புதன், 1 ஜூலை, 2015

ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு: கையெழுத்திட அன்பழகன் மறுப்பு?

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு ஆவணங்களில், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் கையெழுத்திட மறுத்ததாக, அக்கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.முதல்வர் ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில், 'அப்பீல்' செய்துள்ளது. இதன் மீதான விசாரணை, இம்மாதம் வருகிறது. 'ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து, தி.மு.க., தரப்பிலும், உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப்படும்' என, மே மாதம் நடந்த தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, 'அப்பீல்' மனுவை, தி.மு.க., வழக்கறிஞர்கள் தயாரித்தனர். தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் பெயரில், அந்த மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே, முதல்வர் ஜெயலலிதா மீதான இந்த வழக்கில், அன்பழகனே, ஒரு, 'பார்ட்டி'யாக இருப்பதால், 'அப்பீல்' மனுவையும், அவர் தான் தாக்கல் செய்ய வேண்டும்.


தி.மு.க., தரப்பில், இதற்கான வக்காலத்தில், அன்பழகனிடம் கையெழுத்து வாங்க முயன்ற போது, அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. பின், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், முதன்மை செயலர் துரைமுருகன் ஆகியோர், அன்பழகன் வீட்டுக்கே நேரடியாக சென்று, அவரை சமாதானப்படுத்தி, வக்காலத்தில் கையெழுத்து வாங்கியதாக, கட்சி
வட்டாரங்கள் கூறுகின்றன.

- நமது நிருபர் -dinamalar.com

கருத்துகள் இல்லை: