வியாழன், 7 மே, 2015

பொதுப்பணி துறை அதிகாரிகள் ஒப்பந்தகாரர்கள் போன் உரையாடல் அம்பலம்! கமிசன் பேரம் கொடிகட்டி பறக்கிறது

வாட்ஸ் அப்' மூலம் வெளியாகி, பொதுப் பணித்துறையை நேற்று கலக்கிய, அதிகாரி மற்றும் ஒப்பந்ததாரர் இடையேயான போன் உரையாடல் முழு விவரம்:
அதிகாரி: நேற்று நீங்கள் அழைத்தபோது, நான் மீட்டிங்கில் இருந்தேன். மொபைல் போனை,'சைலன்ட்'டில் வைத்திருந்ததால் எடுக்கவில்லை. நான் அழைத்தபோது நீங்கள் ஏன் போனை எடுக்கவில்லை.
ஒப்பந்ததாரர்: நான் வண்டியில் போய்கொண்டிருந்தேன். மூன்று மணி நேரம் ஆகிவிட்டதால், நேரிலேயே வந்து சந்திக்க நினைத்திருந்தேன்.


பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரியின் நடவடிக்கையால், அந்த துறையில் கமிஷன் அதிகரிப்பு பிரச்னை அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக, ஒப்பந்ததாரர் சங்கம் சார்பில் சென்னையில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனரால், போலீசார் டென்ஷன் அடைந்தனர். பல இடங்களில் வைக்கப்பட்ட பேனர்களை தேடித் தேடி அகற்றினர்.பொதுப்பணித்துறையில், கட்டடங்கள் மற்றும் நீர்வளத்துறை என, இரண்டு முக்கிய பிரிவுகள் உள்ளன.*நீர்வளத்துறையின், நான்கு மண்டலங்கள் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலை பராமரிப்பு மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. *கட்டடங்கள் பிரிவு, மூன்று மண்டல தலைமை பொறியாளர் கீழ், 14 வட்டங்கள், 50 கோட்டங்களை கொண்டு இயங்கி வருகிறது. பொதுப்பணித்துறை தொடர்பான கட்டடங்கள் மட்டுமின்றி பல துறைகளுக்கான கட்டடங்களும், இப்பிரிவு மூலம் கட்டப்படுகின்றன.
இதுமட்டுமின்றி, அரசு கட்டடங்கள், மருத்துவமனைகள், பாரம்பரிய கட்டடங்கள் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நீர்வளத்துறை மற்றும் கட்டடங்கள் பிரிவுக்கான பணிகளை மேற்கொள்ள, மாநிலம் முழுவதும், 15 ஆயிரம் ஒப்பந்ததாரர்கள் உள்ளனர்; சென்னையில் மட்டும், 600 ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். 'ஒப்பந்ததாரர்களிடம், இரண்டு ஆண்டுகளாக, ஒவ்வொரு பணிக்கும், 45 சதவீதம் கமிஷன் பெறப்படுகிறது; கொடுக்கப்பட்ட பணிகளுக்கான பணத்தை உடனடியாக வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது' என்ற புகார் கிளம்பியது. இதை உறுதிப்படுத்தும் சம்பவங்கள் நேற்று அரங்கேறின. சென்னை, சேப்பாக்கம், எழிலகம் வளாகத்தின் பல இடங்களில், பொதுப்பணித்துறை பொறியியல் ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டன.

இதில், 'பொதுப்பணித்துறையில் மாபெரும் ஊழல் செய்த முதல் பொறியாளர் யார் என்ற தலைப்பில் விரைவில், விளம்பர பலகை அமைக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது, துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரி ஒருவரின், கமிஷன் தொடர்பான பேச்சு, 'வாட்ஸ் அப்' வடிவில் வெளிவந்தது.டிஜிட்டல் பேனர்களை, படம் எடுத்த பலரும் அதை, 'வாட்ஸ் அப்' மூலம் பரவ விட்டனர். இதையடுத்து, பரபரப்பு கூடியதால், எழிலகம் வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். சர்ச்சைக்குரிய பேனர்களை தேடித் தேடி அகற்றினர்.

சமரச பேச்சு:

ஒப்பந்ததாரர்களை அழைத்து, கட்டடங்கள் பிரிவின் முக்கிய அதிகாரி, நேற்று மாலை, ஒரு மணி நேரம், ரகசிய பேச்சு நடத்தினார். 'பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம்' என, ஒப்பந்ததாரர் களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இதற்கு கைமாறாக, 'ஒப்பந்த பணிகளை பகிர்ந்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அவரிடம், அதிகம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் பெயர்களை, ஒப்பந்ததாரர்கள் கூறிஉள்ளனர். 'அந்த அதிகாரிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, உயர் அதிகாரி தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.




10 லஞ்ச அதிகாரிகள் பெயர் ஒப்பந்ததாரர்கள் அறிவிப்பு:

'பொதுப்பணித்துறையில், அதிகம் லஞ்சம் வாங்கும், 10 அதிகாரிகளின் பெயர் பட்டியலை வெளியிடுவோம்' என, பொதுப்பணித்துறை பொறியியல் ஒப்பந்ததாரர் சங்கத்தின் மாநில தலைவர் குணமணி, பொருளாளர் குமார் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் அளித்த பேட்டி: பொதுப்பணித்துறையில், ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ள, 35 சதவீத கமிஷனை, தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், பணி ஆய்வாளர்
உள்ளிட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். இத்துடன், 5 சதவீத கமிஷனை, துறையின் முக்கிய புள்ளிக்கு தரவேண்டும். ஆனால், இரண்டு ஆண்டுகளாக, துறையின் முக்கிய புள்ளிக்கு மட்டுமின்றி, மருத்துவ பணிக்கான கமிஷனை, அந்த துறையின் முக்கிய புள்ளிக்கு தரவேண்டும் என்ற விதி அமலுக்கு வந்துள்ளது. இவருக்கு தனியாக, 5 சதவீதம் கமிஷன் கேட்கின்றனர். மொத்தமாக, 45 சதவீதம் கமிஷனாக கொடுப்பது மட்டுமின்றி வருமான வரிக்காக, 2 சதவீதம்; விற்பனை வரிக்காக, 2 சதவீதமும் செலுத்துகிறோம். மீதமுள்ள குறைந்த பணத்தை கொண்டு பணிகளை முறையாக செய்ய முடியாது என கூறினோம். அதனால், புதுக்கோட்டையை சேர்ந்த நண்பர் ஒருவருக்கு, மருத்துவ துறையின் முக்கிய புள்ளி ஒப்பந்தப்பணிகளை வழங்கி வருகிறார்.

எங்களுக்கு பணிகள் வழங்காதது மட்டுமின்றி, 13 மாதங்களாக, செய்த பணிக்கான பணத்தையும் தரவில்லை. லஞ்சப் பணத்தில், அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும், பிரிட்டன், பிரான்ஸ், துருக்கி என வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். ஆனால், நாங்கள் வருமானம் இன்றி தவிக்கிறோம். கடந்த, 2014 - 15ல், மருத்துவமனை உள்ளிட்ட கட்டடங்கள் பராமரிப்பு செலவிற்காக, 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த பணம் முழுவதும் செலவிடப்பட்டு விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், முறையாக எங்கும் பணிகள் நடக்கவில்லை. ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கட்டட நிதியிலும், முறைகேடு நடந்துள்ளது. பொறுத்தது போதும் என்ற முடிவிற்கு வந்துவிட்டோம். அதிகம் லஞ்சம் வாங்கிய, 10அதிகாரிகளின் பெயரை வெளியிட முடிவு செய்து உள்ளோம். இன்று, ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவில், இதுகுறித்து புகார் செய்ய உள்ளோம். அவர்கள் நடவடிக்கை எடுக்காவிடில், பெயர் பட்டியலை வெளியிடுவோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அதிகாரி - ஒப்பந்ததாரர் போனில் பேசியது என்ன?

'வாட்ஸ் அப்' மூலம் வெளியாகி, பொதுப் பணித்துறையை நேற்று கலக்கிய, அதிகாரி மற்றும் ஒப்பந்ததாரர் இடையேயான போன் உரையாடல் முழு விவரம்:
அதிகாரி: நேற்று நீங்கள் அழைத்தபோது, நான் மீட்டிங்கில் இருந்தேன். மொபைல் போனை,'சைலன்ட்'டில் வைத்திருந்ததால் எடுக்கவில்லை. நான் அழைத்தபோது நீங்கள் ஏன் போனை எடுக்கவில்லை.
ஒப்பந்ததாரர்: நான் வண்டியில் போய்கொண்டிருந்தேன். மூன்று மணி நேரம் ஆகிவிட்டதால், நேரிலேயே வந்து சந்திக்க நினைத்திருந்தேன்.
அதிகாரி: ஐந்து மணி நேரம் கூட ஆகட்டும், மீண்டும் என்ன ஏது என்று கேட்டிருக்கலாமே... உங்களுக்கு என்ன வயதாகிறது?
ஒப்பந்ததாரர்: 30 ஆகிறது.
அதிகாரி: எனக்கு, 53 வயதாகிறது. ஒரு வயசுக்கு மரியாதை தர வேண்டாமா? ஏன் இப்படி இருக்கிறீர்கள்... நீங்க, நல்ல படியா தானே இருந்தீர்கள். ஏன் இப்படி ஆனிங்க... எங்களையெல்லாம் என்ன மாதிரி நினைக்கிறீங்க
ஒப்பந்ததாரர்: ஒண்ணுமில்ல சார்...
அதிகாரி: ஏன் கிருஷ்ணமூர்த்தி, நான் சத்தியமா கஷ்டப்படுறேன். நல்லா தானே இருந்தீங்க, எல்லாரும் உங்க வேலையை பார்த்துட்டு ஆச்சரியப்பட்டாங்க... உங்க குணத்தை மாத்திக்கோங்க, அப்புறம் வாழ்க்கையில உயர்ந்துடுவீங்க, சிறந்த ஆளா ஆயிடுவீங்க.
இந்த மாதிரி அடம் பிடிச்சீங்கன்னா சத்தியமா சொல்றேன், நீங்க நல்லா இருக்க முடியாது. நீங்க நல்லா வளரணும். உங்க பேரு சென்னையில வரணும், அப்படி நினைங்க, கிருஷ்ணமூர்த்தியா... அந்த கான்ட்ராக்டரா... பியூன் முதல் வாட்ச்மேன் வரை எல்லாரும் புகழணும்.
புகழ்றானோ இல்லையோ அதையெல்லாம் நீங்க நினைக்கணும். தயவு செய்து நான், 'ரிக்யூவஸ்ட்' பண்ணி கேட்டுக்குறேன். சரி இப்ப, இ.இ., சொன்னாரே, அந்த பணத்தை ஏன் கொடுக்கல?
ஒப்பந்ததாரர்: இல்ல சார். இரண்டு நாள்,'செக்' போடல; இன்னிக்கு தான்,'அக்கவுன்ட்'ல பணம் போட்டேன்.
அதிகாரி: சொன்னீங்களா அந்த ஜே.இ., கிட்ட?ஒப்பந்ததாரர்: சொன்னேன் சார் ஜே.இ., கிட்ட...
அதிகாரி: நீங்க வந்து வேலை செய்தா, 'எம்' காசு கொடுத்து தான் ஆகணும்.
ஒப்பந்ததாரர்: அத தந்துடுவேன் சார்...
அதிகாரி: எங்களுக்கு இந்த, என்.ஓ.சி., கிராண்டு எல்லாம் தெரியாது. வேலை கேட்டீங்க தந்துட்டோம்.
'நான்வெஜ்' நேரத்துல பணத்த தரணும். அவமானப்பட்டு நிற்க முடியாதுங்க. சக்தி இல்ல கிருஷ்ணமூர்த்தி; என்கிட்ட பணம் கிடையாது, கோடீஸ்வரன் கிடையாது; சக்தி கிடையாது; ஆனா, பின்னாடி ஆள் இருக்கான். அத சொல்ல விரும்பல, நான் வேதனைல இருக்கேன். 90 ஆயிரம், என் காச தந்திருக்கேன், எவனும் எனக்கு தரல. உண்மையாதான் சொல்றேன். வீட்ல இருந்து அடகு வைச்சு, என் சம்பள காச தர முடியாது. குமாரசாமி கதையாகிடும். முத்துக்குமாரசாமி கதையாகிடும். அந்த வேதனையில இருக்கேன். இத, எஸ்.இ.,கிட்ட சொல்ல போறேன்; பெரிய பிரச்னை பண்ண போறேன். என் காச ஏன் கவர்மென்ட்டுக்கு தரணும். நீங்க தரவேண்டியது தானே. கார்த்திக், லெனின் எல்லாம் தரல, அவுங்க எல்லாம் ஏமாத்துக்காரங்களா, கிருஷ்ணமூர்த்தி, யாருடைய வேதனைக்கும் நீங்க ஆளாக கூடாது. நான் மனசார, 'ஓபனா' பேசுறேன். உங்ககிட்ட உரிமை இருக்கிறதாலே பேசுறேன். மத்தவங்ககிட்ட பேசமாட்டேன். சும்மா, 'மயிலே மயிலே இறகு போடு'னா எப்ப போடுறது.இ.இ., என்ன எங்கள விட்டு வைக்கிறாரா; நேத்தே பணத்தை கொடுத்துருக்கேன். என் காச கொடுத்துருக்கேன். என் வயிறு எரியுது. என் காசு, 90 ஆயிரம் கொடுத்துருக்கேன். என் காசு கிடைக்காட்டி என்ன பண்ணுவேன்னு தெரியாது. உங்க ஜே.இ.,கிட்ட பேசுங்க; அடுத்து இ.இ.,கிட்ட பேசுங்க; பைசா மேட்டர் மட்டும் ஜே.இ.,கிட்ட பேசுங்க, உங்களுக்கும், எங்களுக்கும் பேச்சு கிடையாதுங்க, உங்களுக்கு ஏதாவது தாமதம்னா, என்ன செருப்பால அடிங்க, நான் தாங்கிக்குவேன். என்.ஓ.சி., இருக்கு, 'செக்' போட மாட்றாரு; 'எஸ்டிமேட்'ல கையெழுத்து போட மாட்றாரு; பில் அனுப்ப மாட்றாரு, அப்படி ஏதாவது நான் பண்றேனா, ஏன் காச தர மாட்றீங்க,
ஒப்பந்ததாரர்: இல்ல சார், போன வாரம் போட வேண்டிய,'செக்' இன்னிக்கு தான் கையில வாங்கினேன்.
அதிகாரி: எதையாவது போடுங்க, எங்காவது கொடுத்து தொலைக்க வேண்டியது தானே. கவர்மென்ட்டுக்கு தானே கேட்கிறாங்க.தப்புனா கவர்மென்ட்டுக்கு அப்ளிகேஷன் கொடுங்க, 'கொடுக்கவே முடியாது'னு லெட்டர் எழுதி கொடுங்க, அதை காட்டி,'அப்ரூவல்' வாங்கிப்போம்.
ஒப்பந்ததாரர்: அதையும் ரெடி பண்ணி இருக்கேன் சார்.
அதிகாரி: கொடுங்க, பேர போட்டு எழுதி கொடுங்க, சத்தியமா அந்த விஷயத்துக்கு நான் ஆதரிக்கிறேன். லிஸ்ட்ல உள்ளவங்க தரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க; அதை காட்டி 'கூலா' சொல்லிடுவோம். ஏதாவது ஒரு வழி பண்ணணும்ல. எங்கள போட்டு வாட்டி வதைக்கிறாங்க; என்ன வரபோகுது. நான் உங்க அண்ணனா இருந்தா என்ன பண்ணுவீங்க, இல்ல நீங்க ஏ.இ., - எஸ்.டி.ஓ.,வா இருந்தா, என்ன பண்ணுவீங்க; நீங்க என் இடத்துல, எஸ்.டி.ஓ.,வா இருந்தா என்ன பண்ணுவீங்க; தரமாட்டீங்களா,
ஒப்பந்ததாரர்: கண்டிப்பா தருவோம் சார்,
அதிகாரி: விடுவீங்களா, உதைப்பீங்கல்ல. அந்த மாதிரி தான் நான் இருக்கேன்.
என் நிலைமை கேவலமா இருக்கு; வீட்ல வாழ முடியல; குடும்பத்துல நிம்மதி இல்ல; 'ஆபீஸ்'ல வந்து,'லொள்ளு' பட முடியாது. தயவுசெய்து என்ன காப்பாத்துங்க,
ஒப்பந்ததாரர்: கண்டிப்பா சார்...
அதிகாரி: இதுக்காக நான் தான் பதில் சொல்றேன். இந்த முத்தழகு இ.இ.,ன்றானே எவனும் வரல. என் காச தான் கொடுத்துருக்கேன். எவனாவது தந்திருக்கானா சொல்லுங்க...
ஒப்பந்ததாரர்: கண்டிப்பா யாரும் தரல.
அதிகாரி: நிச்சயமா இல்ல, ஒவ்வொரு முறையும் நான் தான் தரேன். நீங்க,'ரெப்ரசன்ட்' பண்ணுங்க; போராடுங்க; மொட்டை அடிங்க; உண்ணாவிரதம் இருங்க; நானும் கூட உட்காந்துக்குறேன். நான் ஆதரிக்கிறேன். தீவிரவாதி மாதிரி நான். முற்போக்கு சிந்தனை உள்ள ஆளுங்க; பிற்போக்கு ஆள் கிடையாது, கொள்ளையடிக்க நினைக்கல; யோக்கியன் கிடையாது. அதற்காக அயோக்கியன் கிடையாது. பார்த்துக்குங்க கிருஷ்ணமூர்த்தி.
ஒப்பந்ததாரர்: கண்டிப்பா...
அதிகாரி: எங்க வேதனைய சரி செய்ங்க, இல்லாட்டி, மெட்ராஸ்ல உள்ள விலைவாசிக்கு பண்ண முடியாது; சக்தி இல்ல. பொறியாளர் எல்லாம் வேலை வாங்குறான் சொல்லுங்க... சொத்தையா தர்றதனு கவர்மென்ட்டை கேளுங்க...
ஒப்பந்ததாரர்: திங்கட்கிழமை காலை, 10:00 மணிக்கு உங்க, 'டேபிளுக்கு' இருக்கும்.
அதிகாரி: என்,'டேபிள்'ல எதுக்கு, ஜே.இ., 'டேபிள்'ல கொடுங்க, எனக்கு எதுக்கு, அவர் தான் அதாரிட்டி; அந்தாளு தான் கொண்டு போய் தரணும்.அவர் தரமுடியாததால நான் தரேன். எல்லா இடத்துலயும் ஏ.இ., - ஜே.இ., தான் தர்றாங்க, எந்த எஸ்.டி.ஓ.,வும் ஜெயபாலனும், திருமூர்த்தியும் திரும்பி கூட பார்க்கிறது இல்ல.
இந்த மேட்டர்ல, ஆனா என்ன வந்து, அவர் உரிமையா கேட்கிறாரு; சீனியருங்க... நாங்க அவருக்கு மரியாதை கொடுப்போம். ஒரு வருஷம் மூத்தவர்னாலும் மரியாதை கொடுப்போம்.
எங்க,'பாஸ்'ங்க, அவரு... எனக்கு ஏதாவது எழுதினார்னா, இருக்குற மீதி மிச்ச வாழ்க்கையும் போய்டும். அதனால தயவுசெய்து இந்த விஷயத்துல இழுக்காதீங்க...முடியாதுன்னா நேரிடைய சொல்லுங்க; உண்மையா பேசுங்க; தரமுடியாதுன்னு, இ.இ.,கிட்ட சொல்லுங்க. எனக்கு நல்லா தெரியும்ல. அவர் எங்க போய் மந்திரி, கிந்திரினு சொல்லும் போது, நாலு பேர் தரலனு, கழிச்சுட்டு போய்டுவார்ல. ஒப்பந்ததாரர்: சார், ஆர்.எஸ்.ஆர்.எம்.,ல வேல செஞ்சோம்.
அதிகாரி: எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க, லாப நஷ்டம் அதெல்லாம் தெரியாது பார்த்துக்குங்க... நன்றிங்க... இவ்வாறு, இருவரும் பேசி உள்ளனர்.

- நமது நிருபர் - தினமலர்.com

கருத்துகள் இல்லை: