வெள்ளி, 25 ஏப்ரல், 2014

தமிழக கட்சிகளை நடுங்க வைக்கும் வரலாறு காணாத 73 வீத ஒட்டு பதிவு ?

பதினாறாவது லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, நேற்று, தமிழகத்தில் அமைதியாக நடந்து முடிந்தது. ஐந்தரை கோடி வாக்காளர்கள் பங்கேற்ற இந்த தேர்தலில், 73 சதவீதம் பேர், ஓட்டளித்து, தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர். காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது முதல், மாலை 6:00 மணிக்கு முடியும் வரை, மக்கள் மிகுந்த ஆர்வத்துடன், ஓட்டு போட்டனர்.
நாட்டின் அடுத்த லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பை, கடந்த மார்ச் மாதம், தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. நாடு முழுவதும் ஒன்பது கட்டமாக, ஓட்டுப்பதிவு நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஐந்து கட்டத் தேர்தல் முடிந்து விட்டது.ஆறாவது கட்டமாக நேற்று, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட, 12 மாநிலங்களில், 117 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது.
தமிழகத்தில் மக்கள், தங்கள் ஓட்டுரிமையை செலுத்துவதற்கு வசதியாக, 60 ஆயிரத்து 817 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இவற்றில், 17 ஆயிரத்து 687 ஓட்டுச் சாவடிகளில், 'வெப் கேமரா'க்கள் பொருத்தப்பட்டு, ஓட்டுப்பதிவு கண்காணிக்கப்பட்டது. துணை ராணுவம், அதிரடிப் படை, தமிழக போலீஸ் படை என, 1.43 லட்சம் பேர் அளித்த பாதுகாப்புக்கு மத்தியில், நேற்றைய ஓட்டுப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. தென்காசி தொகுதியில் தி.மு.க.,வினர் - அ.தி.மு.க.,வினர் இடையே நடந்த அரிவாள் வெட்டு தவிர்த்து, பெரிய அளவில் எந்த
அசம்பாவித சம்பவங் களும் இல்லாமல், மிகவும் அமைதியாக தேர்தல் முடிந்துள்ளது. தமிழக வாக்காளர்களில், 2 கோடியே 75 லட்சத்து 8,336 பேர் ஆண்கள்; 2 கோடியே 75 லட்சத்து 21 ஆயிரத்து 570 பேர் பெண்கள். இவர்களில், 39 லட்சம் பேர், புதிய வாக்காளர்கள். இதில், 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் மட்டும், 15 லட்சம் பேர். இவர்கள், இந்த தேர்தலில் தான் முதல் முறை ஓட்டு போட தகுதி பெற்றுள்ளனர்.


பல முனை போட்டி: கடந்த, 2009 லோக்சபா தேர்தலின்போது, தமிழகத்தில், 4.16 கோடி வாக்காளர்கள் இருந்தனர். இந்த தேர்தலில், 1.34 கோடி உயர்ந்து, 5.50 கோடியாக வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களின் ஆதரவை பெறுவதற்காக நடந்த இந்த தேர்தலில், 55 பெண் கள் உட்பட மொத்தம், 845 வேட்பாளர்கள் களம் இறங்கினர். வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதை போலவே, களத்தில் கட்சிகளின் கூட்டணியும் அதிகமாக இருந்தது. இதுவரை தமிழகம் சந்தித்திராத, பல முனைப் போட்டி நிலவியது.

அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணி - பா.ஜ., கூட்டணி - காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் - ஆம் ஆத்மி என, களத்தில் மோதிய கட்சிகளால், ஆரம்பம் முதல் பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத நிலையே காணப்பட்டது. கட்சித் தலைவர்களின் கடுமையான பிரசாரம், சூறாவளி சுற்றுப்பயணம், அதிரடி பேட்டி, வீடு வீடாய் ஓட்டு சேகரிப்பு என, ஒரு மாத பிரசார காலம், கடந்த, 22ம் தேதி மாலை, முடிவுக்கு வந்தது. ஓட்டுப்பதிவுக்கு முன் கிடைத்த ஒரு நாள்
ஓய்வைக் கூட, கடைசி நேர பணப் பட்டுவாடாவுக்கு பயன்படுத்தி கட்சிகள் ஆதாயம் தேடிக் கொண்டன. அதனால் எழுந்த புகார்களுக்கு இடையில், நேற்று காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. வழக்கம்போல் சில ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவு இயந்திரம் இயங்குவதில் கோளாறு ஏற்பட்டது. மாநிலம் முழுவதும், 349 ஓட்டுச்சாவடிகளில் இந்த பிரச்னை வந்தது. ஆனாலும், உடனடி நடவடிக்கையின் காரணமாக, அவை சரி செய்யப்பட்டு, ஓட்டுப்பதிவு எந்த தடையுமின்றி நடத்தப்பட்டு உள்ளது.
தேர்தல் கமிஷன் செய்திருந்த விரிவான ஏற்பாடுகளாலும், நடவடிக்கையாலும், வாக்காளர்களுக்கு ஓட்டு போடுவதில் எந்த சிரமமும் இல்லை. அதனால், எவ்வளவு பெரிய வரிசையாக இருந்தாலும், ஓட்டு போட்டு விட்டு, 10 நிமிடங்களில் வீடு திரும்ப முடிந்தது என்று, இந்த தேர்தலில் தான், வாக்காளர்கள் முதல் முறையாக பாராட்டு தெரிவித்து உள்ளனர். அதன் காரணமாக, மக்கள் ஆர்வத்துடன் ஓட்டுச்சாவடிக்கு வரத் துவங்கியதன் விளைவு, ஓட்டுப்பதிவு, பகல் 1:00 மணிக்கே, 50 சதவீதத்தை தொட்டு விட்டது. மாலை, 5:00 மணிக்கு, ஓட்டுப்பதிவு சதவீதம், 70ஐ எட்டி விட்டது. இறுதியில், 72.83 சதவீதம் என முடிந்தது. மிக அதிகபட்சமாக, தர்மபுரி தொகுதியில், 80.99 சதவீதமும், மிக குறைந்த பட்சமாக, தென் சென்னை தொகுதியில், 57.86 சதவீதமும் பதிவாகி உள்ளது. கடந்த, 2009 லோக்சபா தேர்தலிலும், தமிழகத்தில், 73 சதவீத ஓட்டுகள் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.


- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: