புதன், 23 ஏப்ரல், 2014

ஸ்டாலின்: மோடியும் இல்லை; லேடியும் இல்லை; டாடி தான்!'

அரசுத் துறைகளில் சிறந்த நிர்வாகத்தை அளித்தவர் மோடியும் இல்லை; லேடியும் இல்லை; டாடி தான்,” என, கருணாநிதியை மேற்கோள்காட்டி ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
திருச்சி லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து, புதுக்கோட்டையில் நடந்த, தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது: மக்களின் கஷ்டங்கள் எங்கு பார்த்தாலும், தண்ணீருக்காக மக்கள் தவித்துக் கொண்டிருப்பதை காணமுடிகிறது. ஹெலிகாப்டரில் பறக்கும் ஜெயலலிதாவுக்கு, மக்களின் கஷ்டங்கள் தெரிய வாய்ப்பில்லை.நேற்று முன்தினம், சென்னையில் தேர்தல் பிரசாரம் செய்தபோது, 'அனைத்து துறைகளிலும் மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பவர் குஜராத்தின் மோடி அல்ல; தமிழகத்தில் இந்த லேடி தான்' என, சில புள்ளி விவரங்களை குறிப்பிட்டு, தன்னைத் தானே பெருமைபடுத்தியுள்ளார்
ஜெயலலிதா.தமிழகத்தை பொறுத்தமட்டில், தி.மு.க., ஆட்சியின் போதெல்லாம், அனைத்து அரசு துறைகளிலும், மிகச்சிறந்த நிர்வாகத்தை தந்தவர் மோடியோ, லேடியோ அல்ல; டாடி தான் என, பெருமையோடு கூறிக்கொள்கிறேன்.நடைபெறவுள்ள லோக்சபா தேர்தல் முடிவு என்பது, ஜெயலலிதாவுக்கு சவுக்கடி கொடுப்பதாகத்தான் அமையும். லோக்சபா தேர்தலுக்கு பின், 2016ல் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. 2016 என்பதை விட அதற்கு முன்பாகவே தேர்தல் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், தேர்தல் பிரசாரத்துக்காக நான் செல்லும் இடங்களில் எல்லாம், மக்கள் அலைகடலென திரண்டு வந்து, தி.மு.க.,வுக்கு ஆதரவு கொடுக்கின்றனர்.தி.மு.க.,வுக்கு கூடும் மக்கள் கூட்டம், பணம் கொடுத்து அழைத்து வந்த கூட்டமல்ல. தலைவர் கருணாநிதி கருத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், அவர் சுட்டிக் காட்டுகின்றவர் தான் பிரதமராக வரவேண்டும் என்பதற்காகவும், தானாக வந்த கூட்டம்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக, திருச்சியில், அவர் பேசியதாவது:
இரண்டு மணி நேரம் மின்வெட்டு: தி.மு.க., ஆட்சியில், இரண்டு மணி நேரம் தான் மின்வெட்டு இருந்தது. இன்று மின்சாரமே இல்லை. கிராமத்தில், 'தவித்த வாய்க்கு தண்ணீர் கொடு' என்பர். இங்கோ, 'அம்மா' தண்ணீர், 10 ரூபாயாம். நாங்கள் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்தோம். ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தினோம். இவர் தண்ணீரை விற்று காசாக்குகிறார்.ஒரு தாய் தன் குழந்தைக்கு பால் தருகிறாள். அதற்கு அந்த குழந்தையிடம் பணம் வாங்கினால், அவள் தாய் அல்ல பேய். அதேபோல தான் தண்ணீரை விற்கும் அம்மா, அம்மா அல்ல; சும்மா!இவ்வாறு, அவர் பேசினார்.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: