புதன், 23 ஏப்ரல், 2014

தமிழகம் முழுவதும் பணம் பட்டுவாடா திமுக, தேமுதிக, பாமக, பாஜ புகார் பறக்கும் படை செல்போன்கள் ‘டெட்’

சென்னை: மாநிலம் முழுவதும் ஆளும் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். ஒரு ஓட்டுக்கு ரூ.200, ரூ.300 என அதிமுகவினர் வினியோகம் செய்து  வருகின்றனர். இது குறித்து திமுக, தேமுதிக, பாமக, பாஜ உள்பட எதிர்க்கட்சிகள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பறக் கும் படை அதிகாரிகளின்  செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் இன்று மாலையுடன் பிரசாரம் முடிகிறது. தேர்தலுக்கு நாளை ஒரு நாள்தான் உள்ளது. நாளை  மறுநாள் வாக்கு பதிவு நடைபெறுகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக அதிமுகவினர் மாநிலம் முழுவதும் பரபரப்பாக பணம் வினியோகம் செய்து வருகின்றனர்.  இதுகுறித்து திமுக, தேமுதிக, பாமக, பாஜ உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன. எதிர்க்கட்சிகள் கொடுக்கும் புகார்கள் மீது போலீசாரும் தேர்தல்  ஆணையமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட ஏழு கிணறு பகுதியில் பணம் வினியோகம் செய்த அதிமுக பிரமுகர்கள் 2 பேரை பறக்கும் படையினர் பிடித்து போலீசில்  ஒப்படைத்தனர். அதேபோல, திருத்தணி, திருவள்ளூரில் அதிமுகவினர் பணம் கொடுத்ததாக 3 பேர் பிடிபட்டனர். திருவண்ணாமலையில் அதிகாரிகள் நடத்திய வாகன  சோதனையில் ரூ.94 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அந்த கார் அதிமுக பிரமுகரின் கார் என்பது தெரிய வந்தது. தேனியில் பணம்  வினியோகம் செய்தவர்களை திமுக வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கமே பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் அதிமுகவினர்  பணம் வினியோகம் செய்ததாக தகவல் கிடைத்தது. அதிரடி படையினர் விரைந்து சென்றனர். ஆனால் அதிமுகவினர் அங்கிருந்து ஓடிவிட்டனர். விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையத்தில் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் ரூ.7 லட்சம் சிக்கியது. விழுப்புரத்தில் அதிமுகவினர் பணம் வழங்கியதால் தேமுதிக, பாஜகவினர் மறியல்  போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் சேர்வைகாரன் பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சாமிக்கண்ணு வீட்டில் ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆனாலும் மாநிலம் முழுவதும் அதிமுகவினர் ஒரு ஓட்டுக்கு ரூ.200, ரூ.300 வீதம் நேற்று இரவு முதல் விடிய விடிய பணம் வினியோகம் செய்தனர். மத்திய  சென்னை பகுதியில் ஷெனாய் நகர், அருணாச்சலம் தெரு, முருகேசன் தெரு, வைத்தியநாதன் தெரு, சேத்துப்பட்டு டோபி கானா உள்ளிட்ட பல்வேறு இடங்களில்  அதிமுகவினர் நேற்று இரவு முதல் விடிய விடிய பணம் வினியோகித்தனர். சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை  நடத்தினர். அப்போது கும்பலாக வந்த அதிமுகவினரை பார்த்தும் போலீசார் எந்த கேள்வியும் கேட்காமல் இருந்தனர். அதேபோல கீழ்பாக்கம், எழும்பூர் ஆகிய  இடங்களிலும் அதிமுகவினர் வீடு, வீடாக சென்று பணம் வழங்கினர்.மத்திய சென்னை அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாரின் வீட்டுக்கு அருகே பறக்கும்  படையினர் இன்று காலை வீடியோகிராபருடன் வந்தனர். அப்போது பறக்கும் படையில் உள்ள இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு போன் வந்தது. அடுத்த நிமிடம் அவர்  அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே செல்லப்பம்பாளையத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் அதிமுக ஒன்றிய விவசாய அணி செயலாளராகவும், ஆவின்  இயக்குனராகவும் உள்ளார். அசோக்குமாருக்கு சொந்தமான வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைத்துள்ளதாக மொடக்குறிச்சி தொகுதி  பறக்கும் படை அதிகாரி நக்கீரனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அசோக்குமாரின் வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் கடந்த 15ம் தேதி அதிரடி சோதனை  நடத்தினர். அசோக்குமாரின் வீட்டில் உரிய ஆவணங்கள் இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.51 லட்சத்து 28 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த  தொகை எப்படி வந்தது என்பதற்கான ஆவணங்கள் எதையும் அசோக்குமார் அளிக்கவில்லை.

அதிகாரிகளின் விசாரணையில் தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணத்தை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக ஈரோடு தாலுகா  போலீசார் வழக்கு பதிவு செய்து அசோக்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அசோக்குமார் ஈரோடு ஜே.எம்.2 கோர்ட்டில் சரணடைந்தார். இதையடுத்து  அவருக்கு ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட் சாய்ரா பானு உத்தரவிட்டார்.நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் அலுவலகம் ஊட்டியில் உள்ளது. இங்கு நேற்று தேர்தல்  பார்வையாளர் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை. தவறான தகவலின்படி போலீசார்  வந்து சோதனை நடத்தியதாக திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.  ஆனால் புகாரில் உண்மை இல்லை என்று அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையே திருமங்கலம் அருகே கரடிக்கல் கிராமத்தில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக புகார் வந்தது. அதன்பேரில் நேற்று இரவு  பறக்கும் படை ஆர்ஐ சிக்கந்தர் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியில் பணம் பட்டுவாடா செய்த ஜெயலலிதா பேரவை  துணை செயலாளர் சுந்தரம், அதிமுக உறுப்பினர்கள் பவுன்ராஜ், பாரதிராஜா ஆகியோரை ஆஸ்டின்பட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2  ஆயிரத்து 80ஐ பறிமுதல் செய்தனர். கரூர் கருப்பாயி கோயில் வீதியில் நேற்று நள்ளிரவு கரூர் மாவட்ட எஸ்.பி ஜோஸிநிர்மல் தலைமையில் அதிரடி படையினர்  ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

விசாரணையில் கரூர் 24வது வார்டு அதிமுக செயலாளர் மோகன், 23வது வார்டு பிரதிநிதி கிருஷ்ணன் மற்றும் ரமேஷ், அரவிந்தன், நாராயணன் ஆகிய 5 பேரை  கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.98,045ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.இதேபோல் கடலூர் குறிஞ்சிப்பாடி அருகே வாண்டியாம் பள்ளம் கிராமத்தில் பணம்  பட்டுவாடா செய்யப்பட்டது. அதிகாரிகள் விரைந்து சென்று ரூ.1.35 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அதிமுகவினர் தப்பி ஓடிவிட்டனர். மேலும், அதிகாரிகள் வருவதை  பார்த்து குன்னூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்த அதிமுகவினர் ஓடிவிட்டனர்.இவ்வாறு மாநிலம் முழுவதும்  அதிமுகவினர் பணம் வினியோகிப்பது பகிரங்கமாக தெரிந்தும் தேர்தல் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இது குறித்து பறக்கும் படை  அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்ததால் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டனர்.  இதனால் தேர்தல் நியாயமாக நடக்குமா என்ற  சந்தேகம் எழுந்துள்ளது. - See more attamilmurasu.org/

கருத்துகள் இல்லை: