சனி, 26 ஏப்ரல், 2014

1800 கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயாராகவே இருக்கிறேன் .முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா

ஊட்டி: "2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையில், ஆயிரத்து 800 கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயாராகவே இருக்கிறேன்,” என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்தார்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான குற்றப்பத்திரிகையை, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று டில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளனர். இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு, எம்.பி., கனிமொழி மற்றும் 16 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், நீலகிரி தொகுதி எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜா, 'தினமலர்' நிருபருக்கு அளித்த பேட்டி:
* கேள்வி: '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், 1800க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும் என கூறப்படுகிறதே?
பதில்: இந்த விசாரணை, ஏப்.,21ம் தேதியே வந்திருக்க வேண்டியது; அப்போதும் கூட, நான் தயாராகவே இருந்தேன். தற்போதும் 1800 கேள்விகளையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். இதை தவிர, இந்த வழக்கு குறித்த அனைத்து விவரங்களையும் தெளிவாக கூறி விட்டேன். ஏன், 'தினமலரில்' கூட, மிகத் தெளிவாக வெளிவந்திருந்தது. ஏதாவது தவறு இருந்திருந்தால், அது தேர்தல் பிரசாரத்தில் வெளிப்பட்டிருக்கும். இந்த வழக்கின் நகர்வு பற்றி எவ்வித அச்சமும் இல்லாமல் இயல்பாகவே இருக்கிறேன்.


* கேள்வி: கலைஞர் 'டிவி' மீது நடந்து வரும் வழக்கு பற்றி?

பதில்: இந்த வழக்கின் அதிகாரி டி.எஸ்.பி., சின்னா என்பவர், அனைத்து விவரங்களையும் ஏற்கனவே தெளிவாக கூறி விட்டரே.


* கேள்வி: நீலகிரி தொகுதி மக்களுக்கு தங்கள் கூற விரும்பும் கருத்து?

பதில்: ஏற்கனவே கூறியது தான். அந்நியனாக வந்த என்னை, தங்கள் குடும்ப உறுப்பினரை போல, அரவணைத்து கடந்த 5 ஆண்டுகளாக ஆதரவளித்தனர். தற்போது, எனது பணிகளை வைத்து, ஓட்டுகளையும் அளித்ததற்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

* கேள்வி: அ.தி.மு.க.,-- - தி.மு.க., ஆகிய கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக வந்த குற்றச்சாட்டுகள் பற்றி? பதில்: எனது தொகுதியில் நான் கடந்த 5 ஆண்டுகளில் செய்த பல்வேறு பணிகளை மக்களிடம் முன்னிறுத்தி மட்டுமே ஓட்டு கேட்டேன். வாக்காளர்களுக்கு பணம் ஏதும் கொடுக்கவில்லை. மேட்டுப்பாளையத்தில் ஒரு ஓட்டலில், ஆளும் கட்சியினர் பணம் கொண்டு வந்து வைத்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்றோம். மூன்றரை மணிநேரம், எங்களை, குறிப்பிட்ட அறையை பார்க்க போலீசார் அனுமதிக்கவில்லை. பிறகுதான்
அனுமதித்தனர். அதில் இருந்தே பணம் அங்கு இருப்பது ஊர்ஜிதமாகிறது இல்லையா...?

* கேள்வி: ஆளும் கட்சியினர், 'தங்களுக்கு தான் வெற்றி' என உறுதியாக கூறுகின்றனரே?

பதில்: அது அவர்கள் கருத்து; ஆனால், இந்த தேர்தலில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே, தேர்தல் பிரசாரம் செய்தேன். குற்றச்சாட்டுகளுக்கு, மக்கள் மத்தியில் நேரடியாக விளக்கம் அளித்தேன். ஜெயலலிதா மீதுள்ள வழக்கு, குற்றச்சாட்டுகளை பற்றி இறுதி வரை அவர்கள் மக்கள் மத்தியில் பேசவே இல்லை. இதுவே, எனக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வெற்றி தான். அவர்கள் வழங்கும் தீர்ப்பு எதுவாக இருப்பினும், அதை நான் ஏற்றுக்கொள்வேன்.   தினமலர்.com            

கருத்துகள் இல்லை: