சனி, 20 ஏப்ரல், 2013

Prakash Raj சினிமாவில் யாருக்கும் வாராத துணிச்சல் ! ஜாதிக்காக கௌரவக் கொலைகள்



கௌரவம் - விமர்சனம்!ஆண்டாண்டு காலமாக இந்திய கிராமங்களில் பற்றியெறிந்து கொண்டிருக்கும் ஒரு முக்கிய பிரச்சனையை, இன்னும் சொல்லப்போனால் இதுவரை யாருக்கும் சொல்ல தைரியம் இல்லாத நிலையில், பிரகாஷ் ராஜ் குழு துணிச்சலோடு ஜாதி கௌரவத்தால் நடைபெறுகிற கௌரவக் கொலைகளைப் பற்றிய ஒரு சம்பவத்தை ஒரு திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்.முதலில் பிரகாஷ் ராஜ் குழுவுக்கு ஒரு பெரிய சல்யூட்! ’டீ கடையில் இரட்டைக் குவளை, ஊர் நுழைவில் மறைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை, தெரியாமல் கால்பட்டதால் ஒரு கலவரமே வெடிப்பது’ என பல விஷயக்களை விவாதிக்கிறது படம். ’காலணி’ என்ற வார்த்தையை மிகவும் அழுத்தமாகவே பதிவுசெய்கிறது இந்தப்படம். 

சென்னை போன்ற நகர்புறங்களில் ஜாதி இல்லை என்பதையும் அதனால் தான்கிராமங்களில் இருந்து சென்னைக்கு இளைஞர்கள் வருகிறார்கள் என்பதையும் வசனத்தின் மூலம் தெளிவுப்படுதுகிறார்கள். 
சரி, படத்தின் கதைக்கு வருவோம். தன் நண்பனைத் தேடி அவன் கிராமத்துக்கு செல்கிறார் ஹீரோ (சிரீஷ்). ஊருக்குள் விசாரிக்க போனவர் தன் நண்பனைப் பற்றிய விவரங்களை யாரும் சொல்ல மறுக்கிறார்கள் என்ற ஆச்சரியத்தோடு இருப்பவருக்கு ஒரு அதிர்ச்சியான தகவலும் தெரியவருகிறது. தன் நண்பன் ஒரு பெண்ணைக் காதலித்து, அந்தப் பெண்ணுடன் ஊரைவிட்டே வெளியேறிவிட்டான் என்ற செய்தி கிடைக்கிறது. 

அதற்கு காரணம் ஜாதி தான் என்றும், தாழ்த்தப்பட்ட ஜாதி என்று கருதப்படுகிற ஒருவன் மேல்ஜாதி என்று கருதப்படுகிற அந்த ஊர் பெரியவர்(பிரகாஷ் ராஜ்) வீட்டு பெண்ணை காதலித்ததால் ஊருக்கு பயந்து ஓடிப்போன அவர்கள் திரும்ப அந்த ஊருக்கு வரவேயில்லை என்ற விஷயங்கள் அடுத்தடுத்தாக தெரியவருகிறது. 

’என் பையனை எப்படியாவது கண்டுபிடித்து கொடுப்பா...’ என்று நண்பனின் அப்பா, ஹீரோ காலில் விழ, ஹீரோவும் அந்த முயற்சியில் இறங்குகிறார். இதற்கு பக்கபலமாக இருப்பது அந்தப்பகுதியில் பொதுவுடைமைவாதியாக இருக்கும் நாசரின் மகள்(யாமி கௌதம்). இவர் ஒரு வழக்கறிஞர் என்பதால் பல விஷயங்களில் ஹீரோவுக்கு உதவி செய்கிறார். ஊரைவிட்டு சென்ற நண்பனைத் தேட பல முயற்சிகள் எடுக்கிறார்கள். பல எதிர்ப்புகள், மிரட்டல்கள் என அனைத்தையும் தாண்டி தன்னோடு படித்த கல்லூரி நண்பர்கள் எல்லோரையும் அந்த கிராமத்தில் ஒன்று சேர்த்து போராடுகிறார்கள். 



பத்திரிக்கை, தொலைக்காட்சி என செய்தி பரவிவிட நாடெங்கும் இந்த சம்பவம் தெரியவருகிறது. ஆனால் நண்பனின் நிலைமட்டும் தெரியவில்லை. ஊரைவிட்டு வெளியேற நினைத்த காதல் ஜோடிகளை வெட்டிக் கொலைசெய்து அந்த ஊரிலேயே புதைத்துவிட்ட உண்மை தெரியவருகிறது. அதை செய்தது யார் என்பதும், அந்த கொடூர குற்றத்தை செய்தவர்களின் முடிவு என்ன என்பதும் தான் படத்தின் முடிவு. 

படத்தின் முதன்மை கதாபாத்திரங்களான ஹீரோவும் ஹீரோயினும் எங்கிருந்தோ கொண்டுவந்த மெழுகு பொம்மைகளை போல உலா வருகிறார்களே தவிர, இருவரிடமும் அழுத்தமான நடிப்பு மிஸ்ஸிங். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் இளங்கோ குமரவேலின் நடிப்பு பிரமாதம். ஊர் பெரியவராக வரும் பிரகாஷ் ராஜ், பொதுவுடைமைவாதியாக வரும் நாசர் என இருவரும் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் நிறைவான நடிப்பை கொடுத்திருகிறார்கள படத்தின் முதல்பாதியில் சித்தரை காட்டி அச்சுருத்துவது தேவையில்லாதது. கல்லூரி நண்பர்களை எல்லாம் கிராமத்திற்கு வரவழைத்து போராடுவது சினிமாத்தனமாக இருந்தாலும், இப்போது இருக்கிற நிலையில் அது சாத்தியம் என்றே தோன்றுகிறது.

தெளிந்த நீரோடையில் நெருப்புக்குண்டுகளை வீசுவதுபோல அழுத்தமான வசனங்களை கொடுத்திருக்கிறார் விஜி. அதுவும் சென்னையை பற்றி விவரிக்கும் போது, ‘அங்க என்னை யாருமே என்ன ஜாதின்னு கேக்கல, நான் வசந்தபவன்ல டிபன் சாப்டுட்டு டிப்ஸ் கொடுத்துட்டு வருவேன். ஆனா இங்க டீ கடையில கூட உள்ளவிட மாட்டானுங்க’ என்று சொல்வதில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பதை நாம் உணரமுடிகிறது. நாம கொளுத்தினா வீடு எரியாதா? நாம அடிச்சா அடி விழாதா? எப்படா திருப்பி அடிக்கப்போறோம்? என்று காலணியில் வசிப்பவன் கேட்பது வசனம் அல்ல, வலி! உயர்சாதியில் இருப்பவர் மீனை சைவம் என்று சொல்லி சாப்பிடும் காட்சி பேஷ் பேஷ்!

ஒரு கிராமம் கிடக்கு... என்ற பாடலில் ’பொறப்பால் மனுசன பிரிச்சது யாரு..’ என்ற கார்க்கியின் கேள்வி கானா பாலாவின் குரலில் இதயத்தில் பதிகிறது அழுத்தமாய். எப்போதுமே ராதாமோகனின் திரைப்படங்கள் நகர்புறத்து விஷயங்களையே விவாதிப்பதாக இருக்கும். சிகப்பான மொழு மொழு முகங்களையே அதில் நாம் பார்க்க முடியும். ஆனால், ஒரு கிராமத்தை களமாக எடுத்திருக்கும் ராதாமோகன் மீண்டும் அதேமாதிரியான பாணியை இதில் கையாண்டிருக்கிறார். மிகவும் ஜாக்கிரத்தையாக எந்த ஜாதியின் பெயரையும் பயன்படுத்தாமல் இருந்தாலும், ஆதிக்க ஜாதியினரின் முகத்திரையை கிழிக்கும் படமாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 


தன் மகளைவிட, தன் தங்கையைவிட, தன் தோழியைவிட, தன் ஜாதியே பெரியது என்று வாழும் ஜென்மங்கள் இன்னும் இந்த உலகில் இருப்பதையும், அவர்களின் அடக்குமுறைக்கு காவல்துறை எப்படி துணைபோகிறது என்பதையும் அழுத்தமாக பதிவு செய்கிறார்.

அரசியல் பின்புலமோ, பணபலமோ, ஒரு ஜாதி அடையாளமோ இல்லாத பிரகாஷ் ராஜ் இந்தப்படத்தை துணிச்சலோடு எடுத்திருக்கிறார் என்பது பாராட்டுக்குறியது. பிரச்சனைகளை காண்பித்த அவர் அதற்கான தீர்வை சொல்லாமல் விட்டது ஏன் என்ற கேள்வி எழுகிறது. 

காதலுக்கு ஜாதி இல்லை என்றோ காதல் ஜாதி பார்ப்பதில்லை என்றோ ஒரு அழுத்தமான வசனம் கூட இதில் இல்லை என்பது கோழைத்தனமா அல்லது புத்திசாலித்தனமா என்பது புரியவில்லை. ஜாதி கௌரவத்திற்காக கொலை செய்யப்படும் கொலைகளைப்பற்றி விவாதிப்பற்காக ஒரு வாய்ப்பை இந்த தலைமுறையிடம் ஏற்படுத்தியதே ஒரு வித வெற்றி தான்.

கௌரவம் - புதைக்கப்பட்ட உண்மை!

கருத்துகள் இல்லை: