வெள்ளி, 11 டிசம்பர், 2015

ஐ.டி., வளாகத்தில் 20 பேர் பலி? போலீசார் தீவிர விசாரணை

சென்னையில், 65 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும், டி.எல்.எப்., தகவல் தொழில்நுட்ப வளாகத்தில் 20 பேர் உயிரிழந்துவிட்டதாக பீதி கிளம்பியுள்ளது. எனினும், அதை நிர்வாகம் மறுத்துள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர். >சென்னை நந்தம்பாக்கம், போரூர் - மவுன்ட் பூந்தமல்லி சாலையில், 42 ஏக்கர் பரப்பளவில், டி. எல்.எப்., தகவல் தொழில்நுட்ப வளாகம் உள்ளது. துப்புரவு ஊழியர்கள்அங்கு, 10 மாடிகள் கொண்ட ௧௦ கட்டடங்கள் உள்ளன. அவற்றில், 'சாம்சங்' உள்ளிட்ட, 57 பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. மென்பொறியாளர்கள், நிர்வாக பிரிவு அதிகாரிகள், பாதுகாப்பு காவலாளிகள், துப்புரவு ஊழியர்கள் என, 65 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.


கட்டடங்களுக்கு அடியில், 23 ஏக்கர் பரப்பளவில், மூன்று தளங்கள் உள்ளன. அவற்றில், தகவல் கட்டுப்பாட்டு அலுவலகம், மின்வினியோக நிலையம், துப்புரவு ஊழியர்கள், பாதுகாவலர்கள் தங்கும் இடம், வாகன நிறுத்தம் ஆகியவை உள்ளன. கனமழையால், கடந்த, நவ., ௩௦ம் தேதி இரவு முதல், செம்பரம்பாக்கம் மற்றும் போரூர் ஏரிகளில் இருந்து, மணப்பாக்கம், ராமாபுரம் கால்வாய்கள் வழியாக சீறிப்பாய்ந்த வெள்ளம், டி.எல்.எப்., வாகன நிறுத்தங்களுக்குள் புகுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சில மணிநேரங்களில், பூமிக்கடியில் உள்ள மூன்று தளங்களும் வெள்ளத்தில் மூழ்கின.

அதையடுத்து, ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அடுத்தடுத்த நாட்களில், அவர்கள் பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் நிறுத்திச் சென்றிருந்த, 600 கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நீரில் மூழ்கி விட்டன. இந்த நிலையில், 'டி.எல்.எப்., வாகன நிறுத்த வெள்ளத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்து விட்டனர். சடலங்களை இரவோடு இரவாக, அந்த நிறுவனம் வெளியேற்றிவிட்டது' என, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதனால், நேற்று, டி.எல்.எப்., வளாகத்தில் செய்தியாளர்கள் குவிந்தனர். பின், போலீஸ் உயரதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் நேரடி ஆய்வு நடத்தினர். ஆனால், இறப்பு ஏதும் நடக்கவில்லை என, கூறப்படுகிறது.தற்போது, முதல் அடுக்கில் தேங்கி இருந்த வெள்ளம் மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளது. மற்ற இரு அடுக்குகளில் இருந்து, 49 ராட்சத மின் மோட்டார்கள் மூலம், வெள்ளத்தை வெளியேற்றும் பணி நடக்கிறது.

வதந்தி:

இதுகுறித்து, டி.எல்.எப்., துணை தலைவர் மற்றும் விற்பனை பிரிவு தென்மண்டல தலைவர், இ.டேவிட் கூறியதாவது: மழை வெள்ளம் சூழ்ந்ததும் ஊழியர்களை பத்திரமாக வெளியேற்றி விட்டோம். அவர்கள் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்திபின், தகவல் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் சாவியை கொடுத்துவிடுவர். அதனால், உடனடியாக, 360 கார்களை நீரில் மூழ்காமல் காத்துவிட்டோம். பாதுகாப்பு கருதியே பணியாளர்கள் அனுமதிக்கப் படவில்லை. உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது என்பது வதந்தி.இவ்வாறு டேவிட் கூறினார்.

அடித்தள கட்டுமானங்களுக்கு கட்டுப்பாடு வருமா? சி.எம்.டி.ஏ.,வுக்கு வல்லுனர்கள் பரிந்துரை


அடுக்குமாடி கட்டுமான திட்டங்களில், தரைத் தளத்துக்கு கீழே, அதிக எண்ணிக்கையில் அடித்தளங்களை கட்டுவதற்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஆலோசிக்க வேண்டும் என, நகரமைப்பு வல்லுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ஆண்டுக்கு, 80 அடுக்குமாடி கட்டுமான திட்டங்களுக்கும், 500க்கும் மேற்பட்ட சிறப்பு கட்டடங்களுக்கும் சி.எம்.டி.ஏ., அனுமதி அளிக்கிறது. இதில், கட்டடங்களின் உயரம் கருதி, அவற்றுக்கு நிலத்தில் பாறை இருக்கும் பகுதி வரையிலான ஆழத்தில், அஸ்திவார துாண்கள் அமைக்க பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு, அஸ்திவாரம் அமைக்க, 10 முதல் 20 மீ., ஆழம் வரை துாண்கள் அமைக்கப்படும்.

அடித்தளங்கள்:

தரைக்கு கீழே இவ்வளவு ஆழத்துக்கு துாண்கள் அமைக்கும் கட்டுமான நிறுவனங்கள், அந்த பகுதியை வீணாக்க விரும்புவதில்லை. எனவே, அந்த பகுதியை, 'பேஸ்மென்ட் புளோர்' எனப்படும் அடித்தளங்களாக கட்டுகின்றன. மொத்த கட்டடத்தின் பயன்பாடு அடிப்படையில், அடித்தளங்களின் எண்ணிக்கையை, கட்டுமான நிறுவனங்கள் அதிகரிக்கின்றன.

பெரும்பாலும், அந்த பகுதியை வாகன நிறுத்துமிடமாகவே பல நிறுவனங்கள் பயன் படுத்தினாலும், சில இடங்களில், உணவகம், அலுவலகம், பணியாளர் ஓய்வு அறை, மின்சார இணைப்புகள் அறையாக பயன்படுத்தப்படுகின்றன. தரைத் தளத்தில் இருந்து, இதற்கு செல்ல 'லிப்ட்' மற்றும் சாய்வு தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில், சமீபத்திய மழை, வெள்ளத்தில், சி.எம்.டி.ஏ., அலுவலக வளாகம் உள்ளிட்ட பல்வேறு பிரதான கட்டடங்களில், அடித்தளங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால், ஒட்டுமொத்த கட்டடத்தின் பயன்பாடும், முழுமையாக முடங்கும் நிலை ஏற்பட்டது.

கட்டுப்பாடு:

இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:சென்னையில், ராமாபுரம், அண்ணா சாலை, வேளச்சேரி, சைதாப்பேட்டை, மணப்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் என, பல்வேறு இடங்களில் அடுக்குமாடி வளாகங்களில், மூன்று அடுக்கு வரை அடித்தளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

அவற்றில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடக்கிறது. அடித்தளத்துக்கு எந்தவித கட்டுப்பாடும் இதுவரை இல்லை. எனவே, புதிய கட்டுமான திட்டங்களில், அடித்தளங்களை அனுமதிக்கும் போது, அந்த கட்டடம் அமையும் இடத்தின் புவியியல் தன்மை குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும்.

இதற்காக, வளர்ச்சி விதிகளில் தேவையான திருத்தங்களை சி.எம்.டி.ஏ., செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -  தினமலர்.com

கருத்துகள் இல்லை: