வியாழன், 28 ஜூன், 2012

சுர்ஜித் சிங் விடுதலை..பாகிஸ்தான் ஊடகங்கள் சரப்ஜித் சிங்கிற்கு எதிராகவே உள்ளன

 What About Sarabjit Singh
டெல்லி: உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட சுர்ஜித் சிங் 30 ஆண்டுகள் கழித்து இன்று விடுவிக்கப்பட்டு இந்தியா வந்தார். ஆனால் தீவிரவாத செயலுக்காக பாகிஸ்தான் சிறையில் உள்ள சரப்ஜித் சிங் எப்பொழுது விடுவிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பிகிவிந்த் கிராமத்தைச் சேர்நதவர் சரப்ஜித் சிங்(45). கடந்த 1990ம் ஆண்டு பாகிஸ்தானில் 14 உயிர்களை காவு வாங்கிய வெடிகுண்டு தாக்குதல்களில் தொடர்பு உள்ளதாகக் கூறி சரப்ஜித் சிங் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டர். தீவிரவாத செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

கடந்த 20 வருடங்களாக தூக்குக் கயிற்றுடன் போராடி வருகிறார் சரப்ஜித் சிங். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று இரு நாடுகளையும் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் போராடி வருகின்றன. இந்தியத் தலைவர்களும் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இது குறித்து கோரிக்கை விடுத்தபடி உள்ளனர்.
கடந்த மாதம் சர்தாரிக்கு புதிதாக ஒரு கருணை மனுவையும் அனுப்பியிருந்தார் சரப்ஜித் சிங். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, பாகிஸ்தான் ஊடகங்களில் சரப்ஜித் சிங்கை அதிபர் சர்தாரி மன்னித்து விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார் என்று செய்தி வெளியானது. இதனால் இரு நாடுகளிலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவிலும் மகிழ்ச்சி அலை வீசியது.
இதைக் கேட்ட சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். இனிப்புகளை உற்றார், உறவினர், நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர். கிட்டத்தட்ட ஐந்து மண நேரம் இந்த செய்தி நீடித்தது. இரு நாட்டு டிவி சேனல்களிலும் சரப்ஜித் சிங் குறித்த செய்திகளே தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தது.
ஆனால் செவ்வாய்க்கிழமை இரவுக்கு மேல் பாகிஸ்தான் அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் பர்ஹத்துல்லா பாபர் புதிய குண்டைத் தூக்கிப் போட்டார். அவர் கூறுகையில், விடுதலை செய்தி குறித்து ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. முதலில், இது அதிபர் வழங்கிய மன்னிப்பு அல்ல. அடுத்து, விடுதலை செய்யப்படவுள்ளவர் சரப்ஜித் சிங் அல்ல, சுர்ஜித் சிங் என்ற கைதிதான் விடுவிக்கப்படவுள்ளார் என்றார்.
இதனால் சரப்ஜித் சிங் குடும்பத்தார் மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தனர். சரப்ஜித்தை பாகிஸ்தான் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தங்கள் கோரிக்கையை முன்வைத்து நேற்று ஜலந்தரில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடத்தினர். இன்று டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கூடிய சரப்ஜித் சிங் குடும்பத்தார் தங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே அறிவித்தபடி சுர்ஜித் சிங் இன்று காலை லாகூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு இந்தியா வந்தார். அவருக்கு இந்திய எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
30 ஆண்டுகள் கழித்து தாய்நாட்டு மண்ணை மிதி்த்துள்ள சுர்ஜித் சிங் கூறுகையில்,
30 ஆண்டுகள் கழித்து குடும்பத்துடன் இணைந்ததில் பெரு மகிழ்ச்சி. பாகிஸ்தான் சிறையில் என்னை யாரும் தரக்குறைவாக நடத்தவில்லை. இனி பாகிஸ்தான் பக்கமே செல்ல மாட்டேன். மீண்டும் சென்றால் வேறு ஏதாவது வழக்கை போட்டு சிறையில் அடைத்துவிடுவார்கள்.
பாகிஸ்தான் ஊடகங்கள் எப்பொழுதுமே சரப்ஜித் சிங்கிற்கு எதிராகவே உள்ளன. நான் விடுதலையாகும் முன்பு சரப்ஜித் சிங்கை பார்க்க எனக்கு அனுமதி அளிக்கவில்லை. சரப்ஜித் சிங்கை விடுவிக்க என்னால் முடிந்த வரை முயற்சி செய்வேன் என்றார்.

கருத்துகள் இல்லை: