சனி, 4 ஜூலை, 2015

ஹேமமாலினிக்கு வி.ஐ.பி சிகிச்சை..குழந்தையை இழந்த குடும்பத்தினர் வேதனை

ஜெய்ப்பூர் : கார் விபத்தில் சிக்கிய பா.ஜ.க. எம்.பி. ஹேமமாலினிக்கு வி.ஐ.பி. சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஆனால் தங்களுக்கு சிறியி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விபத்தில் காயமடைந்த குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். பிரபல இந்தி நடிகையும், பா.ஜனதா எம்.பி.யுமான ஹேமமாலினி நேற்று இரவு உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் இருந்து ஜெய்ப்பூர் நகருக்கு பரத்பூர் வழியாக தனது உதவியாளருடன் காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரது ஓட்டுநர் ரமேஷ்சந்த் தாகூர் ஓட்டினார். இவர்களது கார் ஆக்ரா-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தவுசா நகர் அருகே வந்தபோது எதிரே வந்த ஆல்டோ கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் 4 வயதான சோனம் (வயது4) என்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். 66 வயது ஹேமமாலினி, எதிரே வந்த காரில் இருந்த ஹனுமான் ஹந்தல்வால் சிங், அவருடைய மனைவி ஷிகா, 5 வயதான சோமில், சீமா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து ஹேமமாலினி ஜெய்ப்பூரில் உள்ள பிரபல போர்டிஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மற்ற நால்வரும் தவுசாவில் உள்ள எஸ்.எம்.எஸ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நெற்றியில் படுகாயம் அடைந்த ஹேமமாலினிக்கு நேற்று இரவே சி.டி.ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. மற்ற பரிசோதனைகளும் செய்யப்பட்டன. அப்போது, அவருடைய மூக்கின் சுவாசப்பாதை எலும்பில் லேசான முறிவு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். பின்னர், சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவினர் ஹேமமாலினிக்கு மயக்க மருந்து கொடுத்து 2 மணி நேரம் அறுவை சிகிச்சையை நடத்தினர். மேலும் நெற்றியில் ஏற்பட்ட வெட்டுக்காயங்களுக்கு தையலும் போடப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்பு அவர் நலமாக இருப்பதாகவும், திரவ உணவு சாப்பிட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹேமமாலினியை அவருடைய மகள் ஏக்தா தியோல், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதனிடையே விபத்தில் சிக்கிய இன்னொரு காரை ஓட்டி வந்த ஹனுமான் சிங், தவுசாவில் கோத்வாலி தானா போலீசாரிடம் அளித்த புகாரின்பேரில் ஹேமமாலினியின் கார் ஓட்டுநர் ரமேஷ் சந்த் தாகூரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர் மீது படுவேகமாக காரை ஓட்டியது, அலட்சியத்துடன் காரை செலுத்தியது, மரணத்தை ஏற்படுத்தியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. விபத்தில் சிக்கிய 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நிகழ்ந்த போது, சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரும், மருத்துவ ஊழியர்களும் கூட, முதலில் ஹேமமாலினியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்புவதில் தான் அக்கறை செலுத்தியதாக, விபத்தில் சிக்கியவர்கள் கூறியுள்ளனர். விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 வயது பெண் குழந்தையையோ, தங்களையே மருத்துவமனையில் சேர்க்க யாரும் முதலில் முயற்சிக்கவில்லை என்று காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அதே போல, ஹேமமாலினியை மிகப்பெரிய தனியார் மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறை, பலத்த காயமடைந்தவர்களை மிகச் சிறிய மருத்துவமனை ஒன்றில், சேர்த்துள்ளனர். பிறகுதான், அவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக ஜெய்ப்பூர் எஸ்எம்எஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் குற்றசாட்டு எழுந்துள்ளது. ஒரே விபத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு 2 விதமான சிகிச்சை நடந்தது. ஹேமாமாலினி உடனையாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார். எங்கள் குடும்பதிற்கு சிகிச்சை அளிப்பதில் மிகவும் தாமதம் செய்தனர் என ஹனுமான் சிங்கின் உறவினர்கள் குமுறுகின்றனர். உயிரிழந்த தங்கள் மகள் குறித்து ஹேமமாலினி ஒருவார்த்தை கூட விசாரிக்கவில்லை என்றும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

Read more at  tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: