சனி, 30 ஜூன், 2012

இமேஜ் டமாஜ் ஆவதை தடுக்க ஜெயாவை பயன்படுத்தும் BJP

ஜெயலலிதா பெயர் டில்லியில் அடிபடுவதற்கு என்ன காரணம் தெரியுமா?

Viruvirupu


ஜனாதிபதித் தேர்தலில் தேசிய அளவில் ‘ஓஹோ’ என்று இல்லாவிட்டாலும், சுமாரான முறையில் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரும் அடிபடத்தான் செய்கிறது. பிரணாப் முகர்ஜியின் எதிர் வேட்பாளர் சங்மா, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஜெயலலிதாவின் பெயரை உச்சரித்துக் கொண்டுதான் உள்ளார்.
வேட்பு மனு தாக்கல் செய்தபோதே, ஜனாதிபதி தேர்தலில் தம்மை வேட்பாளராக முதன் முதலில் அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக பி.ஏ.சங்மா கூறினார்.

பா.ஜ.க. தலைவர்கள் அத்வானி மற்றும் சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் சங்மா வேட்பு மனுவைத் தாக்கல் செய்த போதும், தமக்கு ஆதரவு தெரிவிக்கும் பெரிய கட்சியான பா.ஜ.க. பற்றி கூறுமுன், தம்மை முதலில் அறிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அவரை முதலில் அறிவித்த இரு முதல்வர்களில் ஒருவரான நவீன் பட்நாயக், வேட்பு மனு தாக்கலின்போது வந்திருந்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதா வரவில்லை. தமது சார்பில் தம்பித்துரை எம்.பி.-யை அனுப்பி வைத்திருந்தார்.
ஒருவேளை சங்மாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்திருந்தால், முதல்வர் ஜெயலலிதாவும் நேரில் சென்றிருக்கக்கூடும்.
தலைநகர் மீடியாக்களில், சங்மா பற்றிய செய்திகள் வெளியாகும்போது, அவரை முதலில் வேட்பாளராக அறிவித்த தமிழக முதல்வரின் பெயரும் இணைத்தே கூறப்படுகிறது. பா.ஜ.க.-வும் அதையே விரும்புகிறது என்கிறார்கள்.
டில்லி அரசியல் வட்டாரங்களில், இந்த நடைமுறைக்கு வேறு ஒரு கோணமும் கூறுகிறார்கள்.
சங்மா எப்படியும் ஜெயிக்கப் போவதில்லை. “பா.ஜ.க.-வின் வேட்பாளர் ஜெயிக்கவில்லை” என்ற இமேஜ் உருவாகுவதை தடுக்கவே, ஜெயலலிதா மற்றும், நவீன் பட்நாயக் அறிவித்த வேட்பாளருக்கு பா.ஜ.க. ஆதரவு என்பதை அழுத்திக் கூற விரும்புகிறது பா.ஜ.க. தலைமை என்பதே அந்தக் கோணம்.
அட, அப்படியும் ஒரு கோணம் உள்ளதா? நம்ம முதல்வருக்கு யாரும் சொல்லவேயில்லையே!

-டில்லியிலிருந்து நர்மதா பானர்ஜியின் குறிப்புகளுடன், ரிஷி

கருத்துகள் இல்லை: