புதன், 27 ஜூன், 2012

ஆள்வது யார்? பன்னாட்டு நிறுவனங்களின் தலையீடு

இந்திய அரசியலில் பன்னாட்டு நிறுவனங்களின் தலையீடு உள்ளது என்ற சந்தேகத்திற்கு போதுமான ஆதாரம் உள்ளது வெளிநாட்டு தலையீடு என்ற பயம்  ஏன் உண்மை? வினவு
 ”இந்திய அரசியலில் பன்னாட்டு நிறுவனங்களின் தலையீடு உள்ளது என்ற சந்தேகத்திற்கு போதுமான ஆதாரம் உள்ளது”
பிரணாப் முகர்ஜி இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் என்பது உறுதியாகிவிட்டது.  அவருக்கு சாதகமான சூழல் ஏற்படும் வரை, ஒரே கண்ணாமூச்சி ஆட்டம்தான்.  அவர் சிறந்த அரசியல்வாதி என்பதற்காக அல்ல, எப்படியும் அவரை நிதித்துறையிலிருந்து மாற்றியே ஆக வேண்டும் என்பதற்காக இந்திய கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள் சேர்ந்து இந்த சூழலை உருவாக்கினார்கள் என்பது பரவலான கருத்து.  ஏனென்றால், கறுப்புப்பண புழக்கத்தை சமாளிக்கும் முயற்சியில், சமீபத்திய நிதி நிலை அறிக்கையில் (பட்ஜெட்டில்) முன்தேதியிட்டு வரிவிதிப்பதும், பொது ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை (GAAR - GENERAL AGREEMENT ON ARMS REDUCTION) கட்டுப்படுத்துவதிலும், இவர் மிகவும் கறாராக இருந்தார். (இவரும் அம்பானி முதல் பன்னாட்டு நிறுவனங்களின் நலனுகாக செயல்படுபவர்தான். காங்கிரசுக் கட்சியும் இத்தகைய வர்க்கங்களின் பிரதிநிதிதான். ஆகவே இவர் கறாராக இருந்தார் என்று கட்டுரையாளர் சொல்வது பொருத்தமாக இல்லை, அதற்கு வேறு காரணங்கள் இருந்திருக்கலாம் – வினவு).

ஆனால் உண்மையான நிர்ப்பந்தம் வெளிநாட்டிலிருந்து வந்தது என்றால் அதில் ஆச்சிரியப்படுவதற்கில்லை.  இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது மேல்நாட்டு எசமானர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதில் மிகவும் விழிப்புடன் அறிந்து கொள்கின்றனர்.  நம் நாட்டு அரசியல் தலைவர்களும் கூட அதேபோல் மிகவும் விழிப்புடன் இருக்கின்றனர்.  பிரிட்டனும், நெதர்லாந்தும் வோடபோன் விஷ‌யத்தில் அதிகமான செல்வாக்கை பயன்படுத்தினர்.  நமது அரசியலை இந்த வெளிநாட்டு சக்திகள் எவ்வளவு தீர்மானிக்கிறது பாருங்கள்?

ஆட்சி அமைப்பு முறையில் தலையீடு!

நமது அரசியலமைப்பு முறையில் மிகுந்த நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்பதற்கு சமீபத்திய சில நிகழ்வுகள் சாட்சியமாக உள்ளது.  சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி ஹிலாரி கிளிண்டன் தனது இந்திய பயணத்தின் போது ஈரானுடனான நமது வர்த்தகம் சம்பந்தமாக விதித்த நிபந்தனைகள், சில்லரை வியாபாரத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கோரி அழுத்தம் தருவதாக அமைந்தது, தரம் மற்றும் ஏழ்மை அமைப்பு இந்தியாவைப் பற்றிய குறைந்த மதிப்பீடு, ஏர்செல்-மாக்சிஸ் உடனான வர்த்தக உறவு போன்றவற்றிலும் அந்நிய நிர்ப்பந்தம் சான்றாக நிற்கிறது.  மிகவும் வெளிப்படையாக தெரியாத பலவற்றில், இராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்குவது, (பிரிட்டனின் ஈரோ பைட்டரை இந்தியா நிராகரித்ததில் பிரிட்டன் மிகவும் அதிர்ச்சி அடைந்தது) எண்ணை, எரிவாயு, அணுசக்தி போன்றவற்றில் அதிக முதலீடு, புதிய சந்தைகளை திறப்பது போன்றவற்றிலும் அந்நிய ஆதிக்கம் நிறையவே உள்ளது.
1987 லிருந்து போபர்ஸ் ஊழல் தொடர்ந்து இன்றுவரை நமது அரசியல் நிர்வாகத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.  போபர்ஸ்-இந்தியா பீரங்கி ஊழலை விசாரித்து வந்த சுவீடனின் முன்னாள் காவல்துறை அதிகாரி ஸ்டென் லிண்ட் ஸ்டார்ம், நேரு-காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான நண்பரான ஒட்டாவியோ குவாட்ரோச்சி, இந்த பீரங்கி பேரத்தில் கையூட்டு பெற்றவர்களில் ஒருவர் என்பதை அறுதியிட்டுக் கூறியுள்ளார்.  கடைசி நேரத்தில் இந்த பேரத்தை மாற்றியதில் அவரது பங்கு தெளிவானது.  கையூட்டு பெற்றதிலோ அல்லது அந்த பீரங்கிகள் நல்லவை என்பதிலோ எந்த அயயமும் இல்லை.  ஆனால் தெளிவுபடாத விபரம் என்னவெனில், யார் அந்த பணத்தை பெற்றது என்பதுதான்.
திரு குவாட்ரோச்சி காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவை விட்டு தப்பி செல்ல அனுமதித்ததிலிருந்தே அவருக்கு மிகவும் சக்தி வாய்ந்த நண்பர்கள் இங்கு உள்ளார்கள் என்பது தெளிவாகிறது.  மத்திய புலனாய்வு துறை உள்ளிட்ட, பல்வேறு புலனாய்வு அமைப்புகள் திட்டமிட்டே இந்த விசாரணையை சீரழித்ததால், இது சம்பந்தமாக வழக்கு மலேசியா, பிரிட்டன், அர்ஜென்டினா, நீதிமன்றங்களில் தோல்வியடைந்தது.  அவர் மீது பிறப்பிக்கப்பட்ட சர்வதேச சிவப்பு அறிக்கையை நமது காவல்துறை அமுல்படுத்த முடியவில்லை.  ஏனென்றால், அவர் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தாலும், நமது காவல்துறைக்கு மட்டும் “அகப்படவில்லை”.
மிகப்பெரிய இடத்திலிருந்தே இதை மூடி மறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதை சாட்சியங்கள் கூறுகிறது.  அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த திரு எம்.எஸ்.சோலங்கி ஒரு கூட்டத்தில் தான் சுவிஸ் வெளிநாட்டு அமைச்சகத்திடம் கொடுத்த ரகசிய குறிப்பிலிருந்ததை வெளியே சொல்வதைக் காட்டிலும், தனது அமைச்சரவை பதவியை தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.  அந்த நேரத்தில்தான் போபர்ஸ் பேர ஊழலை இந்திய புலனாய்வு பிரிவினர் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தனர்.  ஒரு சாதாரண தலைவருக்கு இத்தகைய ஒரு அரசியல் தியாகமா?
ராஜிவ் காந்தி அந்த பணத்தை பெறவில்லை என்றால் வேறு யாருக்காக இந்த புலனாய்வை சீரழிக்க வேண்டும்?  இந்த கேள்விக்கான பதிலை அறிய வேண்டு மென்றால் புலனாய்வு அவசியம்.  இந்த கட்டுரை ஆசிரியர் ஒரு முறை பிரதமர் அலுவலகத்திலுள்ள ஒரு அமைச்சரை கறுப்புப்பணம் பற்றி பேட்டி கண்டபோது, அவர் இந்த போபர்ஸ் சம்பந்தமான கோப்புக்களை அன்றைய பிரதம மந்திரியிடம் கொண்டு சென்றதும், அந்த கோப்பை முடித்து விடாவிட்டால், தனது உயிருக்கு ஆபத்து என்று கூறியதாக தெரிவித்தார்.  காங்கிரஸ் அல்லாத பிரதம மந்திரிகளும் போபர்ஸ் புலனாய்வை சரியான திசையில் கொண்டு செல்லவில்லை.  காங்கிரசை சார்ந்த பிரதமர்களோ உண்மை வெளிவந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.
கையூட்டு என்பது உலகளவில் சாதாரணமாகிவிட்டது.  ஸ்வீடன் உலகளவில் மிகக் குறைந்த அளவிலேயே ஊழல் உள்ள நாடாக அறியப்படுகிறது.  ஆனால் அங்குள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் பெறுவதற்கு கையூட்டு கொடுத்து வருவது இந்த போபர்ஸ் விஷ‌யத்தில் வெளிவந்துவிட்டது.  அவர்களது நாட்டின் சட்டங்களின்படி கையூட்டு கொடுப்பது சட்ட விரோதமானது என்றாலும், அமெரிக்காவிலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் கையூட்டு கொடுப்பதை வழக்கமாக்கிவிட்டனர்.
சமீபத்தில் மெக்சிகோவில் காலூன்ற வால்மார்ட் கையூட்டு கொடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளது.  இதையறிந்த மேல்மட்ட நிர்வாகமோ, இதை பகிரங்கப்படுத்துவதில், உள்துறை விசாரணைக்கு மூடுவிழா செய்துவிட்டது.  இந்த வால்மார்ட்தான் இப்போது இந்தியாவில் நுழைய முயற்சிக்கிறது.  திருமதி கிளிண்டன் தனது சமீபத்திய இந்திய பயணத்தின் போது சில்லரை வியாபாரத்தில் அந்நிய முதலீட்டுக்கு கதவை திறந்து விட வற்புறுத்தியுள்ளார்.  தனது விஜயத்தின் போது அவர் சந்தித்த ஒரே முதலமைச்சர் மேற்கு வங்காள செல்வி மம்தா பானர்ஜியை மட்டுமே.  ஏனென்றால் ஆளும் ஜனநாயக கூட்டணியில் அவர் ஒருவர் மட்டுமே சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை கடுமையாக எதிர்த்து வருபவர்.  இது 1990களில் அப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் திரு ஹென்றி கிளிங்கர் மற்றும் பாதுகாப்பு, எரிபொருள்துறை செயலர்களும் என்ரான் நிறுவனம் இந்தியாவில் காலூன்ற மிகுந்த முயற்சி எடுத்துக் கொண்டதை நினைவு கூறுகிறது.  இந்திய திட்டம் தீட்டுபவர்களுக்கு “கற்பிக்க” சுமார் 60 மில்லியன் டாலர் வரை செலவு செய்ய வேண்டியதாயிற்று என என்ரான் நிறுவனமே ஒத்துக்கொண்டதை இங்கு கவனிக்க வேண்டியுள்ளது.
இது ஏதோ ஒரு சில (பன்னாட்டு நிறுவனங்கள்) கார்ப்பரேட்டுகள் மட்டுமே இவ்வாறு பல்வேறு வகையில் கையூட்டு கொடுப்பதற்கும், தங்களது அரசுகளை வைத்து கொள்கை முடிவுகள் மீது தங்களது நோக்கத்தை திணிப்பதுமான செயலில் ஈடுபடவில்லை.  பன்னாட்டு வங்கிகள் கூட இந்தியாவிலிருந்து இந்திய மூலதனத்தை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல பல்வேறு வகையில் உதவுகின்றன.  அமெரிக்க மக்கள் ரகசிய வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ள உதவிய மத்திய ஸ்விட்ஜர்லாந்து வங்கிக்கு அமெரிக்கா சுமார் 750 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளதை சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. ஆனால் இதை நன்கறிந்தும் ஸ்விஸ் யுபிஎஸ் வங்கி இந்தியாவில் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது.  ஒரு வேளை இங்குள்ள மிகவும் முக்கியமானவர்களுக்கு அது உதவியதற்கான பரிசோ என்னவோ?
பன்னாட்டு நிறுவனங்களிலேயே ஓரளவிற்கு நியாயமானது என்றும், இந்தியாவில் முக்கியமானது என்றும் கருதப்பட்ட சீமென்ஸ்-ன் அதிகாரிகளும் அர்ஜென்டினாவில் கையூட்டு கொடுத்ததற்காக அமெரிக்காவில் 2011 டிசம்பரில் தண்டிக்கப்பட்டனர்.  பின்னர் நடந்த புலனாய்வில் இந்த நிறுவனம், 2001 முதல் 2007 வரையிலான காலத்தில் வங்காளத்திலும், சீனா, ரஷ்யா, வெனிசுலா மற்றும் பிற நாடுகளில் 1.4 பில்லியன் டாலர் வரையில் சட்ட விரோதமாக கையூட்டு கொடுத்து வந்துள்ளது அம்பலமானது.  இது எப்போதும் தரகர்கள் மூலமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த நிறுவனம் உலகளவில் இவ்வாறு நிகழ்த்திய சட்டவிரோத கையூட்டுகளுக்காக அமெரிக்கா, ஜெர்மனி அரசுகளுக்கு 1.6 மில்லியன் டாலர்களை தண்டமாக மட்டுமே கட்டியுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்கு பின்னரே இந்த சீமென்ஸ் மார்ஷ‌ல் திட்டத்தின் மூலம் அமெரிக்காவிற்கே முழுமையாக போகும் ஒப்பந்தங்களை கைப்பற்ற இந்த கையூட்டு யுக்தியை கடைபிடிக்க ஆரம்பித்தது.  இவ்வாறு தண்டிக்கப்பட்ட பின்னரே, இத்தகைய கையூட்டு நிகழ்வுகளை தடுத்திட (கம்ப்ளயன்ஸ் ஆபீசர்கள்) இணக்கமான அதிகாரிகளை நியமித்தது.  ஆனால் உலகில் கையூட்டு பெருமளவில் பெருகிவரும் நிலையில் ஒரு நிறுவனம் மட்டுமே நேர்மையாக இருந்திட முடியுமா? ஒப்பந்தத்தை கொடுப்பவர்களே கையூட்டை எதிர்பார்த்திருக்கும் போது கையூட்டின்றி எவ்வாறு ஒப்பந்தங்கள் பெற முடியும்?
ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படையான தன்மையில்லாத நிலையில் போபர்ஸ், 2ஜி அலைக்கற்றை போன்ற ஊழல் விவகாரத்தில் தீர்மானிக்க வெளியிலிருந்து ஊடுறுவல் இருக்கத்தான் செய்யும்.  வோடபோன் விஷ‌யம் முக்கியமானது.  பன்னாட்டு நிறுவனங்கள் (அயல்நாட்டு மற்றும் உள்நாட்டு) வரியில்லா சொர்க்கங்களை (நாடுகளை) வைத்து வரிவிதிப்பு கொள்கைகளை பயன்படுத்தி எவ்வாறு இந்தியாவில் வரி செலுத்தாமல் தப்பித்து வருகின்றன.  ஒரு நிறுவனம் யாருடையது என்பதையோ, அல்லது அது யாருக்கு பங்குகளை மாற்றுகிறது என்பதையோ அறிய முடியாத வகையில் புதிய வகை இணைய வலைகளை உண்டாக்கிக் கொண்டுள்ளார்கள்.  1985ல் மக்டோவல் வழக்கில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு பகிர்ந்தது.  “வரிவிதிப்பு திட்டங்களில் வெவ்வேறான வழிமுறைகளை கடைபிடிக்கக் கூடாதுஎந்த வகையிலாவது வரியை தவிர்க்க முடியும் என்ற எண்ணத்தை உற்சாகப்படுத்தவோ, அதை வரவேற்கவோ கூடாது“.  ஆனால் இந்த தீர்ப்பை 2003ல் மத்திய அரசு -எதிர்- ஆசாடி பச்சோ அந்தோலன் என்ற வழக்கு மொரிஷியஸ் வழியாக வர்த்தகம் செய்வதன் மூலம் வரியை தவிர்க்கலாம் என்பதை உறுதிப்படுத்தியதன் மூலம் முற்றாக திருப்பிப்போட்டது.
இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வோடபோன் இந்தியாவிற்கு சொந்தமான மூலதன சொத்தை வரிவிதிப்பில்லாத மொரிஷியஸ் போன்ற நாட்டிற்கு மாற்றி- அதன் மூலம் இந்தியாவிற்கு செலுத்த வேண்டிய மூலதன சொத்தின் மீதான வரிவிதிப்பிற்கு எதிராக வாதாட முடிந்தது.  திருவாளர் முகர்ஜி தற்போது இழந்ததை மீட்க முயற்சிக்கின்றார்.

ஆதிக்க நலன்கள்

1950 களிலான பனிப்போர் காலம் தொட்டே இந்திய கொள்கை முடிவுகள் மீது அந்நிய ஆதிக்கம் இருந்து வருகிறது.  ஆனால் 1980 கள் வரை இத்தகைய போக்கு, இந்தியாவின் “நீண்டகால நலனுக்கு” உகந்தது என்று ஏற்றுக் கொள்ளப் பட்டது.  ஜாகுவார் விமானங்கள் வாங்கும் போது ஒரு சலசலப்பு ஏற்பட்டது.  ஆனால் அது போபர்ஸ் ஊழல் ஏற்படுத்திய அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை.  1980களுக்குப் பின்னர் 1991 களில் அமுலுக்கு வந்த புதிய பொருளாதார கொள்கையோ, இந்திய-அமெரிக்க அணு கொள்கையோ, ஒரு புதிய பரிமாணத்தில் பகுதி நலன் அல்லது தனி நபர் நலன் அதி முக்கியத்துவம் பெறத் துவங்கியது.  இந்த போக்கு தேசிய அரசியலில் பெரும் அதிர்வை உண்டாக்கியது.  நெருக்கடி எதிர் நெருக்கடி என அரசியல் கட்சிகள் மூலமும், அவர்களது தரகர்கள் மூலமும், கார்ப்பரேட் முதலாளிகள் மூலமும், தாக்கம் அதிகமானது.
இதிலிருந்து கற்றுக் கொண்டது என்னவென்றால், இத்தகைய தாக்கங்கள் ஏற்படுத்தும் சேதாரங்களை தேசிய அரசியல் நடவடிக்கைகளால் சரி செய்ய இயலாது என்பதுதான்.  இந்த நிகழ்வுகளைப் பார்த்து பொதுமக்களோ, தற்போதைய  குடியரசுத்தலைவரை (ஜனாதிபதியை) தேர்ந்தெடுக்கும் வழிமுறையைப் பார்த்து அதிர்ச்சியில் விழித்திருப்பதைப் போல் விழித்திருப்பதைத் தவிர்த்து வேறு என்ன செய்யமுடியும்?
_________________________________________________________________________________
(கட்டுரையாளர் திரு அருண் குமார்  பொருளாதார கல்வி மற்றும் திட்டமிடுதல் மையம்,
சமூக அறிவியல் பயிற்றகம், ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்)
நன்றி-   தி ஹிந்து  நாளிதழ்
தமிழில்சித்ரகுப்தன்

கருத்துகள் இல்லை: