வெள்ளி, 8 மே, 2015

உஷார்....ஷாப்பிங் மால்களில் காத்திருக்கும் 'சதுரங்க வேட்டை' மோசடி!


சதுரங்கவேட்டை' என்ற தமிழ்த்  திரைப்படத்தில் கண்ணில் எதிர்ப்படும் அப்பாவி மக்களை, போகிற போக்கில் ஏமாற்றி பணம் கொள்ளையடித்துச் செல்வார் கதை நாயகன்.& ஆனால் இது போன்ற நுட்பமான ஏமாற்று நிகழ்வுகள் நமக்கும் நேர்கிறபோதுதான், இப்போதைய நவீன கொள்ளைக்காரர்கள் குறித்து தெரிய வருகிறது. நேற்று முன்தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல மாலில் உள்ள பசாரில்  எனது குடும்பத்தினருடன் பொருட்களை  வாங்கிக் கொண்டிருந்தேன். அங்குள்ள ஒருவர் ஏதோ கோடைகால குலுக்கல்  போட்டிக்காக எனது பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை குறித்துக்  கொண்டார் இந்நிலையில் நேற்று  காலை எனக்கு 044-43069996 என்ற எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பேசிய நபர் தனது பெயர் தேவா என்றும், எனது பெயர் Lucky Draw போட்டியில் தேர்வு செய்யபட்டுள்ளதாகவும் கூறினார். எனக்கு இன்ப அதிர்ச்சி.


அதனால் சற்று உணர்ச்சிவசப்பட்ட நான் அவரிடம் அதை பற்றி நன்கு விசாரித்தேன். இந்த ஆண்டு 25 குடும்பத்தினரை மட்டும் தேர்வு செய்துள்ளதாகவும், அதில் எனது குடும்பமும் அடங்கும் என்றும் கூறினார். மேலும் பரிசாக 5 இரவுகள் 6 நாட்கள் அடங்கிய Holiday Package -ஐ,  இன்று மாலைக்குள் சென்னையில் உள்ள Spencer Plaza வில் உள்ள பிரபல  Club அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் எனது மனைவியுடன் வந்து பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

அவர் மீது சந்தேகம் கொண்ட நான்  பொருட்கள் வாங்கிய கடைக்கு போன் செய்து விசாரித்தேன். அவர்களும் இந்த தகவலை உறுதிப்படுத்தினர். அவர்களை நம்பிய நான், அவசரமாக ஒரு ஓட்டுனரை ஏற்பாடு செய்து எனது குடும்பத்தினருடன்  காரில் சென்றேன். செல்லும் வழியிலேயே முதலில் போன் மூலம் பேசிய தேவா என்பவர் மறுபடியும் போன் செய்து, விழா முடிவடைய இருப்பதாகவும் இன்னும் 15 நிமிடங்களுக்குள் வருமாறு அவசரப்படுத்தினார்.

இதனையடுத்து அடித்துப்பிடித்துக் கொண்டு அவசர அவசரமாக அங்கு சென்ற எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்குள்ள வட்ட மேசையில் எங்களை அமரவைத்து, மூன்று பேர் Wins கிளப் நிறுவனத்தைப்  பற்றியும், அவர்களிடம் உள்ள Holiday Package களைப்  பெற்று கொள்ளுமாறும்  எங்களை ஒரு மணி நேரம் மிக அழகாக மூளைச்  சலவை செய்தனர்.

அதற்காக அவர்கள், எங்களிடம் கேட்ட தொகை ருபாய் 55,000. மிக நேர்த்தியாக பாசத்தோடு எங்களிடம் ஆங்கிலத்திலும் தமிழிலும் இனிமையாகப் பேசி பணம் வாங்க முயற்சித்தனர். எனக்கு எதோ ஒன்று தவறு என்று பட,  சற்றே சுதாரித்துகொண்ட நான் எனக்கு அதில் விருப்பமில்லை என்று தெளிவாகக்  கூறிவிட்டேன்.

அவர்கள் இறுதியாக 2 நிமிடம் காத்திருந்து பரிசை பெற்றுச் செல்லுமாறு கூறினர். காத்திருந்த எங்களுக்கு கிடைத்த பரிசு, 150 ரூபாய்  மதிப்புள்ள ஒரு Bowl Set மற்றும் ஏழு நாட்கள் தங்கக் கூடிய ஒரு Gift Coupon. அந்த Gift Coupon-ஐ உபயோகிக்க நான் அவர்களுக்கு ரூபாய் 8000 செலுத்த வேண்டுமாம். என்ன கொடுமைடா சாமி...இப்படியுமா ஏமாற்று வாங்க?

எச்சரிக்கை நண்பர்களே...! இப்படியும் குழுக்கள் வித விதமாக செயல்படுகின்றன. சென்னையில் உள்ள பிரபலமான கடைகளில் நடக்கும் இது போன்ற சதுரங்க வேட்டைகளில் மாட்டிக்கொண்டு உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். vikatan.com

கருத்துகள் இல்லை: