ஒரு பெரும் கூட்டம் கட்டுண்டபடியே அக்கோடுகளின் பின்னால் வாழ்வின்
உன்னதத்தைப் பருகிக்கொண்டு மிதந்து திரிந்தது. அந்த வழியிலேயே ஓடி அவரின்
நுட்பத்தையும் மாய சக்தியையும் அடைந்து விட வேண்டும் என்ற பெரும்
தாகத்துடன் அலைந்த ஆயிரக் கணக்கானவர்களின் கூட்டத்தில் கடைசிச் சிறுவன்
நான்.
இன்றுவரை என் மனதில் பெரும் பகுதியை நிரப்பி வழிநடத்தும்
மாமனிதர்களில் அவரும் ஒருவர். அழியாப் புகழ் மிக்க படிமங்களைக் கொண்டு எம்
தூக்கத்தைக் கலைத்தவர்.
பால்யத்துடன் கலந்தவர்
50களின் கடைசியில் ஆரம்பித்தது அது. தினசரிகளும் ஆனந்த விகடனும்
வீட்டிற்குள்ளே வீசி எறிப்படும்போது முட்டிதட்டி விழுந்து, எழுந்து ஓடி
விகடனை மட்டும் எடுத்து அதில் இருக்கிற கோபுலுவின் சித்திரங்களை மட்டும்
வேகவேகமாக முதலில் பார்த்துவிட வேண்டும் என்று முந்துவேன். பள்ளிப்
புத்தகங்களைவிடப் பத்திரிகை களிலிருந்து வெட்டிச் சேகரித்தவையே அதிகம் என்
பையில் நிரம்பியிருந்தன. என் தந்தையாரும் பெரும் ரசிகர். அவர், ஆனந்த
விகடன் இதழ்களின் அட்டை ஓவியங்களைப் பத்திரிக்கை வந்த உடனேயே பிரித்து
எடுப்பதோடு கோபுலுவின் முதல் பக்க 'ஸ்டிரிப்'பையும் எடுத்து பைண்டு செய்து
வைத்திருப்பார். விருந்தினர் வீட்டுக்கு வந்தால் பார்க்கக் கிடைக்கும்படி
உட்காருகிற இடத்தின் முன்பே இருக்கும்.
நமது காண்பியல் மரபு
எழுத்து எனக்கு இரண்டாவதுதான்! ஓவியம்தான் முதலில். இந்தியாவின் காண்பியல்
மரபு தென்னிந்தியாவில் இருந்துதான் துவங்குகிறது. ஆங்கிலேயரால் முதன்முதலாக
இந்தியாவில் ஆரம்பிக்கப் பட்ட கவின் கலைக் கல்லூரி சென்னையில்தான்
ஆரம்பிக்கப்பட்டது. அச்சு வழி ஓவியங்கள் வழியாக இந்தியா முழுவதும்
அறியப்பட்ட ராஜா ரவிவர்மா, மராட்டிய ஓவியர் தாதாசாகேப் பால்கே மூலம்
மராட்டிய சினிமா வழி வந்த நமது சினிமா, நாடகம் திரைத் துறை, பிறகு
பத்திரிக்கைத் துறை என்றிருந்த கே. மாதவன் போன்றவர்களின் இயக்கத்துக்கு
இணையாகத் தமிழ்நாட்டில் விகடன், கல்கி போன்றவை அளித்த கொடை மணியமும்,
கோபுலுவும்.
இவர்களைப் போன்ற மாபெரும் கலைஞர் களால்தான் எழுத்தாளர்களின் எழுத்துகள்
காட்சி ரூபமாகப் பொதுப் படிமமாக ஆகி அனைவரையும் இணைத்தது. இவர்களின்
சித்திரங்களின் துணையின்றி அனைத்து எழுத்துகளும் பஞ்சாங்கமாகத்தான்
இருக்கும்.
கோபுலுவைப் போன்ற தேர்ந்த சித்திரக் காரரால்தான் ஒரு தில்லானா மோகனாம்
பாளைச் சந்திக்கிறோம். காலம் அழித்தது போகக் கிடைத்த இலக்கியத்
தொன்மத்திற்கும் சிற்ப ஓவியத் தரவுகளுக்கும் இடையில் நம்மை அறிய இப்போதும்
அலையத்தானே செய்கிறோம்!
கேலிச்சித்திரக்காரர் மட்டும் அல்ல
கோபுலு வாழ்வின் கொண்டாட்டத்தைத் தான் காண்பித்துக்கொண்டே இருந்தார்.
ஆனாலும் அவர் வெறும் கேலிச்சித்திரக்காரர் மட்டும் அல்ல. சோழர்களின்
செப்புத் திருமேனிகளின் மேல் துணியைச் சுற்றியது போல்தான் உருவங்கள் அவர்
சித்தரிக்கும் பண்டைய காலங்களில் இருக்கும். கேலிச் சித்திரங்களில் மெலிதான
நகைச்சுவை உங்கள் மனதை இலகுவாக்கும்.
பல்வேறு தரப்பட்ட மக்கள், வாழ்விடம், பண்டைய வாழ்வைக்
காட்சிப்படுத்தும்போது காவிரிப் படுகையின் பின்புலத் தோற்றம், நாயகன்,
நாயகி, மன்னர், அரசி, அரண்மனைவாசிகள், வீரர், தோழர் தோழியர் என அவர்
காண்பித்ததை, பார்த்த யார் மறப்பார்! இலக்கியக் காட்சிகள், இந்துக்
கடவுளர்கள், சமயக் காட்சிகள், சம்பவங்கள் அவருடைய வண்ணச் சேர்க்கையில்,
தீட்டுதலில் உயிர் பெற்றன. கும்பகோணம் ஓவியப் பள்ளி அரசுக் கல்லூரியாக
மாறுவதற்கு முன் அங்கு பயின்றவர் அவர்.
இளம் வயதில் அவர் ஒவியங் களை இமைகொட்டாமல் பார்த்துக்கொண் டிருந்ததும்
வால்ட் டிஸ்னியின் திரைப்படங்கள் அவ்வயதில் ஏற்படுத்திய தாக்கமும் என்
தந்தையார் சேகரிப்பில் இருந்த மணியம் சித்திரமும், குயில் பத்திரிக்கை
சேகரிப்பில் இருந்த மாதவன் ஓவியமும், சிற்பி தனபால் அவர்கள் செய்த பெரியார்
சிற்பத்தின் புகைப்படப் பிரதியும் என்னைச் சென்னை ஓவியக் கல்லூரிக்கு
கொண்டுவந்து போட்டன. இவை எல்லாவற்றுக்கும் மூல ஆதார சுருதி கோபுலுவின்
கோடுகளே. அவைதான் ஒளியைப் பாய்ச்சி நடக்க வைத்தன.
அற்புதமான மனிதர்
70களின் கடைசியில் ஓவியக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவராக இருந்தபோது தூர்தஷன்
நிகழ்ச்சிக்காக அவரைச் சந்திக்கும் ஓவிய மாணவனாக என்னை என் கல்லூரி
ஆசிரியர்கள் அனுப்பி வைத்தனர். அவர் என்னை நடத்திய விதமும், பேசிய முறையும்
இன்னும் மனதிலிருந்து அகலவில்லை. சந்திக்கும்போதெல்லாம் நான்
ஆச்சரியப்படும்படி அவ்வப்போதைய சமகாலத்திய ஓவியரின் புத்தகத்தை
வைத்திருப்பார். “நீங்கள் செய்ய வேண்டியது இதுவே” என்று நமது பணியை
அடையாளம் காட்டி ஒருமுகப்படுத்துவார்.
இளம் கலைஞர்களை மனதாரப் பாராட்டுவார். அவரின் சிறப்பைச் சொன்னால் சலனமே
இல்லாமல் எப்போதும்போல அதே புன்னகை. தோளைத் தட்டி, “அதெல்லாம் ஒன்றும்
இல்லை” என்பார். அவரை வியந்து பார்த்து பேச்சற்றிருப்பேன்.
கேலிச்சித்திரக்காரர் ‘லோ', அமெரிக்க ஓவியர் நார்மன் ராக்வெல்
பற்றியெல்லாம் அவர் பேசிக் கேட்டிருக்கிறேன். 90களின் ஆரம்பத்தில்
கம்யூட்டரைத் தேடி நான் சேர்த்துக்கொண்டபோது “கம்யூட்டரை வைத்து என்ன
செய்துகொண்டிருக்கிறீர்கள்” என்று என் வீட்டிற்கே வந்து அதன் பயன் பாட்டைப்
பற்றிக் குழந்தையைப் போல் கேட்டுக்கொண்டார்.
ஒரு முறை ஓவியர் பாபுவின் ஓவியத்தை அவர் வீட்டில் பார்த்துப் பேச்சு பாபு
மேல் திரும்பியது. அவரையும் ஒரு ஆசானைப் போல் பேசியவுடன் எனக்கு அவரை அறி
முகம் செய்யத் துடித்தார். அன்று தவறியது வாழ்வில் கிட்டாமலே போய்விட்டது.
தான் விளம்பரத் துறைக்கு வந்ததற்கு பாபுதான் காரணம் என்று சொன்னார். அவரைப்
பற்றிய சிறப்புகளைச் சொன்ன அந்தக் கலைஞனைப் போல் யார் வருவார் இனி!
அவருடைய விளம்பர நிறுவனத்தில் சேர்ந்து வேலை செய்கிற வாய்ப்பு என் சகோதரர்
மருதநாயகத்திற்குக் கிட்டியது. என் சகோதரரைத் தந்தையைப் போல்
பார்த்துக்கொண்டார்.
ஓவியர்களுக்கு இடமில்லை
அவருக்கு உடல்நலக்குறை ஏற்பட்ட போது மருத்துவமனையிலிருந்தே இடது கையில்
வரைய ஆரம்பித்து வலது கையால் வரைந்தது போன்ற அந்த ஓவியத்தில் வாழ்த்து
எழுதி எனக்கும் மணியம் செல்வனுக்கும் அளித்தார். “கையில்லை... மூளைதானே!”
என்றார். திரும்பி வந்து நலமோடு இயங்கினார். எந்த எதிர்பார்ப்பும்,
ஏமாற்றமும் இல்லாமல் மாமுனி போல் சிரித்த முகத்துடன் எப்போதும் தோன்றினார்
என்றுதான் சொல்ல வேண்டும்.
இன்றும் புனைவுதான் மேடையின் நடுவில் இருக்கிறது. சத்தம் போடுகிறவர்
களுக்குத்தான் கூட்டம், அடியாட்கள் எல்லாம். மத்திய, மாநில அரசுகளுக்கும்
புரியாமல் போனது ஒன்றும் புதிதில்லை. இசை, நாட்டிய நாடகம், சினிமா எழுத்து
ஆகியவற்றின் மீதுபட்ட வெளிச்சம், அல்லது திரும்பிய வெளிச்சம் இந்த
அர்ப்பணிப்புகளின் மேல் விழாதுதான். கோபுலுவின் மூல ஓவியங்கள் சேகரித்து
வைக்கப்பட வேண்டும் என்கிற தெளிவு நம் பத்திரிக்கை உலகத்திற்கேகூட இல்லை.
அப்படிச் சேகரிப்பட்டிருந்தால் அது நமது சொத்து. அரசும், கல்வி
நிறுவனங்களும், அகாடமிகளும் செய்திருக்க வேண்டும், அல்லது செய்ய வேண்டும்.
இணைய உலகம் நவீன ஓவியம், பாப்புலர் ஓவியம், காமிக்ஸ், புகைப்படம்
திரைப்படம் என்ற பிரிவினைச் சுவர்களைத் தகர்த்துப் பல காலம் ஆகிவிட்டது.
ஊடகங்களும் இணைந்துவிட்டன. வரும் தலைமுறைகள் அவரைத் தேடிக் கொண்டாடும்.
வெளி உலகின் வெளிச்சம் பாயும்படி ஜன்னலருகில் இருக்கும் மேதையின் ஓவிய
மேசையின் முன் நின்ற போதும் அதே சிரிப்போடு அந்த அறையில் நிரம்பி
இருந்தார். உரிய காலத்தில் அவரை அறியாத அனைவரையும் சேர்த்துக்கொண்டு அவர்
அமர்ந்து ஓயாமல் இயங்கிய கணங்களை மனதில் நிறுத்தி வணங்கினேன்.
மருது, ஓவியர்,
தொடர்புக்கு: trotskymarudu@yahoo.com tamil.thehindu.com
தொடர்புக்கு: trotskymarudu@yahoo.com tamil.thehindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக