சனி, 30 ஜூன், 2012

தேர்தலுக்குப் பிறகு டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு

அரசியலுக்கும், விலைவாசி உயர்வுக்கும் கனெக்ஷன் இருப்பது புதிய விஷயமல்ல. அதுவும் தேர்தல் காலமென்றால், கனெக்ஷன் சற்றே அதிகம் இருக்கும். அதற்காக, பொதுமக்கள் ஓட்டு போடாத ஜனாதிபதி தேர்தலையும், விலையுயர்வையும் கனெக்ட் பண்ணுவதுதான், கொஞ்சம் டூமச்.
ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அதில் மட்டும் கை வைக்கப் போவதில்லை. இலவச இணைப்பாக, வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கும் கேஸின் அளவிலும் மாற்றம் வரப் போவதாக அடித்துச் சொல்கிறார்கள்.
“தாங்யூ பிரணாப்… ஏதோ உங்க தயவில..”
இது ஏற்கனவே போடப்பட்ட திட்டம்தான். பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது, அவர் தலைவராக இருந்த அமைச்சர்கள் குழு, இந்த விலையேற்றம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருந்தது.
பிரணாப், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற ‘அரசியலில்’, முடிவெடுப்பது ஒத்தி வைக்கப்பட்டது.

முடிவு எடுக்கப்பட்டிருந்தால், கெட்ட பெயர் பிரணாப்புக்கு ஏற்பட்டிருக்கும். அவரை தற்போது ஆதரிக்கும் சில கட்சிகள், ஆதரவு கொடுப்பது பற்றி ஒரு தடவைக்கு பல தடவைகள் யோசித்திருக்க கூடும். முடிவு எடுக்காத காரணத்தால், பிரணாப்புக்கு எதிர்ப்பு பெரிதாக இல்லை.
இப்போது, நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து பிரணாப் ராஜினாமா செய்துவிட்டார். அவர் தலைவராக இருந்த அமைச்சர்கள் குழுவிலும் அவர் கிடையாது. பிரதமரின் தலைமையில் உள்ளது அந்தக் குழு.
விலையுயர்வு தொடர்பாக அந்தக் குழு உடனடியாக முடிவு எடுத்தால், “ஆஹா.. பிரணாப்பை ஜனாதிபதி வேட்பாளராக்க செய்த ட்ரிக் இது” என்று எதிர்க்கட்சிகள் சொல்லத் துவங்குவார்கள். அதனால், ஜனாதிபதி தேர்தல் முடியட்டும் என காத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி நடைபெறுகிறது.
அதன் பின்னர் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுகிறது. இதேபோல் வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கையை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 4 சிலிண்டர் மட்டுமே இனி மானிய விலையில் வழங்கப்படும். கூடுதல் சிலிண்டர்களை சந்தை விலைக்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விலையுயர்வு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு, நாட்டின் முதல் குடிமகன் ஜனாதிபதி மாளிகைக்கு சென்றபின், உங்கள் சொந்த மாளிகை தேடிவரும். ஜனாதிபதி மாளிகைக்கு சிலிண்டர் கட்டுப்பாடு கிடையாது. உங்களுக்கு உண்டு.

கருத்துகள் இல்லை: