செவ்வாய், 24 ஏப்ரல், 2012

ஜேம்ஸ்பாண்ட்: ஒரு நாயகன் வில்லனான கதை!

ஜேம்ஸ்-பாண்ட்கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் போர் மூண்டு எல்லா வகைப் படைகளோடும் குருஷேத்திரத்தில் சந்திக்கிறார்கள். கண்ணில்லாத திருதராஷ்டிரன் போர்க்களத்திற்கு செல்ல முடியாது என்பதால் போரின் நேரடி வர்ணனையை விவரிக்குமாறு சஞ்ஜயன் என்ற அமைச்சரை நியமிக்கிறான். வியாசரால் ஞானதிருஷ்டி பெற்றவனான சஞ்ஜயன் அப்படியே அட்சரம் பிசகாமல் வர்ணிக்கிறான். போரின் துவக்கமாக அர்ஜுனனின் தடுமாற்றம் வருகிறது. கீதை பிறக்கிறது.
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு சாகசங்களை நேரில் கண்டுணர முடியாத நம்மைப் போன்றோருக்கு, ஏகாதிபத்தியங்களால் ஊக்குவிக்கப்படும் ஹாலிவுட் உலகம் அதன் நேரடி வர்ணனையைக் காட்சியாக, விறுவிறுப்பான திரைப்படமாகத் தருகின்றது. ஜேம்ஸ்பாண்ட் பிறக்கிறான்.

கீதையும், ஜேம்ஸ்பாண்ட்டும் வெறுமனே லைவ் கமெண்ட்ரி சொல்லும் உபந்யாசகர்கள் மட்டும் அல்ல. ஆன்மீகவாதிகள் சொல்வது போல கீதை என்பது வாழ்வின் நான்கு யோகங்களைச் சொல்லி நம்மை ’நல்வழி’ப்படுத்தும் பார்ப்பனியத்தின் சாரம். ஜேம்ஸ்பாண்டும் சாகசங்கள் செய்து வில்லன்களை வீழ்த்துவதோடு இந்த உலகில் நிலைத்திருப்பது எது என்பதை மாற்ற முடியாத ’தத்துவ’மாக, மனதை மயக்கும் கதையாக முன்வைக்கிறான்.
இந்தப் போரின் ஆரம்பத்தில் அர்ஜுனனுக்கு தடுமாற்றம் வருகிறது. ஜேம்ஸ்பாண்டுக்கு போரின் நடுப்பகுதியில்தான் தடுமாற்றம் வருகின்றது. சொந்த பந்தங்களைக் கொன்று குலநாசம் ஏற்பட்டு, அதர்மம் சூழ்ந்து, குலப்பெண்கள் கெட்டு, வருண குழப்பம் ஏற்பட்டு, தொன்றுதொட்டு வரும் சாதி தர்மங்கள் அழிந்துவிடுமே என்று அர்ஜுனன் கேட்கிறான்.
ஐம்பது ஆண்டுகள் அரும்பாடுபட்டு ’குலநாச’த்தை ஏற்படுத்திய கம்யூனிஸ்டுகளை பூண்டோடு அழித்தும் ஜேம்ஸ்பாண்டின் பணி முடியாது நீண்டு கொண்டே போகின்றது. அதிலும் அவனை பணியிலமர்த்தியிருக்கும் அந்த நாகரீக உலகமே வில்லனாகத் தெரியவரும் போது ஜேம்ஸ்பாண்ட் குழப்பமடைகிறான். அது என்ன வகை குழப்பம்?

••

துவரை 22 ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தப் படங்கள் அத்தனையும் ஒரு ஃபார்முலா மசாலாவுக்குள் அடங்கி விடும்.
படத்தின் ஆரம்பத்தில் ஒரு அதிரடிக் காட்சி இருக்கும். ஜேம்ஸ்பாண்ட் தனது நேச சக்தி கூட்டாளி ஒருவரைக் காப்பாற்றுவான். அல்லது முந்தைய படத்தில் வரும் வில்லனது கூட்டாளியைக் கைது செய்வான். பிறகு வட்டத்தில் அவன் துப்பாக்கியால் சுட்டவாறு டைட்டில் காட்சி ஆரம்பமாகும். படிமங்கள் மறைத்தவாறு நிர்வாணமாகத் தோன்றும் நடன மங்கைகள் ஆட, பாடலுடன் டைட்டில் ஓடும். பிறகு அவனது எம்.16 எனும் உளவுத்துறையின் தலைவரான எம்-உடன் சந்திப்பு. அடுத்த மிஷன் பற்றி அவர் சுருக்கமாக எடுத்துரைப்பார்.
ஜேம்ஸ்-பாண்ட்வெடிக்கும் பேனா, பறக்கும் கார், கண்காணிக்கும் குண்டூசி முதலான நவீன ஆயுதங்கள் உளவுத் துறையின் ஆயுத நிபுணரான க்யூ– வால் அவனுக்கு அறிமுகம் செய்யப்படும். பிறகு அவன் வில்லனது உலகோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்வான். அங்கு வில்லனால் அனுப்பி வைக்கப்பட்ட கெட்ட வகைப் பெண்ணைச் சந்திப்பான். முரண்படும் உறவோடு படுக்கை உறவும் நடக்கும். பிறகு அங்கிருந்து தப்பிச் செல்வான். வில்லனது உலகைத் தேடி வரும் பிறநாட்டு உளவாளிப் பெண் போன்ற நல்ல வகைப் பெண்ணைச் சந்திப்பான். அவளோடும் உறவு கொள்வான். இறுதியில் வில்லனது கோட்டைக்குள் புகுந்து வில்லனை அழிப்பான். வேலை முடிந்த பிறகு நல்ல வகை பெண் நாயகியோடு சல்லாபித்திருக்க படம் முடியும். சில சமயம் அடுத்த படத்தின் ஆரம்பமாக ஒரு கேள்விக்குறியோடும் காட்சி முடியும்.
ஜேம்ஸ்பாண்ட் திரும்பி வருவான் என்ற அறிவிப்புடன் தீம் மியூசிக்கோடு படக்குழுவினரை அறிமுகப்படுத்தியவாறு டைட்டில் ஓடும்.

இத்தகைய கச்சிதமான, ஆனால் அரதப்பழசான ஃபார்முலாவை வைத்தா ஜேம்ஸ்பாண்டு படங்கள் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக ஓடுகின்றது!? என்ற கேள்வி எழலாம். வடிவத்தின் பிரம்மாண்டம், உள்ளடக்கத்தின் சமூக நிலைமைகள் இரண்டையும் வைத்துக் கொண்டுதான் இத்தனை காலமாக உலக சினிமா ரசிகர்களை ஜேம்ஸ்பாண்ட் கட்டிப்போட்டிருக்கிறான்.
இதுவரை நாம் கண்டிராத அழகான லொகேஷன்கள், கேள்விப்பட்டிராத நாடுகள், தீவுகள், மலைகள், காடுகள், அருவிகள், கடற்கரைகள் அத்தனையும் ஒரு படத்தில் புதிது புதிதாக வந்து கொண்டேயிருக்கும். தமிழ்ப் படத்தில்  நாயகன் ஒரு சந்தை வளாகத்தில் வில்லனை தீர்த்துக்கட்டும் போது இங்கு அந்தக் களம் விண்வெளியிலோ, விமானங்களோடோ, ஹெலிகாப்டர்களோடோ, குகைவழிச் சாலையிலோ, பிரம்மாண்டமான ஆய்வுக் கூடங்களிலோ அமைந்து மிகவும் செலவு பிடிக்கும் சண்டைகளாக அவை நடக்கின்றது. ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பிகினி உடையில் வரும் அழகான நாயகிகள் அதன் அடுத்த கவர்ச்சி. பிறகு அவன் பயன்படுத்தும் நவீன கார்கள், ஆயுதங்கள், உடைகள், கடிகாரங்கள் கொசுறான நுகர்வுக் கலாச்சாரக் கவர்ச்சி.
ஜேம்ஸ்-பாண்ட்ஜேம்ஸ்பாண்ட் படங்களது முன்களக் கதையின் கவர்ச்சியை இத்தகைய படிமங்கள் தீர்மானிக்கின்றது எனில், அதன் பின்களக் கதையின் சமூக நிலைமைகள் பொருத்தமான விகிதத்தோடு கலந்து வரும் போது ஒரு படம் இரசிகனைக் கவருவதற்குப் போதுமானது என்றாகின்றது.
ஏகாதிபத்தியங்களின் சமூக, அரசியல், பொருளாதார ஆக்கிரமிப்பு வரலாற்றின் கலை முகமாக ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் புரிந்து கொள்ள முடியும். எனினும் இந்த வரலாறு ஜேம்ஸ்பாண்ட் படங்களை உருவாக்கிய படைப்பாளிகள் முற்றிலும் திட்டமிட்டு செய்த ஒன்றல்ல என்றாலும், அவை இயல்பிலேயே அத்தகைய ஒரு வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் ஒரு திட்டம் இல்லாமலில்லை.

••

பிளெம்மிங்கின் ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள்
ங்கிலாந்தின் மசாலாக் கதை எழுத்தாளர் அயன் ஃபிளமிங் 1953 ஆம் ஆண்டு  உருவாக்கிய கற்பனைப் பாத்திரம்தான் 007 எனும் குறியீட்டுப் பெயர் கொண்ட ஜேம்ஸ்பாண்ட். இந்தப் பாத்திரத்தைக் கொண்டு அவர் 12 நாவல்களையும், இரு சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியிருக்கிறார். 1964-இல் அவரது இறப்பிற்குப் பிறகு ஆறு எழுத்தாளர்கள் அதிகாரப்பூர்வமாக இந்தக் கதாபாத்திரத்தை வைத்து எழுதியிருக்கிறார்கள். நாவல்கள், படங்கள் தவிர தொலைக்காட்சி – வானொலி தொடர்கள், காமிக்ஸ் கதைகள், வீடியோ விளையாட்டு முதலானவற்றிலும் ஜேம்ஸ்பாண்ட் வருகிறான்.
1962-ஆம் ஆண்டில்தான் டாக்டர் நோ எனும் முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் வெளியானது. கனடாவைச் சேர்ந்த ஹாரி சால்ட்ஸ்மென், அமெரிக்கரான ஆல்பர்ட் ஆர் ‘கியூபி‘ பிரக்கோலி இருவரது இயான் புரடக்சன்ஸ் எனும் நிறுவனம்தான் தொடர்ந்து ஜேம்ஸ்பாண்ட் படங்களைத் தயாரித்து வருகின்றது. ஹாலிவுட்டின் பெரும் திரைப்பட நிறுவனங்கள் நிதியுதவி அளித்து இப்படங்களை உலகெங்கும் விநியோகித்து வருகின்றன. இதுவரை சீன் கானரி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிரான்சன், தற்போது டானியல் கிரெய்க் முதலான நடிகர்கர்கள் ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இதுவரை வெளியான 22 ஜேம்ஸ்பாண்ட் படங்களும் மொத்தம் 5 பில்லியன் டாலரை அதாவது 22,500 கோடி ரூபாயை சம்பாதித்திருக்கின்றன. ஹாரி பார்ட்டர் தொடர் வரிசைப் படங்களுக்கு அடுத்தபடியாக ஜேம்ஸ்பாண்ட் படங்களே அதிகம் வசூலித்த தொடர் படமாகும். உலக மக்கள் தொகையில் கால்வாசிப் பேர் ஏதேனும் ஒரு பாண்ட் படத்தைப் பார்த்திருப்பதாக சொல்கிறார்கள். ஜேம்ஸ்பாண்ட் படங்கள் பிரபலமான பிறகு பிளமிங்கின் ஜேம்ஸ்பாண்ட் நாவல்களுக்கு மவுசு ஏற்பட்டு இதுவரை மொத்தம் 2 கோடியே முப்பது இலட்சம் நாவல்கள் விற்பனையாகியிருக்கின்றன.

••

த்ரில்லர் எனப்படும் துப்பறியும் கதைகளுக்கு உலகமெங்கும் வரவேற்பு உண்டு. நிலவுடமைச் சமூகங்களில் நடக்கும் கொலைகளுக்கும், வன்முறைகளுக்குமான காரணங்கள் மர்மம் நிறைந்தவை அல்ல. அந்த வன்முறையின் களம் வரம்புக்குட்பட்டது போலவே அதன் சூத்திரதாரியும் எளிதில் கண்டுணரக்கூடியவன்தான். ஆனால் ஒரு முதலாளித்துவ சமூகத்தில் இதே சமூக வன்முறைகள், கொலைகள், களத்திலும், காரணத்திலும், யார் செய்தார்கள் என்பதிலும் பரந்த பரப்பைக் கொண்டிருக்கிறது. ஒரு கொலையைக் கண்டுபிடிப்பது என்ற முறையில் புலனாய்வு எனும் கலை அறிவியலும், புத்தார்வமும் நிறைந்த ஒன்றாகத் தோன்ற வேண்டியிருக்கின்றது.
இயன்-பிளெம்மிங்நகரமயமாக்கமும், முதலாளித்துவ சமூகமும் வளரும் போது தோன்றிய நாவல் எனும் விரிந்த களத்தையும், நுட்பமான சிந்தனையோட்டங்களையும், பிரச்சினைகளையும் சொல்லக்கூடிய கலை தோன்றும் போது அதன் உட்பிரிவாக இந்த துப்பறியும் கதைகளும் தோன்றுகின்றன. குடும்ப-குழு-பாலின-சமூக வன்முறைகள் எனும் களத்திலேயே ஆரம்பத்தில் இது தோன்றியிருந்தாலும் பின்னர் அது அரசியல் களத்திலும், பொருளாதார அரங்கிலும் கால்பதிக்கின்றது. குடும்ப வன்முறைகளைக் காட்டிலும் அரசியல் அரங்கு ஒரு நகரத்துடனோ, பகுதியுடனோ மட்டும் நின்று விடாமல் நாடுகள், கண்டங்களையும் தாண்டிச் செல்கின்றது. ஹிட்ச்காக் முதலான சாதனைகள் படைத்த இயக்குநர்கள், படைப்பாளிகள் தனி மனிதனின் வன்முறைகளைக் கச்சிதமான படமாகச் சொல்லிய போது வேறு சிலர் தங்களது களத்தினை அரசியல் அரங்கிற்குள் கொண்டு சென்றார்கள்.ஜேம்ஸ்பாண்ட் பாத்திரம் சூல் கொண்டுள்ள இடமும், அதன் பிரம்மாண்டமான மசாலா கதைகளுக்கான தோற்றுவாயும் இதுதான்.

••

ஜேம்பாண்டை படைத்த இயன் பிளெம்மிங், ஊதாரித்தனமும், அடிமைத்தனமும் கலந்த கலவை
யன் ஃபிளமிங் உருவாக்கிய கற்பனைப் பாத்திரமான ஜேம்ஸ்பாண்ட் ஒரு உளவாளி. இங்கிலாந்து நாட்டின் உளவுத்துறையான எம் 16 எனும் இயக்கத்தில் வேலை செய்கிறான். அந்த உளவுத்துறை இங்கிலாந்து மற்றும் அதன் நேசநாடான அமெரிக்கா போன்ற நாடுகளின் நலனுக்காக எல்லா வகை ’வேலை’களையும் செய்கிறது. இந்த உண்மையுடன் கொஞ்சம் தனிமனித சாகசங்களைச் சேர்த்து விடும் போது ஜேம்ஸ்பாண்ட் படங்கள் பிறக்கின்றது.
பாண்டை உருவாக்கிய அயன் பிளமிங் ஒரு வசதியான செல்வந்தர் குடும்பத்தில் 1908 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது குடும்பம் ராபர்ட் பிளமிங் அண்டு கோ எனும் வணிக வங்கிக் குடும்பத்துடன் தொடர்புடையது. அவரது தந்தையும் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 1910 முதல் 1917 இல் இறக்கும் வரை உறுப்பினராக இருந்தவர். இங்கிலாந்தின் பிரபலமான பல்கலைக் கழகங்களிலும், பின்னர் ராயல் மிலிட்டரி அகாடமியிலும் பயின்ற ஃபிளமிங் ஒரு மேட்டுக்குடி ஆங்கிலேயே கனவானுடைய நடத்தையைக் கொண்டிருந்தார். பின்னர் அவர் இங்கிலாந்து கடற்படையின் உளவுத்துறையில் பணிபுரிந்தார். இரண்டாம் உலகப் போர் நடக்கும் போது அவர் சந்தித்த அனுபவங்கள், கதைகள், பாத்திரங்களெல்லாம் பின்னர் பாண்ட் நாவலுக்குரிய கச்சாப் பொருட்களை அளித்தன.
இது போக அவரது தனிப்பட்ட நடத்தையான புகைபிடிப்பது, அதிகம் குடிப்பது, அழகான பெண்களிடம் ஜொள்ளு விடுவது முதலானவையும் ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்தில் சேர்ந்திருந்தன. சுருங்கக் கூறின் அவரது தனிப்பட்ட பண்பான கேளிக்கை நடத்தைகளும், அவரது அரசியல் பார்வையான அரசகுலம் சார்ந்த, இங்கிலாந்தின் மேட்டுக்குடி மனோபாவமுமே ஜேம்ஸ்பாண்டின் அடிப்படை விதிகள்.
20 ஆம் நூற்றாண்டு இரண்டு உலகப் போர்களை பெரும் அழிவுடன் சந்தித்திருக்கின்றது. அதன் பிறகு அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்குமான கெடுபிடிப் போர் அந்த நூற்றாண்டின் இறுதி வரை நடந்திருக்கின்றது. உலகப் போர்களின் துயரங்களையும், நட்டங்களையும் ஒரு கண்டம் என்ற வகையில் ஐரோப்பிய மக்களே அதிகம் அனுபவித்திருந்தார்கள். இரண்டாவது உலகப் போரின் முடிவுக்குப் பிறகு இங்கிலாந்து, பிரான்சு போன்ற ஏகாதிபத்தியங்கள் தங்களது ராஜ்ஜியத்தின் பெரும்பகுதியை இழந்தும், மிச்சமிருப்பதை தக்க வைத்திருப்பதற்கு பெரும் பிரயத்தனத்துடனும் போராடி வந்தன.
இந்நிலையில் இங்கிலாந்து மக்கள் போரின் அழிவுகளுடனும், புதிய பனிப்போர் நிலைமை காரணமான அச்சத்துடனும் வாழ்ந்து வந்தார்கள். கொரியா, மலாய், கென்யா, கயனா போன்ற நாடுகளில் பிரிட்டிஷ் படைகள் இறுதியாய் போராடி வந்த போது பிரான்சு நாடு வியத்நாமில் தனது அஸ்தமனத்திற்காக போராடி வந்தது. கூடவே நுழைந்த அமெரிக்கா வியத்நாமை கம்யூனிச அபாயத்திலிருந்து காப்பாற்றுவதற்காக பெரும் படையெடுப்பையே நடத்தி வந்தது.
சோவியத் யூனியன், சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொதுவுடமை செல்வாக்கிற்கு அஞ்சிய மேற்குலகம்  கம்யூனிச எதிர்ப்பிற்கு அமெரிக்காவின் தலைமையில் பெரும் போர்த்தந்திரத்தை அமல்படுத்தி வந்தன. அமெரிக்க மண்ணிலேயே பொதுவுடமையின் வாசம் கூட தோன்றிவிடக் கூடாது என்பதற்க்காக மெக்கார்த்தி யுகம் எனும் கம்யூனிச எதிர்ப்புப் பாசிசம் அமலில் இருந்தது. இதன் காரணமாகவே சார்லி சாப்ளினுக்கு அமெரிக்க குடியுரிமை மறுக்கப்பட்டு தாயகமான இங்கிலாந்துக்கு அவர் திரும்பினார்.
இதே காலகட்டத்தில் அறிவியல், தொழில்நுட்பப் புரட்சியின் சாதனைகள் உலகை வலம் வரத் துவங்கின. உயிரியில் – உடலியலின் சாதனையாக டி.என்.ஏ கண்டுபிடிக்கப்பட்டது. உலகின் அதிவேக ஜெட் விமான சேவை இங்கிலாந்தில் துவக்கப்பட்டது. இங்கிலாந்து, அமெரிக்க வீடுகளின் அறைகளுக்குள் தொலைக்காட்சி எனும் புதிய தொழில்நுட்பம் பேசத் துவங்கியிருந்தது. அமெரிக்கா, ரசியாவிற்கு அடுத்த நாடாக பிரிட்டன் அணு வெடிப்புச் சோதனை நடத்தி அணு வல்லரசாக அறிவித்துக் கொண்டது. ஹைட்ரஜன் குண்டுகளும் சோதனைக்காக வெடிக்கப்பட்டன. சோவியத் யூனியனிடம் அணுகுண்டு அறிவியலின் நுட்பங்களை அளித்தார்கள் என்று அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் சில அறிவியலாளர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.
உலகப் போர் முடிந்த இடத்தில் அமெரிக்காவுக்கும், ரசியாவுக்குமான பனிப்போர் எனப்படும் கெடுபிடிப் போர். அந்த வகையில் உலகப்போரின் அச்சத்திலேயே தொடர்ந்து இருக்க மக்களிடம் அடுத்த வில்லன் சோவியத் யூனியன்தான் என்று மேற்குலகங்கள் பிரச்சாரத்தை கட்டியமைத்தன. இங்கிலாந்தின் காலனிய ஆதிக்கம் அரசியல் ரீதியில் பின்னடைவைச் சந்தித்திருந்த நேரம் அது. கூடவே தொழில்நுட்பப் புரட்சியின் சாதனைகள், புதிய வாழ்க்கை என்ற இந்த சமூக உளவியலின் பின்னணியில்தான் ஜேம்ஸ்பாண்ட் நாவல்களை ஃபிளமிங் எழுதுகிறார்.

ஜேம்ஸ்-பாண்ட்••

யூ ஒன்லி லிவ் டுவைஸ் படத்துக்கான 'ஸ்பெக்டர் ' செட்
நாயகனின் சாகசங்களை சென்டிமெண்டாக உணர்த்துவதற்கு வில்லன்கள் அவசியம். ஒரு குடும்ப நாயகனின் எழுச்சிக்கு ஒரு தெருவோர ரவுடி போதும். அவனே உலக நாயகனாக இருந்தால் வில்லனும் உலக ரவுடியாக இருக்க வேண்டியிருக்கிறது. எம்.ஜி.ஆர் படங்களில் வாய் கூவிச் சிரிக்கும் நம்பியாரும், வீரப்பாவும் போதுமானவர்கள் என்றால் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அவன் நவீன தொழில்நுட்பத்தில் மேதையாகவும், அவனது களம் முழு உலகைக் கைப்பற்றுவதாகவும் இருக்கிறது. நிஜ வாழ்வின் பொதுப்புத்தியில் சோவியத் யூனியனும், அதன் உளவுத் துறையான கே.ஜி.பியும்தான் மாபெரும் வில்லன்கள் என்று சித்தரித்து விட்ட பிறகு, அதையே கதையில் கொண்டுவரும் போது ஒரு நம்பகத்தன்மை வந்து விடுகின்றது.
அந்த வில்லனின் ஹைடெக் சமாச்சாரங்களின் சாத்தியங்களை அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி கொண்டு வரும்போது மசாலா படங்களின் ரிச்சான காட்சிகளுக்கு வழி பிறந்து விடுகின்றது. எனினும் ஃபிளமிங் அவரது நாவல்களில் சோவியத் யூனியனை வில்லனாகவும், உலக அமைதிக்கு எதிராகவும் காட்டியது போல் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நேரடியாகக் காட்டவில்லை. அப்போது உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் கம்யூனிசம் செல்வாக்காக இருந்த காரணத்தாலும், பனிப்போர் விரைவில் முடிந்து விடும் என்று ஃபிளமிங் நம்பியதாலும் உருவாக்கப்பட்ட கற்பனை வில்லன்தான் ஸ்பெக்டர் இயக்கம்.
SPECTRE (SPecial Executive for Counter&intelligence, Terrorism, Revenge and Extortion)  ஸ்பெக்டர் இயக்கத்திற்கு நாடோ, அரசியலோ, கொள்கையோ இல்லை என்று சொன்னாலும் இது உலகளாவிய மேலாதிக்கத்தை இலக்காகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத இயக்கமாகும். ஆனால் மறைமுகமாக இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஹிட்லரின் இரகசிய போலீசான கெஸ்டபோ, ரசிய கே.ஜி.பியின் ஸ்மெர்ஷ், யூகஸ்லோவேகியாவின் இரகசிய போலிசு, இத்தாலியின் மாஃபியா, பிரான்சின் நிழல் இயக்கமான யூனிஒன் கோர்ஸ் ஆகிய இயக்கங்களைச் சேர்ந்தவர்களாவார்கள்.
பின்னர் இந்த ஸ்பெக்டர் இயக்கத்தை ரசியா, சீனா முதலான பொதுவுடமை நாடுகள் மேற்குலக நாடுகளை வீழ்த்துவதற்குப் பயன்படுத்தியதாக படத்தில் மாற்றினார்கள்.
ஃபிளமிங் மட்டுமல்ல, அன்றைய நாவல் எழுத்தாளர்கள் பலரும் சோவியத் யூனியன், சீனா, கியூபா, கிழக்கு ஐரோப்பா பின்னர் வட கொரியாவையும் வில்லன்களாக வைத்துக் கதைகளை எழுதினார்கள். அதற்காகவே அவர்களில் சிலருக்கு நோபல் பரிசும் தரப்பட்டிருக்கின்றது. பின்னர் 1990களில் இங்கிலாந்தில் வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பில் இவர்களில் பலர் எம்.16 உளவுத் துறையின் நிதிப் பராமரிப்பில் வாழ்ந்தவர்கள் என்ற உண்மை உலகிற்கு தெரிய வந்தது.

ஜேம்ஸ்-பாண்ட்••

முதல் படமான டாக்டர் நோவின் கதை என்ன? ஜமைக்காவில் ஒரு எம்.16 இன் உளவாளி கொல்லப்பட, அதை விசாரிப்பதற்காக ஜேம்ஸபாண்ட் அங்கு செல்கிறான். அதன் போக்கில் டாக்டர் நோ எனும் ஸ்பெக்டரால் நியமிக்கப்பட்ட வில்லன் ரேடியோ ஜாமரை வைத்து அமெரிக்க ராக்கெட்டுகளை முடக்கும் சதியை அரங்கேற்ற நினைக்கிறான். இவனை சோவியத் யூனியன் பயன்படுத்திக் கொள்ள முனைகின்றது. பிறகு அமெரிக்க சி.ஐ.ஏ உதவியுடன் பாண்ட் டாக்டர் நோவை கொல்கிறான்.
இங்கிலாந்தின் மகத்துவத்தை முன்வைத்து புனையப்பட்ட ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்தை ஆரம்பத்தில் ஹாலிவுட் ஏற்கவில்லை என்றாலும், பின்னர் நிஜ உலகில் அமெரிக்காவின் செல்வாக்கை உணர்ந்த பாண்ட் படைப்பாளிகள் கதைகளில் அமெரிக்காவின் முக்கியத்துவத்தைக் கொண்டு வந்தனர். இது முதல் படத்தில் மட்டுமல்ல, பின்னர் வந்த பல படங்களிலும் தொடர்கின்றது. ஜேம்ஸ்பாண்டின் உலகளாவிய, குறிப்பாக அமெரிக்க வசூலுக்கும் அது தேவையாக இருந்தது. அது போல அமெரிக்காவின் சமீபத்திய ஆக்கிரமிப்புப் போர் வரையிலும் இங்கிலாந்துதான் முக்கியமான நேச சக்தி என்பதையும் இங்கே பொருத்திப் பார்க்கலாம்.
முதல் படத்திலேயே பெண்களோடு குத்தாட்டம் போட்டு, நேர்ப்படுபவனையெல்லாம் சுட்டுக் கொல்லும் பாண்டின் செக்ஸ் மற்றும் வன்முறை குறித்து வாத்திகன் கண்டனம் தெரிவித்தது. ஆனால் இரண்டாம் உலகப் போர் காலத்திலேயே ஹிட்லரை, போப் இரண்டாம் பயஸ் ஆதரித்திருப்பது இங்கே நினைவு கூறத்தக்கது. சமீபத்தில் பாதிரிகளின் செக்ஸ் ஸ்கேண்டல்கள் உலகம் முழுவதும் தலைவிரித்தாடி சிலவற்றில் போப் ஆண்டவரே மன்னிப்பு கேட்டதைப் பார்த்தால் அந்த கண்டனத்திற்கு வரலாற்றுச் சிறப்பேதுமில்லை.
இந்தப் படத்தில் பாண்டின் நட்புப் பெண் பிகினி உடையில் வரும் காட்சி பின்னர் வந்த படங்களுக்கு முன்னோடியாக அமைகிறது. அந்த உடையும் கூட 2001 ஆம் ஆண்டு முப்பது இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போயிருக்கின்றது. படத்தில் மோன்டி நார்மனின் தீம் மியூசிக், வில்லன் ஆய்வுக்கூடம், பாண்டின் கவர்ச்சி உடை நாயகிகள் எனப்படும் பாண்ட் பட குறியீடுகள் உருப்பெருகின்றன. படத்தயாரிப்பை விட ஆறு மடங்கு வசூலை அள்ளிக் குவித்தபடியால் அடுத்த பாண்ட் படங்கள் இன்னும் அதிக செலவுடன் தயாரிக்கப்பட்டன.
மூன்றாவது படமான கோல்டு ஃபிங்கரில், தங்க முதலாளி ஆரிக் கோல்டு ஃபிங்கர் அமெரிக்கக் கருவூலத்தைத் தாக்கிக் கைப்பற்ற முயல்கிறான். அதற்கு சீனத்து அணுகுண்டையும் பயன்படுத்த முனைகின்றான். பின்னர் பாண்ட் இதை முறியடிக்கிறான். அப்போது தங்கம் சர்வதேச பண மதிப்பின் அளவுகோலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. எழுபதுகளின் இறுதியில் வந்த மூன் ரேக்கர் படம் ஸ்டார் வார்ஸ் படத்தின் போட்டிக்காகவும், அமெரிக்கா, ரசியா ஈடுபட்டிருந்த நட்சத்திர சண்டை காரணமாகவும் வெளி வந்தது. இப்படி நிகழுலக அரசியல் போக்குகளெல்லாம் பாண்ட் படங்களில் மலிவாகப் பயன்படுத்தப்பட்டன.
ஐந்தாவது படமான யு ஒன்லி லிவ் டுவைஸ் படத்தை இங்கிலாந்து ராணி எலிசபெத், பிரீமியர் காட்சியாகவே பார்க்கிறார். கொல்லப்பட்ட அமெரிக்க  அதிபர் கென்னடியும் பாண்ட் நாவல்கள், படங்களின் விசிறிதான். அவருக்கு பிடித்த படம் ஃபிரம் ரசியா வித் லவ். இப்படி பாண்ட் படங்கள் உலகெங்கும் மேற்குலகின் சாகச நாயகனாக வலம் வந்த போது அப்படி முயன்று வந்த அரசுகள், அதிபர்கள் இதை ஆரவாரத்துடன் ஆதரித்தது அதிசயமில்லை.
பதினான்காவது படமான எ வியூ டு எ கில் படத்தில் வில்லன் ரசிய உதவியுடன் கலிபோர்னியாவின் சிலிக்கான் வேலியை தகர்க்க முனைவதை பாண்ட் முறியடிக்கிறான்.
பதினேழாவது படமான கோல்டன் ஐ வெளிவரும் போது கோர்பச்சேவின் காலத்தில் ரசிய சமூக ஏகாதிபத்தியம் தனது வேடத்தைக் கலைத்து விட்டு முழு முதலாளித்துவ அரசாக அறிவித்துக் கொள்கிறது. விடுவார்களா, இந்தப் படத்தின் டைட்டில் காட்சியில் கம்யூனிச சின்னங்கள் அரிவாள் சுத்தியல், லெனின் சிலைகளெல்லாம் தகர்ப்படுகின்ற பின்னணியில் நடன மங்கைகள் ஆடுகிறார்கள். பெர்லின் சுவர் இடிப்பு, லெனின் சிலை இடிப்பு என்று ஏகாதிபத்திய உலகமே கொண்டாடிய போது ஜேம்ஸ்பாண்ட் மட்டும் கொண்டாடாமல் இருப்பானா என்ன?
ஜேம்ஸ்-பாண்ட்
ஆனால் இந்தக் கொண்டாட்டம் பத்து ஆண்டுகள் கூட நீடிக்க முடியவில்லை. கம்யூனிச நாடுகள் வீழ்ந்தாலும், முதலாளித்துவ நாடுகள் ஒன்றும் பூவுலகில் சொர்க்கத்தை படைக்க முடியவில்லை என்பதோடு நரக வாழ்க்கையை விஸ்தரித்து வந்த நேரம். பல நாடுகளில் வெடித்த பொருளாதாரப் பிரச்சினைகள் மேற்குலகின் மெக்காவான அமெரிக்காவிலேயே ஆட்டம் போட்ட போது ஜேம்ஸ்பாண்டும் நிறைய தடுமாறுகிறான்.

••

முதலாளித்துவத்தைக் காப்பாற்ற அவதரித்த பாண்ட் இப்போது முதலாளிகளை வேட்டையாடுகிறான்
2006 இல் வெளிவந்த கேசினோ ராயல், 2008இல் வெளிவந்த குவாண்டம் ஆஃப் சோலஸ் எனும் இரண்டு தொடர் வரிசை ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வழக்கமான பாண்ட் பாணியிலிருந்து நிறைய வேறுபடுகின்றன. இந்த படங்களில் ஒரு புது வில்லன் இயக்கம், குவாண்டம் என்ற பெயரில் வருகிறது. இவர்கள் யார்? பன்னாட்டு முதலாளிகள், அமெரிக்க, இங்கிலாந்து அரசுகளோடு தொடர்புடையவர்கள், இசுரேலின் மொசாட்டில் உள்ளவர்கள் என்று ஜேம்ஸ்பாண்ட் எந்த முதலாளித்துவ உலகைக் காப்பாற்ற இத்தனை காலம் போராடினானோ அந்த உலகத்தின் சூத்திரதாரிகளே வில்லன்களாக மாறுகிறார்கள்.
கேசினோ ராயலில் இரகசியமாக போராளிக் குழுக்களின் நடவடிக்கைகளுக்காக ஒரு நிதி நிறுவனத்தை நடத்துபவன் அந்தப் பணத்தை வைத்துப் பங்குச்சந்தையில் சூதாடுகிறான். அதில் பணத்தை இழந்து அதனை மீட்பதற்காக பில்லியனர்கள் விளையாடும் சீட்டு ஆட்டத்தில் ஈடுபடுகிறான். பாண்ட் அங்கு சென்று ஆட்டத்தில் சி.ஐ.ஏ பண உதவியுடன் வென்று வில்லனை அமெரிக்காவிடமே கையளிக்கிறான். ஆனால் வென்ற சூதாட்டப் பணத்தை அவனால் மீட்க முடியவில்லை. காதலியையும் இழக்கிறான். காதலியுடன் களித்திருக்கும் போது இனி இந்த பாண்ட் வேலையை செய்யவில்லை, வேறு ஏதாவது நல்ல வேலை செய்கிறேன் என்றும் கூறிவிட்டு இந்த உலகில் அப்படி ஒரு நல்ல வேலை இருக்கிறதா என்று கேட்கிறான். கூடவே எம்.16 உளவுத் துறையின் தலைவர் எம் க்கு ராஜினாமா செய்வதாக மின்னஞ்சல் செய்கிறான்.
ஆனாலும் காதலியின் கொலைக்காக அவனது வேலை அடுத்த படத்திலும் தொடர்கிறது. குவாண்டம் ஆஃப் சோலசில் வில்லன் தென்  அமெரிக்க நாடான பொலிவியாவில் குடிநீர் வளத்தை கைப்பற்றுவதற்கு முயல்கிறான். அதற்காக இருக்கும் அரசை கவிழத்துவிட்டு ஒரு ராணுவ தளபதியின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைக்கு உதவுகிறான். இவனுக்கு ஆதரவாக அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இங்கிலாந்து பிரதமரின் நெருங்கிய நண்பர், மொசாட்டில் பணியாற்றி பின்னர் தொலைத்தொடர்பு நிறுவனம் நடத்தும் முதலாளி என்று பலரும் பின்னணியில் இருக்கிறார்கள். இவர்கள்தான் குவாண்டம் எனப்படும்  அந்த இயக்கத்தின் அஸ்திவாரங்கள்.
பாண்ட் இவர்களை விரட்டியவாறு பொலிவியாவுக்கே சென்றாலும் அங்கு அவனால் ஒரு கட்டத்தில் அதிகாரப்பூர்வமாக ஈடுபட முடியவில்லை. எம்.16 உளவுத்துறையே அவனது கைகளைக் கட்டிப் போடுகின்றது. இடையில் அவன் தனது தலைவரின் சங்கேத வார்த்தையைத் திருடி அவர்களது இணைய தளத்தில் நுழைந்து தகவல்களைச் சேகரிக்கிறான். தலைவரது வீட்டிற்கு அவனாகவே நுழைந்து பேசுகிறான். உளவுத்துறை தலைவர் எம் முன்னால் விறைப்புடன் ஒரு இராணுவ வீரன் போல அடிமையாக கிடக்கும் முந்தைய பாண்ட் படங்களிலிருந்து இவன் வேறுபடுகிறான்.
ஜேம்ஸ் பாண்ட்எம்.16 உளவுத் துறையிலும் கூட குவாண்டத்தின் நபர்கள் புகுந்து விடுகிறார்கள். எம் இன் பாதுகாவலராக இருக்கும் ஒருவனே வில்லனது கையாள் என்பதையெல்லாம் அவர்களாலேயே நம்ப முடியவில்லை. இறுதியில் தனது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி தலைவர் எம் இன் ஆதரவோடு மட்டும் பொலிவியாவில் அந்த வில்லனைக் கொல்கிறான். இறுதியில் வில்லனுக்கு ஆதரவாக இருந்த சி.ஐ.ஏ தலைவர், மற்றும் இங்கிலாந்து பிரதமரின் ஆதரவாளரெல்லாம் மாற்றப்படுகிறார்கள். அது இன்னமும் அந்த முதலாளித்துவ உலகத்தை காப்பாற்றத் துடிக்கும் பாண்டின் இலட்சியத்திற்காகச் சொல்லப்பட்ட புனைவுதான்.
ஆனாலும் புனைவில் உதித்த இந்த முதலாளித்துவ நாயகன் இனி முழுக்க முழுக்க புனைவையே நம்பி வாழ முடியாது. வால் வீதியில் ‘நாங்கள்தான் 99%‘ என்று முழங்கும் சராசரி அமெரிக்க மக்களின் அரசியல் விழிப்புணர்வை இனியும் மடை மாற்ற முடியாது. அதன்படி இனி பாண்ட்டின் படங்களில் காட்டியே ஆக வேண்டிய வில்லனாக முதலாளித்துவமே விசுவரூபமெடுத்து நிற்கிறது.
இதுவரை ஜேம்ஸ் பாண்டாக நடித்த நடிகர்கள் - தானே வில்லனான பிறகு யாரைச் சுடுவார்கள்?
சாகசங்களை விசுவரூப தரிசனமாகக் காட்டித்தான் இது வரை ஜேம்ஸ்பாண்ட் படங்கள் உலகை வலம் வந்தன. இனியும் வரும். ஆனால் ஜேம்ஸ்பாண்ட் இனி யாருக்காக உழைக்க முடியும் என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. அதன்படி அவனது நாயகப் பண்புகள் மறைந்து அவனே ஒரு வில்லன் போல தோற்றமளிக்க வேண்டியிருக்கிறது. அது ஒரு நிறுவனத்தை எதிர்க்கும் கலகமாக மாற்றப்பட்டு அவனது பாத்திரம் காப்பாற்றப்படலாம். ஆனால் அதற்கு விலையாகப் பன்னாட்டு நிறுவனங்களையே வில்லனாகக் காட்டும் நிலையில் பாண்டின் படைப்பாளிகள் இருக்கிறார்கள்.
இரண்டில் ஒன்றைப் பலிகொடுக்க வேண்டிய நிலையில் இனி ஜேம்ஸ்பாண்டின் படங்கள் எப்படி இருக்கும்? வழக்கம் போல மசாலா காட்சிகள், பிகினி நாயகிகள் எல்லாம் இருந்தே தீரும். ஆனால் மேற்குலக மக்களின் உணர்வை இனியும் மறைக்க முடியாது என்ற நிலையில் ஜேம்ஸ்பாண்ட் ஒரு பெரும் குழப்பத்தில் நிற்கிறான். அவனது குழப்பத்தை நீக்கி நல்வழிப்படுத்தும் தகுதியை அமெரிக்காவோ, இங்கிலாந்தோ இழந்து விட்டது.
ஆனாலும் அவன் இன்னமும் ஏகாதிபத்தியத்தின் அடியாள்தான். என்றாலும் இந்த அடியாள் இனி நாயகனாக வேடம் கட்டினாலும் நிஜ உலகைப் பொறுத்த வரை அவன் வில்லன்.

கருத்துகள் இல்லை: