வெள்ளி, 29 ஜூன், 2012

RAW வுக்கு உளவு பார்த்துதான் மாட்டிக்கொண்டேன்: சுர்ஜீத் சிங்

புதுடெல்லி: பாகிஸ்தான் சிறையிலிருந்து 30 ஆண்டுகளுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பியுள்ள சுர்ஜீத் சிங்,தான் ஒரு ‘ரா’ உளவாளியாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளார். 
பாகிஸ்தானில் ஜியா-உல்-ஹாக் ஆட்சியின் போது இந்தியாவிற்காக உளவு வேலை பார்த்ததாக சுர்ஜீத்சிங் கைது செய்யப்பட்டார்.அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, 1989-ல் அதிபர் குலாம் இச்-கான் ஆட்சியில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் 30 ஆண்டுகளாக சிறையில் வாடிய சுர்ஜித், தண்டனை காலம் முடிவுற்ற நிலையில்,நேற்று முன்தினம் விடுதலை செய்யப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.பெயரில் குழப்பம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு சரப்ஜித்சிங் தான் விடுதலையாகிறார் என்ற அறிவிப்பை நள்ளிரவில் மாற்றி அறிவித்தது பாகிஸ்தான்.
இந்த தகவல் அறிந்ததும் சுர்ஜித் சிங் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.
கடந்த 31 ஆண்டுகளுக்கு மேலாக லாகூர் சிறையில் வாடி, 70 வயதை தொட்டுவிட்ட சுர்ஜீத்சிங், வாகா எல்லை வழியாக இன்று இந்தியா வந்தார்.வாகா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகள் அவரை இந்தியாவிடம் ஒப்படைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அங்கு காத்திருந்த அவரது குடும்பத்தினர்,சுர்ஜீத் சிங்கிற்கு மாலை அணிவித்து,கட்டிப்பிடித்து வரவேற்றனர்.
’ரா’ உளவாளி
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுர்ஜீத் சிங்,தாம் இந்திய உளவுப் பிரிவான ‘ரா’வின் (RAW - Research and Analysis Wing) உளவாளி என்றும், 1980 ம் ஆண்டுகளில் பாகிஸ்தானில் தங்கியிருந்தபடி இந்தியாவுக்காக தாம் உளவு பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் பிடிபட்டதாகவும் கூறினார்.

அதே சமயம் தாம் பிடிபட்ட பிறகு தம்மைப்பற்றி யாருமே கவலைப்படவிலலை என்று கூறிய அவர், இதற்குமேல் இதுபற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள் என்று கூறி,மேற்கொண்டு அது குறித்து பேச மறுத்துவிட்டார். 

”30 ஆண்டுகளுக்குப் பிறகு எனது குழந்தைகள், குடும்பத்தினரை பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.பாகிஸ்தான் சிறையில் இந்தியக் கைதிகள் நல்ல முறையிலேயே நடத்தப்படுகிறார்கள்.

சரப்ஜித் சிங்கும் நன்றாகவே உள்ளார்.அவரை நான் அண்மையில் சந்தித்தேன் என்றாலும்,இன்று என்னால் அவரை சந்திக்க முடியவில்லை.

அவர் என்னிடம் எந்த செய்தியும் சொல்லி அனுப்பவில்லை.அவரை விடுதலை செய்யவைப்பேன்.மேற்கொண்டு எதுவும் கேட்காதீர்கள்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: