புதன், 27 ஜூன், 2012

அ.தி.மு.க.வை மண்கவ்வ அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பண்ணும் அலம்பல்

சென்னை அ.தி.மு.க. அட்டகாசம்: உளவுத்துறை அதிகாரியை உருட்டலாமா? சென்னை மாநகராட்சியின் அ.தி.மு.க. கவுன்சிலர்கள், கடும் கோபத்தில் உள்ளார்கள். இவர்களது கோபத்துக்கு உள்ளாகியிருப்பவர்கள், தி.மு.க.-வினரோ, தே.மு.தி.க.-வினரோ அல்ல… தமிழக உளவுத்துறையினர்!
முதல்வர் ஜெயலலிதா தமிழக உளவுத் துறையிடம் சில வாரங்களுக்கு முன் ஒரு ப்ராஜெக்ட் கொடுத்திருந்தார். கடந்த தி.மு.க. அரசால் செங்கல்பட்டுக்கும், அதன்பின் நெல்லை மாவட்டத்துக்கும் பந்தாடப்பட்டு, தற்போது சென்னைக்கு வந்துள்ள அதிகாரி ஒருவரிடம் இந்த ப்ராஜெக்ட் கொடுக்கப்பட்டிருந்தது.
மீண்டும் இங்கே வரும் திட்டம் அ.தி.மு.க.-வுக்கு இல்லை?
அ.தி.மு.க. கவுன்சிலர்கள், சென்னை மாநகராட்சியின் நிர்வாகத்தில் சகட்டு மேனிக்கு தலையிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்மையா என ரிப்போர்ட் கொடுக்குமாறு முதல்வர் கேட்டிருந்தார்.
பக்காவாக ப்ராஜெக்ட் ஒர்க் செய்யக்கூடிய அந்த அதிகாரி கொடுத்த ரிப்போர்ட், முதல்வரை அதிர வைத்தது என்கிறார்கள்.
“அடுத்த தேர்தலில் சென்னையில் அ.தி.மு.க.வை மண்கவ்வ வைப்பதற்கு, சென்னை மாநகராட்சியில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பண்ணும் அலம்பல் ஒன்றே போதும். அநேக கவுன்சிலர்கள், மாமூல், கப்பம் என தனி சாம்ராஜ்யமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்..” என்று துவங்கி, ஒவ்வொருவரும் என்ன செய்கிறார்கள் என விலாவாரியாக புட்டுப் புட்டு வைத்ததில், முதல்வர் கொதித்து விட்டார் என்கிறார்கள்.
அதையடுத்து, கவுன்சிலர்கள் அனைவரையும் அழைத்து டோஸ் விடப்பட்டிருக்கிறது. இப்போது, கவுன்சிலர்களின் கோபம் உளவுத்துறையின் மீது!
இதில் உளவுத்துறைக்கு என்ன சிக்கல்? கவுன்சிலர்களால் உளவுத்துறையை என்ன செய்துவிட முடியும்?
அட, அங்கேதான் இருக்கிறது விவகாரம். இவர்களது பதவி கவுன்சிலர்கள்தான் என்றாலும், அநேகர் நல்ல ‘வெயிட்’டாக உள்ளே வந்தவர்கள். தவிர, அமைச்சர்களின் மாமன், மச்சான், உறவுமுறையில் எல்லாம் கவுன்சிலர்கள் உள்ளார்கள். சசி சின்டிகேட் சேனலில் கவுன்சிலரானவர்களும் உண்டு. ஒரு கவுன்சிலர், சென்னை மற்றும் மைசூரில் பெரிய எக்ஸ்போர்ட் நிறுவனத்தையே பினாமி பெயரில் நடத்துபவர்.
உளவு அறிக்கை தயாரித்துக் கொடுத்த அதிகாரியை உண்டு, இல்லையென ஆக்குகிறோம் என களத்தில் குதித்திருக்கிறார்கள் இவர்கள்.
கடந்த தி.மு.க. ஆட்சியிலும் வளைந்து கொடுக்காமல் நேர்மையாக பணிபுரிந்ததால் பந்தாடப்பட்ட அந்த உளவுத்துறை அதிகாரியை மீண்டும் நெல்லை மாவட்டத்துக்கோ, வேறு எங்காவதோ தூக்கியடிக்க கவுன்சிலர்களால் முடிந்தால்…
அவர் கொடுத்த அறிக்கையில் உள்ள பின்வரும் வாக்கியம் நிஜமாகவே பலிப்பதை முதல்வர் பார்ப்பார்:
“அடுத்த தேர்தலில் சென்னையில் அ.தி.மு.க.வை மண்கவ்வ வைப்பதற்கு, சென்னை மாநகராட்சியில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பண்ணும் அலம்பல் ஒன்றே போதும்”

கருத்துகள் இல்லை: