சனி, 20 ஏப்ரல், 2013

தமிழக மாணவர் போராட்டம் இலங்கை தமிழர்களின் நிம்மதியை மீண்டும் கேள்விக்குறியாக்குகிறது

இலங்கையில் துக்ளக்;இங்கு நடக்கும் போராட்டங்கள் - அங்கு நிலவும் கருத்துக்கள்
மேலே உள்ள படம் யாழ்பாணத்தில் பிரபலமான வேம்படி மகளிர் கல்லூரியாகும் .
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தவிர அனேகமாக மற்ற எல்லா அரசியல்
கட்சிகளுமே மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழ் ஈழக்கோரிக்கையை வலியுறுத்துகின்றன.இங்கு புத்த பிக்குகள் தாக்கப்படுகின்றார்னள். ஆன்மீகச் சுற்றுப்பயணம் வரும் பக்தர்கள் அடித்துத் தாக்கப்படுகின்றார்கள். இலங்கை அரச அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன. அரசியல் சார்பில்லாத மாணவர்கள் கூட தமிழ் ஈழத்திற்காகக் குரல் கொடுக்கின்றார்கள்.
thuglak
இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக இங்கு நடக்கும் போராட்டங்கள் பற்றி இலங்கையில் உள்ள தமிழர்களும் இலங்கையிலிருந்து வெளியாகும் தமிழ்ப்பத்திரிகைகளும் என்ன சொல்கின்றன. நமது நிருபர்கள் நேரடியாக இலங்கை சென்று அங்கு ஆறு நாட்கள் கொழும்பு,யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு,முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, கண்டி ஆகிய  நகரங்களுக்குச் சென்று அங்குள்ள தமிழ் மக்களை தமிழ்த் தலைவர்களைச் சந்தித்து வந்துள்ளனர்.

அத்துடன் இலங்கை அரசு துணையோடு இராணுவ அதிகாரிகள், இலங்கை இராணுவத்தில் இணைந்திருக்கும் தமிழ்ப்பெண்கள், மறுவாழ்வு இல்லத்தில் இருக்கும் முன்னாள் புலிகள் ஆகியோரையும் சந்தித்துப் பேசி எல்லோரின் உரையாடல்களையும் ஆடியோ மற்றும் வீடியோவில் பதிவு செய்து கொண்டு வந்துள்ளனர். நமது நிருபர்கள் இலங்கையில் உள்ள நிலைமைகள் பற்றி இந்தச் சிறிய கட்டுரைத் தொடரின் முதல் அத்தியாயமாக இலங்கைத் தமிழர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கள், இங்கே இடம் பெறுகின்றன.

ஆ-ர்

கட்டமிடப்பட்ட செய்தி 2

இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகளின் குரல்

என். நடேசன் (இலங்கையில் வெளியாகும் ‘தினமுரசு தமிழ் நாளிதழ் 1.4.13– பக்கம் 5-ல் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து) :

“ அக்காலத்தில் பிரபாகரன் ஒன்றரைக் கோடி சிங்களரை எதிரியாக்கியதும், பின்பு ராஜீவ் காந்தியைக் கொன்று இந்திய மக்களை எங்களுக்கு எதிரியாக்கிய படுமுட்டாள்தனமான வேலையைக் காட்டிலும், இன்று மிக மோசமான வேலையை இலங்கைத் தமிழருக்கு எதிராகச் செய்கிறார்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள். தமிழ்நாட்டில் வைத்து புத்த பிட்சுகளை அடிப்பது, துன்புறுத்துவதன் மூலம் இலங்கைத் தமிழருக்கு எதிராக, உலகத்தில் உள்ள அறுபது கோடி புத்த மக்களையும், அவர்களின் அரசாங்கங்களையும் தூண்டி விடுகிறீர்கள்.நான் எழுதுவதில் சந்தேகம் இருந்தால், ஜெனீவா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவு மற்றும் நடுநிலை கடைபிடித்த நாடுகளின் பட்டியலைப் பாருங்கள். இலங்கை அரசாங்கம் உங்களின் செயல்களிலிருந்தே பலம் பெறுகிறது. சிங்கள இனவாதத்தின் கொம்புகளைச் சீவாதீர்கள். நாங்கள்தான் மீண்டும் ரத்தம் சிந்த வேண்டும்.  ”

மனோ கணேசன் (தலைவர், ஜனநாயக மக்கள் முன்னணி)இலங்கையில் வெளியாகும் ‘தினக்குரல்’ (31.3.13) நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில்:

“தமிழக சட்டப் பேரவையில் தமிழீழத்திற்கான வாக்களிப்பு நடைபெற வேண்டும் என்ற தீர்மானம் முன் வைக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பு அல்லது வாக்களிப்பு எங்கு நடைபெற வேண்டும் என்ற தெளிவு இல்லை. ஒரு காலத்தில் புலிகளின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பிரதேசம் இருந்தது. அப்போது இத்தகைய ஒரு தீர்மானம் வந்திருந்தால், பொருத்தமாக இருந்திருக்கும். தமிழகத்தில் இருந்தபடி இலங்கையில் வாழும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் குறிக்கோள்கள் அறிவிக்கப்படும்போது, அவற்றை இலங்கை வாழ் தமிழர்களின் அரசியல் தலைமைகளுடன் புரிந்துணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டு அறிவிக்கப்பட வேண்டும். தமிழக முதல்வர் மற்றும் போராடும் மாணவர்கள் இலங்கைவாழ் தமிழர்களுடன் பேசியதாகத் தெரியவில்லையே? 

 “மனித உரிமை மீறல் என்பதுதான் இன்றயை உலகை உலுக்கும் மகா மருந்து. ஆனால், தனி நாடு, பொது வாக்கெடுப்பு என்ற அரசியல் கோரிக்கைகள் முன்வைக்கப்படும்போது, அவற்றை உலகம் இன்றையச் சூழலில் வரவேற்காது; உலக மனித உரிமை அமைப்புகளின் ஆதரவும் கிடைக்காது; இந்திய அரசும் நிராகரிக்கும். பாருங்கள், தமிழக சட்டசபையின் தீர்மானங்களை மத்திய அமைச்சரே நிராகரித்து விட்டார்.    “அரசியல் தீர்வு கோரிக்கைகளை தமிழகம் இலங்கைத் தமிழ்த் தலைமைகளிடம் விட்டு விட வேண்டும். மாகாண சபையா? சமஷ்டியா? கூட்டாட்சியா? தனி நாடா? அது எதுவானாலும் அவற்றை இங்கு வாழும் தமிழர்களின் தலைமை தீர்மானித்து அறிவிக்கட்டும். தமிழக மாணவர்களும், சட்டசபையும் மனித உரிமை மீறல்களை முன்னிறுத்தி போராட்டங்களையும் தீர்மானங்களையும் முன்னெடுக்கட்டும்

வீ.தனபாலசிங்கம் (ஆசிரியர் - தினக்குரல் நாளிதழ்) யாழ்ப்பாணத் தமிழர்

' தமிழக அரசியல்வாதிகளின் போராட்டங்களை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது. அவர்கள் அங்கு ஓட்டு வாங்குவதற்காக இலங்கை விவகாரத்தில் பல நிலைப்பாடுகளை எடுப்பார்கள். ஆனால் மாணவர்களின் போராட்டம் உணர்வுபூர்வமானது. அதை நாங்கள் பெரிதும் மதிக்கின்றோம். ஆனால் அப்படிப் போராடும் முன்பாக எங்களின் தேவை என்ன என்பதை அறிந்து போராடவேண்டும். இல்லையென்றால் எங்கள் கோரிக்கை ஒன்றாகவும் அவர்கள் கோரிக்கை ஒன்றாகவும் இருந்தால் அது எல்லோர்;க்கும் தோல்வியைத் தந்துவிடும்.

தமிழ் ஈழம் என்ற கோரிக்கையை நாங்கள் கைவிட்டு விட்டோம். இவ்வளவு அனுபவங்களுக்கு பிறகு மீண்டும் 'தமிழ் ஈழம்' என்ற கோரிக்கையை கையிலெடுத்தால் அது எஞ்சியுள்ள தமிழர்களின் எதிர்காலத்தைப் பாழடித்துவிடும். இன்றைய நிலையில் அது சாத்தியமில்லாத கோரிக்கை.எப்படி இலங்கை அரசாங்கம் எங்களுக்கு உடன்பாடில்லாத விஷயங்களை எங்கள் மீது திணிக்கக்கூடாது என்று நினைக்கின்றோமோ, அப்படித் தான் தமிழகத் தமிழர்களும் எங்கள் ஆலோசனைகளில்லாமல் எங்கள் மீது எதனையும் திணிக்கக்கூடாது என்று நினைக்கின்றோம். உங்கள் அன்புக்குத் தலை வணங்குகின்றோம். ஆனால், அது எங்களுக்கு அனுகூலமானதாக இருக்கவேண்டும்.'

வீ.ஆனந்த சங்கரி (செயலாளர் தமிழர் விடுதலைக் கூட்டணி)

'தனித் தமிழ் நாடு என்ற கோரிக்கையை நாங்கள் துவங்கும் முன்பே துவக்கியவர்கள் இந்தியத் தமிழர்கள் தான். அந்தக் கோரிக்கையை நீங்களே கைவிட்டு விட்டீர்கள். அதிகாரம் பொருந்திய மாநில அரசு என்ற நிலைக்கு நீங்கள் பழகி கொண்டீர்கள். தற்போது அதில் திருப்தியடைந்து நிம்மதியாக வாழ்கிறீர்கள். இதையே தான் இங்குள்ள தமிழர்களும் விரும்புகின்றோம்.அதைப் பெற்றுத் தரும் வகையில் உங்கள் போராட்டம் அமையுமானால் அது பாராட்டுக்குரியது.சிங்களத் தலைவர்கள் பலர் தங்கள் அரசியலுக்காகப் பல தவறுகளைச் செய்யலாம். ஆனால் பெரும்பாலான சிங்கள மக்கள் நல்லவர்கள். அவர்களைத் தமிழகத்தில் வைத்து தாக்குவது மிகவும் தவறானது.காந்தி பிறந்த மண்ணில் அது நடக்கக்கூடாது. அது எங்களைத் தான் மேலும் பாதிக்கும்.

யோகேஸ்வரி பற்குணராசா (மேயர், யாழ்ப்பாணம்)

'சுமார் எட்டுக் கோடித் தமிழர்கள் வசிக்கும் தமிழ்நாட்டைத் தனிநாடாக்க முடியவில்லை. மொத்த சனத்தொகையில் இரண்டு கோடி கொண்ட இலங்கையில் முஸ்லிம் தமிழர்களைத் தவிர்த்து மலையகத் தமிழர்களைத் தவிர்த்து இந்திய வம்சாவளித் தமிழர்களைத் தவிர்த்து, வெறும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதித் தமிழர்கள் சில லட்சம் பேருக்கு மட்டும் ஒரு தனி நாடு கேட்பது எந்த விதத்தில் சாத்தியப்படும் என்பதை புலிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான ஆதரவாளர்களைத் தவிர மற்ற எல்லோருமே தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டுப் பல காலம் ஆகிவிட்டாது .தற்போது அதைக் கையில் எடுத்துப் போராடுவது இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் குறித்த மிச்ச கனவுகளையும் திசை மாற்ற மட்டுமே உதவும்.தமிழகத்தில் நிலவும் வதந்திகளை நம்பாதீர்கள். இங்கு வாழ்வது நாங்கள்.இங்கு வந்து பாருங்கள். தற்போதைய உங்கள் போராட்ட வடிவம் எங்களுக்கு நன்மை தராமல் பாதிப்பு ஏற்படுத்துவதற்கே வாய்ப்பு அதிகம் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

கங்கா (பஸ் ஆபரேட்டர்- யாழ்ப்பாணம்)

'இறுதிப் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகப் போகி;ன்றது. இங்கு தனி ஈழம் தான் தீர்வு என்று நாங்கள் நினைத்திருந்தால் இந்த நான்கு ஆண்டுகளில் இங்கு ஒருவராவது உண்ணாவிரதம் இருந்திருக்கமாட்டோமா? தீக்குளித்திருக்கமாட்டோமா? அப்படி எந்தச் செய்தியாவது உங்களை வந்தடைந்ததா? பிறகு ஏன் அங்குள்ள இளைஞர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. மொத்த இலங்கை அளவு கொண்ட தமிழகத்தை தனிநாடாகக் கேட்டால் டெல்லி கொடுக்குமா? பிறகு அந்த அளவை விட மிகச் சிறிதான பகுதியை தனி நாடாக இங்கு எப்படிப் பெற முடியும்? கடந்த 30 வருடங்களாக போர் என்ற பெயரில் நரகவாழ்க்கை வாழ்ந்து வந்த நாங்கள் இப்போது தான் நிம்மதியாக வாழத் தொடங்கியுள்ளோம். எங்களின் அரசியல் தீர்வுக்கு உதவுங்கள்.அதற்கு இந்தியாவைத் தயார்ப்படுத்துங்கள். அது தான் நீங்கள் எங்களுக்குச் செய்யும் நிஜ உதவியாக இருக்கும்.

.பெயர் சொல்ல விரும்பாத தமிழ்ப் பத்திரிகையாளர்:

'தமிழக மாணவர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் இது தான். தங்கள் தனிநாடு கோரிக்கை இந்தியாவில் எடுபடாது என்பதை உறுதி செய்து கொண்டதன் பின்னர் அந்த ஆசையைக் கைவிடமுடியாத அங்குள்ள சில அரசியல்வாதிகள் அவர்கள் ஆசையை உங்களிலும் எங்கள் மீதும் திணிக்கப் பார்க்கின்றார்கள். நன்கு வசதியாக இருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் சலுகைகளை அனுபவிக்கும் அந்த அரசியவாதிகளின் தூண்டுதலுக்கு ஆளாகி உங்கள் கல்வியைப் பாழடித்துக் கொள்ளாதீர்கள். ஒரு அரசியல் கூட்டணிக்குப் போனால், இரண்டு டிஜிட் ஸீட் கூட வாங்க முடியாத சில சின்ன சின்ன அரசியல் தலைவர்கள் அவர்களின் அரசியல் ஸ்திரத் தன்மைக்காக உங்கள் வாழ்க்கையை பலியாக்குகின்றார்கள். இந்த மண்ணில் எங்கள் இளைஞர்கள் வாழ்க்கையைத் தொலைத்தது போதும். அங்குள்ள இளைஞர்களான நீங்களும் உங்கள் வாழ்க்கையைத் தொலைத்துவிடாதீர்கள்.

இங்கு தனிநாடு என்பது சாத்தியமில்லை. எங்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் அரசியல் தீர்வு தமிழர்களுக்கு சமஉரிமை என்பதான கோரி;க்கைகளுக்காகப் போராடுங்கள்.அது தான் யதார்த்த நிலைமை. அது தான் எங்களுக்கு நன்மை பயக்கும். எங்கள் மீது அன்பு செலுத்தும் நீங்கள், நாங்கள் வாழும் நாட்டை எதிரி நாடு என்று அறிவிக்கச் செய்வதில் என்ன லாபம் அடைவீர்கள்? இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தால், இங்குள்ள மக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய்,சோப், துணிமணிகளுக்கு எங்கே போவோம்? அவை வேறு நாடுகள் வழியாக எங்களுக்கு வந்து சேரும். விலையும் அதிகமாகும். வழியில் யார் யாரோ கொள்ளை லாபம் சம்பாதிப்பார்கள். இதையா நீங்கள் விரும்புகின்றீர்கள்?'

கிளிநொச்சி வி. சகாதேவன் (போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர்) :

 'அங்கு போராடும் இளைஞர்கள் ஒருமுறை இங்கு வந்து பார்த்து, இங்குள்ள மக்களைச் சந்தித்த பிறகு, உங்கள் போராட்டக் கோரிக்கைகளை வடிவமைக்க வேண்டும் என்று அன்போடு அழைப்பு விடுக்கிறேன். வழி தவறிய போராட்டம், நன்மைக்குப் பதிலாக தீமையை உருவாக்கி விடும். 90 ஆயிரம் விதவைகள் இங்கு இருக்கிறார்கள். எங்கள் ஒரு இயக்கத்தில் மட்டும், சொத்துக்களை இழந்த 2244 குடும்பங்கள் உறுப்பினர்களாகி இருக்கிறார்கள்.ஈழம் என்பது இனி கனவிலும் சாத்தியமில்லாத விஷயம். அதற்குப் பதிலாக, விதவைகள் தங்கள் குழந்தைகளை வளர்த்தெடுக்க மறுவாழ்வுத் திட்டம், வீடுகளை இழந்தவர்களுக்கு மீண்டும் வீடுகள், நிலத்தை இழந்தவர்களுக்கு மீண்டும் அதே நிலம், தொழிலை இழந்தவர்களுக்கு இழப்பீடுகள் என்பதுதான் எங்களது இன்றையத் தேவை. தொலைத்த இடத்தில் தேடினால்தான் இழந்த பொருள் கிடைக்கும். 'ராஜபக்ஷ அரசின் செயல்களுக்கு அந்த அரசிடம்தான் இழப்பீடு பெற முடியும். அவருக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து, சிறையில் அடைப்பது முக்கியமல்ல. எங்கள் வாழ்வு எங்களுக்குத் திரும்பக் கிடைக்க வேண்டுமென்பதுதான் அதை விட முக்கியம்.இவரிடம் போராடினால்தான் ஓரளவாவது இழப்பீடு பெற முடியும். 18 கட்சி கொண்ட கூட்டணி ஆட்சி இது. பல கட்சிகளின் மூலம் அவருக்கு நெருக்கடி கொடுக்க முடியும். பல தமிழ் கட்சிகளும் அதில் உள்ளன. அவர்களும் அதற்கு நெருக்கடி கொடுக்க முடியும். அடுத்த ஆட்சி வந்து விட்டால் 'அது அவர்கள் பாடு உங்கள் பாடு' என்று கைகழுவி விடக்கூடும். எனவே, முடிந்தளவு இந்த அரசிடமே பேசி, எங்கள் வாழ்க்கையைத் திரும்பப் பெறுவதுதான் சிறந்த ராஜதந்திரமாக இருக்க முடியும். அதற்கு உங்கள் போராட்டங்கள் துணை நிற்க வேண்டுமே தவிர, தடைக் கற்களாகி விடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.'

ஆர். யோகராஜன் (ஐக்கிய தேசியக் கட்சி, பிரதான எதிர்க் கட்சி எம்.பி.)

 'எழுபதுகளில் அஹிம்சா முறையில் தோன்றிய தனித் தமிழீழக் கோரிக்கை, 80-களில் ஆயுதம் ஏந்தத் துவங்கியது. ஆனால், தொடர்ந்து போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில், அந்தக் கோரிக்கை படிப்படியாகக் கைவிடப்பட்டுவிட்டது. புலிகள் மட்டுமே அதை விரும்பினார்கள். மக்கள் அரசியல் தீர்வை நோக்கி நகரத் துவங்கி விட்டனர். தமிழர்களுக்கு உரிய அரசியல் தீர்வு தருவது குறித்து சிங்கள மக்களிடையே நடத்தப்பட்ட சர்வேயில், 82 சதவிகித சிங்கள மக்கள் தமிழருக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்திருந்தனர். சிங்கள அரசாங்கம் அரசியலுக்காகச் செயல்படலாம். ஆனால், சிங்கள மக்கள் அப்படியில்லை. 'தமிழகத்திற்கு வரும் சிங்களவர்களை அங்குள்ளவர்கள் தாக்குவது மிக மிகத் தவறானது. புத்தபிட்சுகள் கடுமையாகத் தாக்கப்பட்ட ஃபோட்டோ, வீடியோக்கள் வெளியான பிறகும் கூட இங்குள்ள தமிழர்கள் மீது எந்தத் தாக்குதலும் நடக்கவில்லை என்பது, இங்கு நிலவும் அமைதிக்கு ஒரு பெரிய உதாரணம். இதன் பிறகாவது அது போன்ற செயல்கள் அங்கு நடைபெறாமல் இருக்க வேண்டும். அங்குள்ள இசை அமைப்பாளர்கள், பாடகர்கள், சினிமா நட்சத்திரங்கள் இலங்கை வந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள். அவர்களுக்கு 'தமிழ்த் துரோகி' என்று முத்திரை குத்துகிறீர்கள். இது என்ன நியாயம்? அவர்கள் இங்கு வந்து மகிழ்விக்கப் போவது யாரை? இங்குள்ள தமிழர்களைத்தானே? இங்குள்ள தமிழன் தமிழ் இசை கேட்கக் கூடாதா? அந்த இசையமைப்பாளர்களை, பாடகர்களை நேரில் பார்த்து மகிழக் கூடாதா? கிரிக்கெட், தடகளம்... என்று விளையாட்டுகளில் கூட இதையெல்லாம் கொண்டு வந்தது மிகத் தவறு.'

டக்ளஸ் தேவானந்தா (இலங்கை அமைச்சர்) :

 'உணர்வுகளால் மட்டும் சிந்திக்காமல், நடைமுறை சாத்தியங்களையும் மனதில் நிறுத்தி தமிழக மாணவர்கள் சிந்திக்க வேண்டும். பெரும்பாலும் தமிழர்கள் மட்டுமே உள்ள இடத்திற்கு வருகை தரும் சிங்கள வரையும், புத்த பிட்சுகளையும் தாக்குவதென்பது சரி என்றால், 72 சதவிகித சிங்களவர்களைக் கொண்ட மண்ணில் தமிழன் தாக்கப்பட்டதும், தாக்கப்படுவதும் நியாயம்தான் என்றாகி விடும். அதற்குத் தயவு செய்து இடம் கொடாதீர்கள்.

கண்டி மலைவாழ் தமிழர்கள் :

 ' இங்கு நாங்களும் சிங்களரும் சேர்ந்து வாழ்கிறோம். தமிழகத்தில் சிங்களர்கள் மற்றும் புத்த பிட்சுகள் தாக்கப்பட்டார்கள்; இலங்கை அலுவலகங்கள் மீது தாக்குதல் என்றெல்லாம் செய்திகள் வந்தால், அன்றைக்கு நாங்கள் வெளியே செல்லாமல் பயந்து, பயந்து வீட்டிற்குள்தான் இருப்போம். உங்கள் செயல்களால் எங்களது வாழ்வு பாதிக்கப்படக் கூடாதல்லவா ? எனவே, இது போன்ற தாக்குதல்களைக் கைவிடுங்கள். எங்களின் அபிவிருத்திக்கும், அரசியல் தீர்வுக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் உதவும் வகையில் சிந்திக்க வேண்டுகிறோம்.'

பெயர் வெளியிட விரும்பாத சிங்களர் (தமிழிலேயே பேசினார்) :

' இந்தியாவில் தமிழ்நாட்டைத் தனி நாடாக்கப் போராடாமல், இலங்கையில் பிரிவினை கேட்டு அங்கு போராடுவது ஆச்சரியமாக இருக்கிறது. பாகிஸ்தானில் மாணவர்கள் எல்லாம் சேர்ந்து கடுமையான போராட்டம் நடத்தினால், நீங்கள் காஷ்மீரைத் தனி நாடாக அறிவித்து விட முடியுமா? அதுதான் இங்குள்ள நிலைமையும். ஏற்கெனவே சிறிய நாடு இது. இங்கு இன்னும் பிரிவுகள் வந்து என்ன பயன்? யாழ்ப்பாணத் தமிழருக்குத் தனிநாடு கொடுத்தால், அதில் இந்திய வம்சாவளி தமிழர்களையும், மலையகத் தமிழர்களையும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். பிறகு அவர்களுக்கு ஒரு நாடு தர வேண்டும். அதையடுத்து சுமார் 14 சதவிகிதம் தமிழ் பேசும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு தனிநாடு கொடுக்க வேண்டும். சிங்களவர்களில் கிறிஸ்தவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். அவர்கள் கேட்டால் அவர்களுக்கும் ஒரு நாடு கொடுக்க வேண்டும். சாத்தியமா இதெல்லாம்?

(தொடரும்)

கருத்துகள் இல்லை: