சென்னை: தமிழகத்தில் பெய்த பெருமழை, பல முன்னணி நடிகர்களின் வேஷங்களை
கலைத்துவிட்டது. அதேநேரம், யாரும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்த பல சிறு
நடிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து நெகிழ வைத்துவிட்டனர்.
பாய்ஸ் படத்தின் மூலம் பிரபலமானவர் சித்தார்த். ஆனால் தமிழ் திரையுலகில்
பெருமளவுக்கு சோபிக்கவில்லை. சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டாவில்தான் மக்கள்
இவரை நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்த்தனர்.
எப்.எம். ரேடியோவில் தொகுப்பாளராக பணியாற்றுபவர் பாலாஜி. சமீபகாலத்தில் சில
படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார்.
டாப் ஹீரோக்கள்
தமிழ் சினிமா சமீபகாலத்தில் மறந்துவிட்ட காமெடி கலைஞன் மயில்சாமி. ஒரு
காலத்தில் இளம் பெண்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டு இப்போது கண்டுகொள்ளாமல்
விடப்பட்டவர் நடிகர் மோகன். குண்டக்க மண்டக்கததான் பேசுவார், வேறு எதுவும்
உருப்படியாக தெரியாது என்று மட்டுமே நினைத்திருந்த பார்த்தீபன் போன்ற
நடிகர்கள் இன்று நிஜ உலகின் டாப் ஹீரோக்களாக ஜொலிக்கிறார்கள்.
மார்தட்டியவர்கள்
மழை நேரத்தில் சென்னையில் இவர்கள் ஆற்றிய பணிகள் அத்தனை மகத்துவமானது.
இப்போதுதான், திரையுலகில் எட்டிப்பார்க்கும் இமாம் அண்ணாச்சிகூட,
முட்டிக்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று கோயம்பேடு பகுதியில் உணவு
பொருட்களை வழங்கி வந்துள்ளார். ஆனால், தமிழகத்தில் கோடிக்கணக்கில்
ரசிகர்களை வைத்துள்ளதாக மார் தட்டும், நடிகர்கள் என்ன செய்தார்கள்?
ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள்
இந்த முன்னணி நடிகர்களுக்குத்தான் எத்தனை ரசிகர் மன்றங்கள், எத்தனை
பாலாபிஷேங்கள், எத்தனை கட்-அவுட்டுகள். அத்தனையும் செய்ய ஆளிருந்தும்,
முன்னின்று கட்டளை மட்டுமாவது இடுவதற்கும் அந்த நட்சத்திரங்களுக்கு
மனதில்லை. ஒரு சில நடிகர்கள் திரைமறைவில் உதவிகளை முடுக்கிவிடுவதாக
கிசுகிசுக்கப்படுகிறது. இது என்ன கஞ்சா வளர்க்கும் தோட்டமா, யாருக்கும்
தெரியாமல் மறைத்து வைக்க? செய்யும் உதவியை, (ஒருவேளை செய்தால்)
வெளிப்படையாக செய்தால், எத்தனையோ ரசிகர்களுக்கு அது ஊக்கம்
அளித்திருக்கும். ஆனால் நடக்கவில்லை.
காணோம்
கோடிக்கணக்கான ரசிகர்கள் வைத்துள்ளதாக கூறி, பெருமை பீற்றிக்கொள்ளும் இளம்
உச்ச நட்சத்திரங்கள் இதுவரை நிவாரண நிதி எதையும் அறிவிக்கவில்லை. கமல்
ரூ.15 லட்சமும், ரஜினி ரூ.10 லட்சமும் அறிவித்துள்ளனர். சூர்யா, விஷால்
போன்றோரும் நிதி கொடுத்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் சதா காலமும் எங்க
நடிகர்தான் பெரிய ஆள் என சண்டை போடுவோர் இப்போது அந்த நடிகர்களை எங்கே என
ஹேஷ்டேக் போட்டு தேடும் நிலையில்தான் உள்ளனர்.
அள்ளிக்கொடுக்கும் டோலிவுட்
அதேநேரம், தெலுங்கு நடிகர்கள் எவ்வளவே பரவாயில்லை. அள்ளி அள்ளி
கொடுத்துக்கொண்டுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டிலோ, முன்னணி நடிகர்களுக்கு
கிள்ளிக்கொடுக்க கூட கை நடுங்குகிறது
பசிக்கு பால்
ஒரு புதுப்படம் அறிவிப்பு வந்தாலே ஊருக்கு ஆயிரம் கட்-அவுட் வைத்து, மாஸ்
காட்டும் ரசிகர்களை, அந்த பணத்தை நிவாரணப் பணிக்கு கொடுங்கள் என வாய்
திறந்து கூற ஸ்டார்களுக்கு மனதுவரவில்லை. வெள்ளத்தில் தவிக்கும்
குழந்தைகளுக்கு பால் வாங்கி கொடுக்க மனமில்லாத இந்த ஸ்டார்கள்
கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்களை என்னவென்று சொல்வது
Read more at:://tamil.oneindia.com
Read more at:://tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக