வியாழன், 10 டிசம்பர், 2015

ராகுல் : நேஷனல் ஹெரால்டு’ வழக்கு விவகாரம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை

புதுடெல்லி ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை வழக்கு விவகாரம், 100 சதவீதம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். ஆனால் அதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை கைப்பற்றும் நோக்கத்தில், அதை காங்கிரஸ் கட்சியின் நிதியை பயன்படுத்தி விலை கொடுத்து வாங்கியதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் 5 பேர் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கில் அவர்கள் வரும் 19–ந் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

‘100 சதவீதம் பழிவாங்கும் நடவடிக்கை’ இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் புயலை கிளப்பி வருகிறது. இது மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசின் பழி வாங்கும் செயல் என குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘‘பிரதமர் அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்பட்ட 100 சதவீத அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான் இது. ஆனாலும், நீதித்துறை மீது நாங்கள் முழுமையான நம்பிக்கை வைத்துள்ளோம்’’ என கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, ‘‘அவர்களின் (மத்திய அரசு) அரசியல் பாதை இது. எப்படி இருப்பினும், இறுதியில் வாய்மையே வெல்லும்’’ என்றார்.
மத்திய அரசு மறுப்பு ஆனால் இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுபற்றி அரசின் சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் பிரதாப் ரூடி கூறியதாவது:–
நேஷனல் ஹெரால்டு வழக்கு விவகாரத்தில் பாராளுமன்றத்தில் பேசுவதற்கு ராகுல் காந்திக்கு துணிச்சல் இல்லை.
பாராளுமன்றம் செயல்படவிடாமல் இடையூறு ஏற்படுத்துவதற்கு அவர்தான் முக்கிய காரணம். அவருக்கு எதிராகவும், சோனியா காந்திக்கு எதிராகவும் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அவர்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஹீரோ ஆக முயற்சிக்கிறார்கள்.
அவர்கள் தைரியம் இருந்தால், பாராளுமன்றத்துக்கு வெளியே சொல்வதை, உள்ளே வந்து சொல்லட்டும்.
‘ஆதாரம் காட்ட வேண்டும்’ நாங்கள் ராகுல் காந்திக்கு கூறுகிறோம். அவருக்கு துணிச்சல் இருந்தால், அவரிடம் நேர்மை இருந்தால், அவர் அவரது கட்சியின் தலைவராக இருந்தால், அவர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும். நீதித்துறைக்கு எதிராக அவர் கூறிய கருத்துகளுக்கு உரிய ஆதாரத்தை காட்ட வேண்டும். அரசுக்கு எதிராகவும், பிரதமர் அலுவலகத்துக்கு எதிராகவும் கூறியுள்ள கருத்துக்கு உரிய ஆதாரத்தை காட்ட வேண்டும். அவர் சபைக்கு வந்து, ஆதாரத்துடன் பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே போன்று மற்றொரு மத்திய மந்திரியான நிதின் கட்காரி கருத்து தெரிவிக்கையில், ‘‘இந்த விஷயத்தில் அரசும் சரி, பாராளுமன்றமும் சரி, செய்வதற்கு ஒன்றுமில்லை. காங்கிரஸ் கட்சி, நீதிமன்றத்தில்தான் தீர்வு கண்டுகொள்ள வேண்டும்’’ என கூறினார்.  dailtythanthi.com

கருத்துகள் இல்லை: