருடைய அனுமதிக்காக காத்திருந்தார் என்பது இன்றளவும் மர்மமாகவே இருக்கிறது. இதனால்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சரியான திட்டமிடுதல் இல்லாமல் பக்ராநங்கல் அணையை திறந்துவிட்டபோது பஞ்சாப் எத்தகைய பேரழிவைச் சந்தித்ததோ அதற்கு இணையான பேரழிவினை இன்று சென்னை சந்தித்திருக்கிறது.

செம்பரம்பாக்கம் நீர்த்தேக்க அணை மொத்தமாக நிரம்பி, தண்ணீர் தளும்பும்வரை அதன் கதவு திறக்கப்படவில்லை. சென்னையிலும் ஏற்கனவே கணித்தபடி கனமழை பொழியத் தொடங்கியது. “டிசம்பர் ஒன்று அன்று இரவு நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 33,500 கன அடி நீரைதான் திறந்துவிட்டோம் என்று மாநில அரசு கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்கிறது. ஆனால், உண்மை நிலவரம் திறந்துவிடப்பட்ட நீர் இதைவிட இருமடங்கு என்பதுதான். கூடவே அத்தனூர் ஏரியின் நீரும் விநாடிக்கு 5,000 கன அடி அளவுக்கு திறந்துவிடப்பட்டதால் அடையாறு அழிவாறாக ஆனது” என்பது பொதுப்பணித்துறை வட்டாரத்திலிருந்து நமக்கு கிடைத்திருக்கும் தகவல்.
“இந்த மோசமான நீர் நிர்வாகக் குளறுபடிகளின் காரணமாகவே டிசம்பர் 2 மற்றும் 3 இரு தேதிகளிலும் அடையாறில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேலாக நீர் வெள்ளமென பயணித்தது” என்று வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் மூத்த ஐஏஸ் அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் அவர், “தாங்களாகவே முடிவெடுக்க தைரியமில்லாத முதுகெலும்பில்லாத அதிகாரிகளை பெற்றிருப்பதற்கான பலனைதான் சென்னை நகரம் அனுபவித்திருக்கிறது. இந்த துரதிருஷ்ட வேளையிலும் நல்ல வேளையாக முழுக்கொள்ளளவை எட்டிய நீர்த்தேக்கம் உடைந்து பாய்ந்து மொத்த ஊர்களையும் நாசமாக்கவில்லை. அதுவரை நிம்மதி” என்றார்.

“சென்னையிலும் புறநகரிலும் ஏற்பட்டிருக்கும் இந்த கொடுமையான பாதிப்பை, செம்பரம்பாக்கம் தண்ணீரை வெளியேற்றுவதில் ஒழுங்கான நிர்வாகத்தை கையாண்டிருந்தால் தவிர்த்திருக்கலாம்” என்று மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மெண்ட் ஸ்டடீஸைச் சேர்ந்த புரொபஸர் எஸ்.ஜனகராஜன் சொல்கிறார். “செம்பரம்பாக்கம் ஏரியை அரசு தனியான ஒரு நீர்த்தேக்கமாக மட்டும் கருதக்கூடாது. அந்த ஏரி அடையாறு ஆற்றோடு மட்டுமின்றி மேலும் தோராயமாக 200 நீர்நிலைகளோடு தொடர்புடையது. அதனால்தான் விநாடிக்கு 33,500 கன அடி நீரை அங்கிருந்து திறந்துவிட்டாலும் கூட, அந்நீர் சைதாப்பேட்டையை அடையாறு வழியாக அடையும்போது 60,000 கன அடியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. நிர்வாகத்துக்கு இந்த இயல்பான நிகழ்வு தெரிந்துத் தொலைக்காததால் மக்கள் அதற்கான விலையை தந்திருக்கிறார்கள்” என்றும் அவர் விளக்கினார்.

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களில் மட்டும் ஏரி, குளம், ஆறு என்று உத்தேசமாக 3,600 நீர்நிலைகள் உண்டு. இவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக (நதிநீர் இணைப்பு மாதிரி) செய்துவிட்டால் தோராயமாக 30 ஆயிரம் மில்லியன் கன அடி நீரை இவற்றில் தேக்க முடியும். மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் வராமலும் எதிர்காலத்தில் காக்க முடியும் என்கிற யோசனையையும் ஜனகராஜன் முன்வைக்கிறார்.
இந்த பேரழிவின் விளைவு இவ்வளவு மோசமாக இருப்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மக்களுக்கு -– குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு - எவ்வித வழிகாட்டுதலோ எச்சரிக்கையோ விடுக்கப்படவில்லை. மேலும், சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகள் அத்தனை பேருடைய செல்போனும் அணைத்துவைக்கச் சொல்லி ‘யாராலோ’ அறிவுறுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. வயர்லெஸ் மூலம் மட்டுமே அவர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் அவதிக்குள்ளான மக்கள் உடனடியாக உள்ளூர் காவல்துறையினரின் உதவியை கோர முடியாத நிலை ஏற்பட்டது.

இதைப்பற்றியெல்லாம் விளக்கங்களை கேட்க தலைமைச் செயலரையும், பொதுப்பணித்துறைச் செயலரையும் தொடர்புகொள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா எடுத்த அத்தனை முயற்சிகளும் பலனை எட்ட முடியவில்லை. விடையறிய முடியாமல் நம் முன் நிற்கும் கேள்விகள் இவைதான்.

1) அபாய அளவை எட்டிய பிறகும் செம்பரம்பாக்கம் நீரை திறந்துவிடாமல் யாருடைய உத்தரவுக்காக அதிகாரிகள் காத்திருந்தார்கள்?

2) இப்போது நடந்திருக்கும் பேரழிவுக்கு யாராவது பொறுப்பேற்பார்களா?

3) இனியாவது நீர்த்தேக்கங்களை பாதுகாப்பான முறையில் நிர்வகிக்க அரசு முறையான வழிகாட்டுதல்களை உருவாக்குமா?

4) மழைவெள்ளக் காலத்தில் இதுபோல பெரியளவில் தேக்கங்களிலிருந்து நீரை வெளியேற்றும்போது மக்களுக்கு தகுந்த காலத்தில் எச்சரிக்க ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா?


- 09-12-15 அன்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் வெளிவந்திருக்கும் செய்திக் கட்டுரையின் தமிழாக்கம்!

கருத்துகள் இல்லை: