வியாழன், 2 ஜூலை, 2015

பிரவீன் குமார் + சக்சேனா +குமாரசாமி +தத்து ஜெயலலிதா! இனி இதுதான் நிரந்தர வெற்றி கூட்டணி!

c32-Recovered343ஐந்தாவது முறையாக ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார் என்பதை ஏதோ வரலாற்றுச் சாதனையாக ஜெயா டிவி தொடர்ந்து தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தது.     பதவியேற்பு விழாவே அவசர கதியில் அள்ளித் தெளித்த கோலமாய் முடிந்தது.   அதையடுத்து ஆர்கே நகர் இடைத்தேர்தல்.

முந்தைய தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் மற்றும் தற்போதைய தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாஇந்த இடைத்தேர்தலை, முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்தன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டும், ஜெயலலிதாவை அவமானப்படுத்த கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தாமல், என்னமோ இந்தத் தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெறப்போவது போல போட்டியிட்டது.     இந்தத் தேர்தலில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் இத்தேர்தலை புறக்கணித்த நிலையில், இடதுசாரிகளும் புறக்கணித்திருந்தால், ஜெயலலிதாவுக்கு அது பெருத்த அவமானமாக அமைந்திருக்கும்.  ட்ராபிக் ராமசாமியை எதிர்த்து போட்டியிட்டதாக ஆகியிருக்கும்.   ஆனால், என்ன காரணத்தாலோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டு, ஜெயலலிதா நடத்திய இந்த போலி தேர்தலுக்கு அங்கீகாரம் அளித்தது.

வழக்கமாக தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரிகளைப் நியமனம் செய்கையில் நேர்மையான அதிகாரிகளாக நியமனம் செய்யும்.   ஆனால், இந்த முறை தமிழக தேர்தல் அதிகாரியாக ஊழல் பேர்வழி என்று பெயரெடுத்த சந்தீப் சக்சேனாவை நியமித்தது தேர்தல் ஆணையம்.   அவர் அவரைப் பற்றி உலவும் செய்திகள் உண்மை என்பது போலவே நடந்து கொண்டார்.    ஜெயலலிதாவே வேட்புமனு தாக்கல் செய்ய நேரில் வரத் தயாராக இருந்தாலும், இவராக முன்வந்து, ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.  வேட்பாளர் மனுதாக்கல் செய்ய நேரில் வரவேண்டியது இல்லை என்றார்.    அதன் பின்னர், ஆர்.கே நகரில் நடந்த அராஜகங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.   தேர்தல் நேரத்தில் எவ்விதமான புதிய பணிகளும் செய்யக் கூடாது என்ற விதிகள் காற்றில் பறக்க விடப்பட்டன.   ஆர்கே நகரில் திட்டப்பணிகள் எவ்வளவு நடைபெற்றன என்று ஊடகங்கள் பட்டியலிட்டன. ஆனால், அரசு அதிகாரிகள் எது குறித்தும் கவலைப்படாமல், ஆர்கே நகர் முழுக்க, வேகத்தடைகளை அகற்றுவது, புதிய சாலைகள் போடுவது என்று பரபரப்பாக அதிமுக அடிமைகளைப் போல செயல்பட்டனர்.   இவற்றையெல்லாம் கண்டு, கண்டிக்க வேண்டிய சந்தீப் சக்சேனா, ஓ.பன்னீர்செல்வத்தை விட விசுவாசமான அடிமையாக மாறிப்போனார்.

முந்தைய தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் மற்றும் தற்போதைய தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா
பிரச்சாரத்துக்கு சென்ற ஜெயலலிதாவோ, தான் ஒரு முன்னாள் நடிகை என்பதை நிரூபிக்கும் விதமாக, கூசாமல் பொய்யுரைத்து, உருக்கமாக நடித்தார்.    அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 4992 மெகாவாட்டுக்கான மின் திட்டங்கள் புதிதாக செயல் படுத்தப்பட்டுள்ளன என்று கூசாமல் கூறினார்.  இதில் தேர்தலில் வெல்வது என்பது வேறு, பிறரை தோற்கடிப்பது என்பது வேறு என்று தத்துவம் வேறு. அரசு நிர்வாகம் முழுமையாக துஷ்பிரயோகப் படுத்தப்படுகிறது என்பது குறித்து துளியும் கவலையின்றி, பிரச்சாரம் செய்து சென்றார் ஜெயலலிதா.
மீண்டும் முதல்வராக பதவியேற்றது முதல், வாரம் ஒரு முறை காணொலி காட்சிகள் மூலம் ரிமோட்டை அழுத்துவது தவிர வேறு எந்த பணியையும் முதலமைச்சராக ஜெயலலிதா ஆற்றவேயில்லை என்பதுதான் உண்மை.   பத்தாயிரத்துக்கும் மேலான கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன.   எந்த முடிவுகளும் எடுக்காமல் நிர்வாகம் முடங்கிப் போயுள்ளது.     வாரத்துக்கு ஒரு முறையோ, அல்லது இரு முறையோ தலைமைச் செயலகம் செல்வது.  எந்த பத்திரிக்கையாளர்களையும் உள்ளே விடாமல், ஜெயா டிவியை மட்டுமே அனுமதித்து நடத்தப்படும் காணொலி காட்சிகள்.    வெறும் ரிமோட்டை அமுக்கி, காணொலி காட்சி மூலமாகவே ஆட்சி நடத்தும் ஒரே முதலமைச்சராக ஜெயலலிதா திகழ்ந்து வருகிறார்.
13079PJune---26---A-BIG
ஜெயலலிதா உடல்நிலையில் பெரும் சிக்கல் இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்களில் கூறுகிறார்கள்.    கடந்த முறை மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டத்தையே நேரில் சென்று சிறப்பித்த ஜெயலலிதாவால், 14 ஆயிரம் கோடி செலவில் தொடங்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தை நேரில் சென்று திறந்து வைக்கக் கூட முடியாமல், ரிமோட்டை அழுத்தி திறந்து வைத்தார்.       இன்று ஒரு இன்ச் கூட நடக்க முடியாமல் ஏராளமான பிணிகளோடு இருக்கும் ஜெயலலிதாதான், கடந்த திமுக ஆட்சியின்போது, திமுக தலைவர் கருணாநிதியை “ஒரு மூட்டையைப் போல தூக்குகிறார்கள்” என்று அவதூறாக விமர்சித்தார்.    30 நிமிடங்கள் தொடர்ந்து ஒரு இடத்தில் அமர்ந்திருக்கக் கூட முடியாத நிலையில் அவரது உடல்நிலை இருக்கிறது.
ஆனால், இந்த முடியாத நிலையிலும் கூட, ஜெயலலிதா நடத்தும் வசூல் வேட்டை துளியும் குறைந்தபாடில்லை.   மாறாக வசூல் மேலும் அதிகரித்திருக்கிறது.    வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் செலவழிப்பதற்காக 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  20 கோடி வாக்காளர்களுக்கு தருவதற்காகவும், 5 கோடி தேர்தல் செலவுக்காகவும் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.    இப்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதால் மட்டுமே எளிதில் வெற்றி பெறலாம் என்று திட்டமிட்டுள்ளார் ஜெயலலிதா.
ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு நடந்த அன்று போடப்பட்ட கள்ள ஓட்டுக்களே, ஜெயலலிதா ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்வதற்கான காரணம்.   பகல் 12 மணிக்கெல்லாம் வாக்காளர்கள் வருகை மிகவும் குறைந்து காணப்பட்டது தெரிய வந்தது.  இதையடுத்து, அதிமுகவினர் அனைவரும், கள்ள ஓட்டுக்கள் போடும்படி உத்தரவு போடப்பட்டது.  சென்னையில் உள்ள 100 கவுன்சிலர்களும் தவறாமல் வாக்களித்துள்ளனர்.    யார் வந்தாலும் அன்று வாக்களிக்க வசதிகள் ஏற்பாடு செய்து தரப்பட்டது.   தேர்தல் நடந்த அன்று ஒரு பூத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை விட, பதிவான வாக்குகள் அதிகம் என்பதே, கள்ள ஓட்டுக்கள் எவ்வளவு பதியப்பட்டுள்ளன என்பதற்கான தெளிவான சான்று.   இந்த ஒரே காரணத்துக்காக ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்யலாம்.  ஆனால், தேர்தல் ஆணையமும், தமிழக தேர்தல் அதிகாரியும் பாராமுகமாக உள்ளனர்.
சந்தீப் சக்சேனா, தேர்தல் அதிகாரியாக தொடர்ந்தாரேயென்றால், வரக்கூடிய 2016 பொதுத் தேர்தலும், நியாயமான முறைப்படி நடக்காது என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.    இந்திய தேர்தல் ஆணையம், உடனடியாக தலையிட்டு, சந்தீப் சக்சேனாவை மாற்றியே தீர வேண்டும்.
ஆர்கே நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதா, இந்தத் தேர்தல் நீங்கள் விரும்பாத தேர்தல் என்று கூறினார்.    இது யாரும் விரும்பாத தேர்தல்தான்.  ஆனால், இந்த தேர்தல் நடப்பதற்கே காரணமாக இருந்தது ஜெயலலிதாதான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.    தேவையற்ற ஒரு தேர்தலை மக்கள் மீது திணித்து, அதன் காரணமாக ஏற்படும் தேர்தல் பிரச்சாரத்தில் ‘தேவையற்ற தேர்தல்’ என்று லாவணி பாடுவது, முதலைக் கண்ணீரேயன்றி வேறு அல்ல.
Jayala4r4lithaa 11

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும் மேல் முறையீடு விசாரணைக்கு வரலாம்.  கூட்டல் பிழை காரணமாக தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட சாத்தியக் கூறுகள் உள்ளன.   அப்படி தடை விதிக்கப்பட்டால் மீண்டும் பதவியிழக்க நேரிடுமே என்பது குறித்து துளியும் கவலைப்படாமல் இத்தேர்தலை ஜெயலலிதா சந்தித்துள்ளார்.   ஸ்ரீரங்கத்தில் மறு தேர்தல் நடத்த, மிக மிக சாவகாசமாக நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையம், ஆர்கே நகரில் தேர்தல் நடத்த, அவசர அவசரமாக துடிக்கிறது.     அதிமுக அடிமைகளில் ஒருவராக மாறிப்போயுள்ள சந்தீப் சக்சேனாதான், விரைவாக தேர்தல் நடத்துவதற்கு மத்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், “ஆர்கே நகர் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை.  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சக்சேனா, அதிமுக வட்டச் செயலாளர் போல செயல்பட்டார்.  இதனால் தேர்தல் அதிகாரிக்கு எதிராக மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்.   அவர் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.  திமுக பொருளாளர் முக.ஸ்டாலின், “ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டன என்பதற்கு ஆர்கே நகர் இடைத்தேர்தல் ஒரு உதாரணம்.  எண்ணற்ற தேர்தல் விதிமீறல்கள் நடைபெற்றும் அவற்றை கண்டிக்காமலும், கண்டும் காணாமலும் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது.   தேர்தல் ஆணையமும், காவல்துறையும், கூட்டணி அமைத்து ஆளுங்கட்சிக்கு உதவி செய்து அமைதி காத்தன.   மொத்தத்தில் இடைத்தேர்தல் ஒரு ஏமாற்று நாடகமாகவே அமைந்து விட்டது.   ஜனநாயக தேர்தல் நடைமுறைகளை நொறுக்கித் தள்ள ஆளும்கட்சிக்கு அனுமதி அளித்த தேர்தல் ஆணையத்தைப் பார்த்து வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறது.   இதுதான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடைபெற்ற பயங்கரவாதம் என்பதை பார்க்கும்போது, வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தல் எப்படி நடக்கும் என்பதை கற்பனை செய்து கொள்ள வேண்டியதுதான்” என்றார்.
நக்கீரன் இதழில், கள்ள ஓட்டு போட்ட அதிமுக கவுன்சிலர்கள் அனைவரின் படமும் வெளிவந்துள்ளது. இந்த ஒரே காரணத்துக்காக இந்த தேர்தலை தாரளமாக ரத்து செய்யலாம்.  அதிமுக அடிமையான சந்தீப் சக்சேனா இருக்கும் வரையில் அது நடக்காதுதான்.   ஆனால் இந்த வெற்றியைத்தான் இமாலய வெற்றியாகவும், சாதனை வெற்றியாகவும் ஊடகங்கள் கொண்டாடுகின்றன.
சமீபத்தில், இந்தியாவில் நெருக்கடி நிலை செயல்படுத்தப்பட்டு நாற்பதாவது ஆண்டு அனுசரிக்கப்பட்டது.   அது தொடர்பாக ஒரு நூல் எழுதி வெளியிட்டுள்ள பத்திரிக்கையாளர் கூமி கபூர், நெருக்கடி நிலை அமலில் இருந்து, பத்திரிக்கைகள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட்ட அந்த காலத்தில் கூட, ராம்நாத் கோயங்கா எப்படி அரசை எதிர்த்து எப்படி சிறப்பான பணியைச் செய்தார் என்று குறிப்பிட்டிருந்தார். தற்போதைய தமிழக ஊடகங்களோ அதற்கு தலைகீழாக இருக்கின்றன.  ஜெயலலிதா அரசின் சீர்க்கேட்டை பட்டியலிட வேண்டியது ஊடகங்களே.     நிர்வாகம் எப்படி சீழ்பிடித்த நிலையில் உள்ளது…. ஜெயலலிதா உள்ளிட்டோர் எப்படி வசூல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.   தொழில் துறையில் தமிழகம் எப்படி பின்தங்கியுள்ளது என்பதையெல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய ஊடகங்கள், வாய் மூடி மவுனியாய் இருப்பதோடு ஜெயலலிதாவின் துதிபாடுவதில் குறியாய் இருக்கின்றன.
ஒரு மூத்த பத்திரிக்கையாளர், இந்தத் தேர்தல் மற்றும், அதன் பின் நடக்கும் கூத்துக்கள் குறித்து இவ்வாறு கூறினார். “உண்மையிலேயே ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்க சாதனைதான்.  அது கள்ள ஓட்டோ, நல்ல ஓட்டோ.   அது கொண்டாடப்பட வேண்டிய வெற்றிதான்.  ஆனால், இந்த வெற்றிக் கொண்டாட்டம், உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டும்தான் பொருள்படும்.  ஒரு வேளை பெங்களுரு வழக்குக்கு தடை விதிக்கப்பட்டால், இந்தக் கொண்டாட்டங்கள் பொருளற்றதாகப் போய் விடும்.  இப்போது எல்லா முடிவுகளும் உச்சநீதிமன்றத்தின் கரங்களில் உள்ளன.  உச்சநீதிமன்றம்தான் இதற்கெல்லாம் முடிவு சொல்ல வேண்டும்” என்றார்.
????????????????????????????????????
திமுக தலைவர் கருணாநிதி, மிக மிக சிறப்பாக, அதிமுகவின் இந்த வெற்றிக் கொண்டாட்டங்களை வர்ணித்திருந்தார். “அனைத்து அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டு, அத்தனை அமைச்சர்களையும் அல்லும் பகலும் தெருவிலே ஓட விட்டு, பிரதான எதிர்க் கட்சிகள் எல்லாம் “துஷ்டனைக் கண்டால் தூர விலகு” என்பதற்கொப்ப களத்தில் நிற்காத நிலையில், தேர்தல் கமிஷனின் தோளில் கை போட்டுக் கொண்டு பெற்றது வெற்றி தானா? நீதிபதி குமாரசாமி கூட்டுத் தொகையைத் தவறாகக் குறிப்பிட்டு அளித்த தீர்ப்பைப் போன்றது தான் இந்த இடைத் தேர்தல் வெற்றி! வெறும் காற்றில் வாள் வீசி வீராப்பு பேசி எகிறிக் குதிப்பதைப் போன்றது தான் இந்த வெற்றியும்! ”
2011ல் வாக்களித்த தமிழக மக்களுக்கும், தற்போது இடைத்தேர்தலில் வாக்களித்த ஆர்கே நகர் தொகுதி மக்களுக்கும், பெரிய அல்வாவை அளித்து விட்டு, மீண்டும் கொடநாடு சென்று ஓய்வெடுக்க உள்ளார் இந்த கொடநாடு கோமளவல்லி.
இந்த மாதம் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.   வழக்கமாக ஒரு மாதத்துக்கு நடக்கும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர், ஜெயலலிதாவின் உடல்நிலை காரணமாக ஒரு வாரத்துக்கு சுருக்கப்பட இருக்கிறது.  எதிர்க்கட்சிகள் அனைவரையும் வெளியேற்றி விட்டு, ஒரு தினத்துக்கு நான்கு துறைகளின் மான்ய கோரிக்கை என்று நடைபெற உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனநாயகத்தின் அனைத்து விழுமியங்களையும், ஒற்றை ஆளாக நின்று ஜெயலலிதா காலில் போட்டு நசுக்கி வருகிறார்.   சட்டமன்றம், நீதித்துறை, என்று ஜனநாயகத்தின் அனைத்து தூண்களையும் உளுத்து உதிரச் செய்யும் வேலைகளில் ஜெயலலிதா ஈடுபட்டு வருகிறார். இதற்கான விலையை ஜெயலலிதா கொடுத்தே தீர வேண்டும்.
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும். savukkunews.com

கருத்துகள் இல்லை: