திங்கள், 25 ஜூன், 2012

வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாமல் ஏவுகனை செலுத்துவதில் என்ன பயன்? ஜெய்ராம் ரமேஷ்

தம்ரா (ஒடிசா):""சுகாதாரப் பிரச்னைகளை சரிவர நிவர்த்தி செய்யாத பட்சத்தில், அக்னி போன்ற ஏவுகனைகளை செலுத்துவதால் எந்த நன்மையும் ஏற்பட்டுவிடாது,'' என, மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம், தம்ராவில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகம் சார்பில் நடைபெற்ற விழாவில், சுற்றுச்சூழலுக்கு உகந்த கழிப்பறை திட்டத்தை துவக்கி வைத்து,

மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது:விண்ணிற்கு அக்னி போன்ற ஏவுகனைகளை அனுப்புவதை விட, ஒவ்வொருவரது வீட்டிலும் கழிப்பறையை அமைப்பது தான் முக்கியம். சுகாதாரத்தை தவிர்த்து விட்டு, ஏவுகனைகளை அனுப்புவதால் எந்தவிதமான நன்மையும் ஏற்படப்போவதில்லை. ஒவ்வொருவரது வீட்டிலும் கழிப்பறையை ஏற்படுத்தித் தருவது தான் அரசுக்கு இப்போதுள்ள மிகப்பெரிய சவால்; இப்பிரச்னையை எப்படி சமாளிப்பது என, நாள் ஒன்றுக்கு நான் 18 மணி நேரம் சிந்திக்கிறேன்.


சுற்றுச்சூழலுக்கு உகந்த உயிரி கழிப்பறை திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது, நாட்டில் சுத்தம் மற்றும் சுகாதாரத்திற்காக விழிப்புணர்வு ஏற்படுத்திய மகாத்மா காந்திக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியைப் போலவே, பொதுநல நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கப்பட வேண்டும். பட்ஜெட்டில், ஊரக வளர்ச்சித் துறைக்கு ஒதுக்கப்பட்டது 99 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், ராணுவத்துக்கு இரண்டு மடங்கு அதாவது, 1 லட்சத்து 93 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ராணுவ அமைச்சகத்துக்கு நிதி ஒதுக்கீட்டை குறைக்க வேண்டும் என, நான் கூறவில்லை. அதே நேரத்தில், பொது நலத்திற்கும் அதே அளவிற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று தான் கூறுகிறேன். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

கருத்துகள் இல்லை: