ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நகைகள் கொள்ளை? திறக்கப்படாமல் மேலும் 2 பாதாள அறைகள் கண்டுபிடிப்பு


பத்மநாப சுவாமி கோயில் தங்க நகைகளை கடத்திய மன்னர் குடும்பத்தினர்?

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் மூத்த வக்கீல் ஆய்வு நடத்தி சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை அளித்துள்ளார். அதில், கோவிலில் இருந்து நகைகள் கொள்ளை போயிருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டிருக்கிறது. மேலும் திறக்கப்படாமல் 2 பாதாள அறைகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
திருவனந்தபுரம் கோட்டைக்குள் அமைந்துள்ள பத்மநாப சுவாமி கோவில், நாடு முழுவதும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் பல பாதாள அறைகள் இருப்பதாக கூறி, அவற்றினுள் என்ன இருக்கிறது என்பதை திறந்து பார்க்க உத்தரவிட வேண்டும் என கோரி சுப்ரீம் கோர்ட்டில் சுந்தரராஜன் என்பவர் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இரண்டு முன்னாள் நீதிபதிகள் உள்பட 7 பேர் அடங்கிய குழுவை நியமித்து, பத்மநாப சுவாமி கோவிலின் பாதாள அறைகளை திறந்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது.
ரூ.1 லட்சம் கோடி தங்கம் !  அந்த காலத்தில மக்களை சுரண்டி மன்னர்கள் சேர்த்த சொத்துதான்  இந்த தங்க கிடங்குகள் . அதிலும் கேரளா மன்னர்கள் தமிழர்களை அடிமைகளாக வைத்திருந்து அடித்த கொள்ளைதான் , இப்போ மட்டும் என்ன  கேரளா ஆதிவாசி ஜனங்க யாரானு ?

கடந்த 2011–ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட இந்த சோதனையின்போது, 5 பாதாள அறைகளில் விஷ்ணு பொற்சிலை, விலை மதிக்க முடியாத வைரங்கள், வைடூரியங்கள், ஏராளமான நகைகள், தங்க நாணயங்கள், தங்கக்கிரீடங்கள் என சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இருப்பினும் ‘பி’ என்ற பாதாள அறை மட்டும் திறக்கப்படவில்லை. ஆன்மிக ரீதியிலான பல்வேறு காரணங்களைக் கூறி கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த பாதாள அறை மட்டும் திறக்கப்படவில்லை.
மேல்–முறையீடு
இதற்கிடையே இந்த கோவிலை திருவாங்கூர் சமஸ்தான அறக்கட்டளையிடமிருந்து மாநில அரசு எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மன்னர் குடும்பத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்–முறையீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கேரள ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மூத்த வக்கீல் ஆய்வு
இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டுக்கு உதவுவதற்காக முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வக்கீலுமான கோபால் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டார்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அவர் திருவனந்தபுரம் வந்து பத்மநாப சுவாமி கோவிலில் 35 நாட்கள் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது ‘பி’ என்ற பாதாள அறை மட்டுமல்லாமல், ‘ஜி‘ மற்றும் ‘எச்’ என்று மேலும் இரண்டு பாதாள அறைகள் திறக்கப்படாமல் இருப்பதை கண்டுபிடித்தார். கோவில் வளாகத்தில் தங்கத் தகடுகளை பதிக்கிற எந்திரம் இருக்கிற நிலையில், கோவிலில் இருந்து சில அசல் நகைகள், கோவிலின் விலை உயர்ந்த ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டு, அவற்றுக்கு பதிலாக தகடுகள் பதித்த போலி நகைகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.
மேலும் 2 அறைகள்
தனது ஆய்வு தொடர்பான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் கோபால் சுப்பிரமணியம் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–
பத்மநாப சுவாமி கோவிலில் இதுவரை திறக்கப்படாமல் உள்ள ‘பி’ என்ற பாதாள அறையை திறந்து, அதனுள் இருக்கிற நகைகளின் மதிப்பை கண்டறிய உத்தரவிட வேண்டும். ‘ஜி’, ‘எச்’ என்று மேலும் இரண்டு பாதாள அறைகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. இவற்றினையும் திறந்து, இவற்றினுள் இருக்கிற ஆபரணங்களையும், அவற்றின் மதிப்பினையும் கணக்கிட வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
கணக்குகளில் முரண்பாடு
கோவிலில் பராமரித்து வருகிற பொதுவான கணக்குகளில் முரண்பாடு உள்ளது. எனவே கோவிலின் பொதுவான கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும்.
கடந்த 30 ஆண்டுகளாக பக்தர்களிடம் இருந்து பெற்ற காணிக்கைகள் சரிவர கணக்கில் கொள்ளப்படவில்லை. எனவே தான் தணிக்கை தேவைப்படுகிறது. இந்த தணிக்கையை முன்னாள் தலைமை கணக்கு தணிக்கையர் (சிஏஜி) வினோத்ராய் தலைமையிலான குழுவைக் கொண்டு செய்யலாம்.
மன்னர் குடும்பத்துக்கு தடை
இந்த கோவிலின் அன்றாட காரியங்களில் திருவாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த மன்னர் குடும்பத்தின் தலையீடு இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு இந்த அறிக்கையை ஆராய்ந்து விரைவில் இது தொடர்பான உத்தரவினை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.dailythanthi.com

கருத்துகள் இல்லை: