சனி, 28 ஏப்ரல், 2012

பிரபல நடிகர்விக்னேஷ். ரூ 20 கோடி நில மோசடி

Vignesh ரூ 20 கோடி நில மோசடி: உயிரோடு இருக்கும் மூதாட்டி இறந்ததாக சான்றிதழ் வாங்கிய பிரபல நடிகர்!

 
சென்னை: ரூ 20 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க, உயிரோடு இருக்கும் 85 வயது மூதாட்டியை இறந்துவிட்டதாக சான்றிதழ் பெற்று மோசடி செய்துள்ளார் நடிகர் விக்னேஷ்.
சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் வீரம்மாள் (85). இவருக்கு கிண்டி தொழிற்பேட்டை பகுதியில் 5 கிரவுண்ட் நிலம் உள்ளது. அதன் இன்றைய சந்தை மதிப்பு 20 கோடி ரூபாய். வீரம்மாளுக்கு சின்னத்தம்பி என்ற மகன் இருந்தார். அவர் இறந்து விட்டார்.
சின்னதம்பியின் மனைவி கீதா. இவருடைய சகோதரி சுதா. சுதாவும், கீதாவும் சகோதரிகள் என்பதால், உயிரோடு இருக்கும் வீரம்மாள் இறந்ததுபோல, போலியான ஆவணங்களை தயார் செய்து, சட்டப்பூர்வமான முறையில் அதற்கான லீகல் ஒப்பீனியனையும் வாங்கி நிலத்தை தங்கள் பெயருக்கு பதிவு செய்து கொண்டனர்.
பின்னர் கீதாவை இதிலிருந்து மெதுவாக கழற்றிவிட்ட சுதா, தன்னுடைய மருமகனும், பிரபல நடிகருமான விக்னேஷ் என்கிற அந்தோணி சாமி உதவியுடன் இறந்துபோன சின்னதம்பியின் பிள்ளைகள் அரவிந்த், வசந்த் ஆகியோருடைய கையெழுத்துக்களையும் வாங்கி இந்த நிலத்தை முழுமையாக விக்னேஷ் உறவுமுறைகளுக்கும் விக்னேஷ் பெயருக்கும் மாற்றிக்கொண்டுவிட்டனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட வீரம்மாள் 2011 இறுதியில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடவடிக்கை கேட்டு புகார் மனு கொடுத்தார். ஆனால் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து வீரம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் மோசடிக்கு உதவியவர்கள் அத்தனை பேர் மீதும் எப்ஐஆர் போட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சுதா, விக்னேஷ், உமாமகேஷ்வரி, வசந்த், வீரபாண்டியன், ரவிக்குமார் ஆகியோர் மீது கிண்டி போலீசார் எப்ஐஆர் பதிந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: