வெள்ளி, 3 ஜூலை, 2015

இளையராஜா :நான் கேட்பவன் அல்ல? கொடுப்பவன் ? அடப்பார்ரா கொடுமையை ! ரொம்ப ரொம்ப நல்லவராமே? பணத்தாசை கொஞ்சம்கூட ....

மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தலைமைச் சங்கம் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ’’நான் உங்களிடம் பணம் கேட்டு வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். நான் எப்போதும் கொடுப்பவன் கேட்பவன் அல்ல. அது உங்களுக்கே தெரியும். எத்தனையோ ஆயிரம் பாடல்களை உங்களுக்காக வழங்கியவன். இப்போதைக்கு நான் சந்திக்க வந்திருக்கின்ற காரணம் என்னவென்றால், என்னுடைய பாடல்களையோ மற்றவர்கள் பாடல்களையோ நீங்கள் பாடும்போது சட்டப்படி அதற்கு அனுமதி பெற வேண்டும் என்பது நடைமுறை. இதை உங்களிடம் இருந்து பெறுவதற்காக இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள் இணைந்து உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஐ.பி.ஆர்.எஸ். இதைச் சேகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஐ.பி.ஆர்.எஸ் நிர்வாகம் தவறான கணக்குகளைக் காட்டி அந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள என் போன்றவர்களை ஏமாற்றி வருகிறது.
என் பாடல்களுக்காக அவர்கள் வசூலிப்பதில் பத்து சதவீதம் கூட எனக்கு வந்து சேர்வதில்லை. எந்த இசை அமைப்பாளருக்கும் நியாயமாகச் சேர வேண்டியவை சென்று சேர்வதில்லை. என்னைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் இசை நிகழ்ச்சியில் உங்கள் பாடல்களைத்தான் ஐம்பது சதவீதத்துக்கு மேல் பாடுகிறேன் என்று சொல்கிறீர்கள். அப்படிப் பார்த்தால் எனக்கு ஐந்து சதவீதமோ பத்து சதவீதமோ கொடுத்து விட்டு அந்தச் செலவு, இந்தச் செலவு என்று கணக்கு காட்டி ஏமாற்றுகிறார்கள் ஐ.பி.ஆர்.எஸ் நிர்வாகத்தினர். எனக்கே இப்படி என்றால் மற்ற இசையமைப்பாளர்களுக்கு என்ன கொடுப்பார்கள். அதேபோல் அவர்களிடம் இத்தனையாவது வருடம் வந்த பாடலுக்கு இத்தனை ரூபாய் என்று நிர்ணயம் செய்துள்ளீர்களா? இந்த உறுப்பினரின் பாடலுக்கு இத்தனை ரூபாய் என்று விதிமுறை இருக்கிறதா? இதுபோன்ற கேள்விகள் எதற்குமே விடை இல்லை. அவர்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டுமாம். என்ன நியாயம் இது? அதனால் அந்த நிர்வாகத்தின் செயல் பாடுகளின் மேல் நம்பிக்கை இல்லாததால் அந்த அமைப்பிலிருந்து நான் விலகிக் கொள்ள முடிவு செய்து விட்டேன். எவனோ ஒருவன் என் பெயரைச் சொல்லி பணம் வசூலித்து உங்களையும் என்னையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். அதனால் உங்களிடமே நேரடியாக இதைச் சொல்லி என் பாடல்களுக்கான தொகையை என் அலுவலகத்தில் நேரடியாக செலுத்த சொல்லலாம் என யோசித்து உங்களை அழைத்தேன். அதேபோல் இவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்று நான் உங்களைக் கட்டாயப்ப டுத்தவில்லை. நீங்கள் சேர்ந்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன் நான் கேட்பவன் அல்ல கொடுப்பவன். நானும் இதுபோன்ற மேடைகளில் இசை நிகழ்ச்சி, நாடகத்தின் பின்னணி இசை என்று வாசித்து இசையமைப்பாளனாக வந்ததால் உங்கள் உணர்வுகள் எனக்கு நன்றாகத் தெரியும். கண்ணுக்குத் தெரியாமல் ஒரு அமைப்பு நம்மை ஏமாற்றிக் கொண்டிருப்பதால் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். மற்றவர்களின் பாடல்களுக்கும் நீங்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் அமர்ந்து பேசி முடிவெடுங்கள். குறிப்பாக ஒரு நிகழ்ச்சியில் எத்தனை பாடல்கள் பாடுகிறீர்கள், அதற்கு எவ்வளவு கொடுக்கலாம் என்று நீங்களும் சினி மியூசிக் யூனியனுடன் அமர்ந்து பேசி முடிவெடுக்கலாம். ஐ.பி.ஆர்.எஸ் மூலம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்தக் கூட்டத்தின் மூலம் இந்தப் பிரச்னையை நாமே தீர்த்துக் கொள்வோம். இல்லாவிட்டால் நாமே ஒரு புதிய அமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம். இப்போதே கூட ஒரு கமிட்டியைப் போடுங்கள். நாம் ஏன் மற்றவர்களிடம் ஏமாற வேண்டும்? நீங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுங்கள் அப்போதுதான் ஐ.பி.ஆர்.எஸ் போன்ற அமைப்புகளை சரியாக எதிர்கொள்ள முடியும். மீண்டும் ஒரு முறை வேண்டுமானாலும் இதுபோல் ஒரு கூட்டத்தினை ஏற்பாடு செய்யுங்கள். நான் மீண்டும் வருகை தந்து இது பற்றி உங்களிடம் பேசுகிறேன். பாபநாசம் சிவன், டி.ஆர்.மகாலிங்கம், ஜி.ராமநாதன், தக்ஷிணா மூர்த்தி, எம்.எஸ்.ஞானமணி, எஸ்.எம் சுப்பையா நாயுடு, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இன்றைக்கு இருக்கின்ற இசையமைப்பாளர்கள் வரை அனைவருக்கும் பலன் கிடைக்கட்டும். நம்முடன் இருந்தவர்களும் இருப்பவர்களும் பயன்பெற நாம் பாடுபடுவோம். இங்கே அறிவிப்பாளர் பேசும்போது ஏழை இசைக் கலைஞர்கள் என்று குறிப்பிட்டார். இசைக்கலைஞர்கள் எவருமே ஏழை இல்லை உலகிலேயே தினமும் தான் செய்யும் தொழிலை மகிழ்ச்சியுடன் செய்பவர்கள் இசைக் கலைஞர்களே. சாப்பாடு இல்லாவிட்டால்கூட ஒரு பாடலை தனக்குள்ளாகவே பாடி சந்தோஷப்பட்டு திருப்தி அடைபவன் இசைக் கலைஞன். உதாரணத்துக்கு ஷிவ சத்யாய.... பாடலைப் பாடிப் பாருங்கள் உங்களுக்குத் தெரியும். மற்ற மனிதர்களைக் காட்டிலும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் நாம் மட்டுமே என்பது புரியும். இந்தக் கூட்டத்தினை ஏற்பாடு செய்த எல்லோருக்கும் நன்றி. இந்த ஐ.பி.ஆர்.எஸ் விஷயத்துக்கு விரைவாக நீங்கள் முடிவெடுங்கள்.’ என்றார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை: