திங்கள், 25 ஜூன், 2012

ஜெயலலிதா பிரதமராகி அதிரடி நடவடிக்கை எடுக்கும்வரை தொடரும் வழக்கு

சசிகலாவின் சடுதி உத்தரவு: “யாரங்கே.. அடுத்த அத்தியாயம் ரெடியா?”

Viruvirupu
ஓய்வெடுக்க கொடநாடு சென்றுவிட்ட முதல்வர் ஜெயலலிதாவும், ‘கண் வைத்தியம்’ செய்துவிட்டு போயஸ் கார்டனில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் சசிகலாவும், தம்மீதுள்ள ஊழல் வழக்கில் விசாரணையை எதிர்கொள்ளதான் வேண்டும். அதற்கு தடையெல்லாம் விதிக்க முடியாது என்று கூறிவிட்டது சுப்ரீம் கோர்ட்.
இந்த விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று, சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்திருந்தார் முதல்வரின் ‘மீண்டும் தோழி’ சசிகலா.
“அக்கா… இது நம்ம வெற்றிகரமான 25-வது அத்தியாயம்”
முதல்வர் ஜெயலலிதா பிரதான குற்றவாளியாகவும், தோழி சசிகலா இரண்டாவது குற்றவாளியாகவும் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு, பெங்களூரு தனி நீதிமன்றத்தில், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் இருந்து நடைபெற்று வருகின்றது.

இந்த வழக்குகளை எந்தெந்த வழிகளில் தாமதப்படுத்த முடியுமோ, அந்தந்த வழிகளில் தாமதப்படுத்தும் முயற்சிகளில் தோழிகள் கடந்த சில வருடங்களாக அனுபவம் பெற்றவர்களாக உள்ளார்கள்.
அந்த அனுபவத்தின் வெளிப்பாடாக, தோழிகளுக்கும், இந்திய குற்றவியல் சட்டத்துக்கும் இடையிலான போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என்பது இதுவரை தெரியாத மர்மமாகவே உள்ளது.
இந்திய குற்றவியல் சட்டம் ஜெயிப்பதுபோல வெளியே தெரிந்தாலும், தோழிகள் வழக்கை தாமதமாக்க தேவையாக கால அவகாசம் கிடைத்தவண்ணம் உள்ளது.
அந்த வரிசையில் தோழிகள் தரப்பின் ஒரு அத்தியாயம் தற்போது சுப்ரீம் கோர்ட் உத்தரவின்பேரில் முடிந்துள்ளது.
நீதிபதியின் கேள்விகளுக்கு பதில்கூற வசதியாக வழக்கின் ஆவணங்களைத் தரவேண்டும் என்று என்று சசிகலா பெங்களூரு தனி நீதிமன்றத்தில் மனு செய்து இந்த அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தார்.
மனு அங்கே டிஸ்மிஸ் செய்யப்பட, அங்கிருந்து பெங்களூரு ஹைகோர்ட்… டில்லி சுப்ரீம்கோர்ட்… என்று ஒரு ரவுண்டு போய், சுப்ரீம் கோர்ட் “இல்லை” என்று (எதிர்பார்க்கப்பட்ட) பதிலைக் கூறியதுடன் இந்த அத்தியாயம் முடிவடைந்துள்ளது. அடுத்த அத்தியாயம் புதியதொரு மனுவுடன், கீழ் கோர்ட்டில் இருந்து விரைவில் துவங்கும்.
மூன்று கோர்ட்டுக்கு ஒரு அத்தியாயம்.. ஒரு கோர்ட் தீர்ப்பு கொடுக்க மூன்று வாரம்.. ஒவ்வொரு தீர்ப்புக்கும் அப்பீல் மனு செய்ய சட்டப்படி அவகாசம் 10 நாட்கள்.. என்றால், ஒரு அத்தியாயம் எத்தனை வாரங்கள் இழுக்கும் சொல்லுங்க பார்க்கலாம்?
ஜெயலலிதா பிரதமராகி, சுப்ரீம் கோர்ட்டுக்கு மேலே ‘சுப்ரீம்-மோஸ்ட் கோர்ட்’ என ஒன்றை கொண்டு வந்தால், ஒவ்வொரு அத்தியாயத்தையும், இன்னும் சற்று இழுக்கலாம்.

கருத்துகள் இல்லை: