திங்கள், 21 ஏப்ரல், 2014

ராஜா, கனிமொழியிடம் அடுத்த மாதம் வாக்குமூலம் ! முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம்


புதுடில்லி: '2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், தி.முக.,வைச் சேர்ந்த ராஜா, கனிமொழியிடம், அடுத்த மாதம், 5ல், வாக்குமூலம் பெறப்படும்' என, டில்லி, சி.பி.ஐ., கோர்ட் தெரிவித்துள்ளது.'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில், 1.76 லட்சம் கோடி ரூபாய், அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான, சி.ஏ.ஜி., தெரிவித்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய, சி.பி.ஐ., மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த, தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தி.மு.க,, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி மற்றும் தொழில் அதிபர்கள், மத்திய அரசு துறை அதிகாரிகள் உட்பட, 16 பேரை கைது செய்தது.டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள், ஜாமின் பெற்று, வெளியில் வந்துள்ளனர். இந்த வழக்கு குறித்த விசாரணை, நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில், டில்லியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடக்கிறது.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, 824 பக்க அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதில் உள்ள, 1,718 கேள்விகளை படித்து பார்த்து, கோர்ட்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, அவர்கள் வாக்குமூலம் அளிக்க வேண்டும்.


இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட சிலர், அறிக்கையை படித்து பார்த்து, வாக்குமூலம் அளிக்க, தங்களுக்கு கூடுதல் அவகாசம் வேண்டுமென கேட்டனர். இதையடுத்து, நீதிபதி சைனி கூறியதாவது:கூடுதல் அவகாசம் வழங்குவதில், எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், வாக்குமூலம் பெறும் நடவடிக்கை துவங்கி விட்டால், அதற்கு பின், அவகாசம் அளிக்க முடியாது. விசாரணை, முழு வீச்சில் நடக்கும். அதற்கு பின், கோர்ட்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, நீங்கள், புல்லட் வேகத்தில் பதில் அளிக்க வேண்டும்.நீதிபதியான நானும், குற்றம் சாட்டப்பட்ட நீங்களும், கோர்ட்டில், நேரடியாக பேசுவதற்கான நேரம் வந்து விட்டது. எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம், அடுத்த மாதம், 5ல், இருந்து, வாக்குமூலம் பெறப்படும்.இவ்வாறு கூறிய நீதிபதி, வழக்கின் விசாரணையை, அடுத்த மாதம், 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்

கருத்துகள் இல்லை: